திரைக்குப் பின்னால்:அனுபவமே ஆசான்

திரைக்குப் பின்னால்:அனுபவமே ஆசான்
Updated on
1 min read

திரைப்படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளர் பணி என்பது சவால் நிறைந்தது. தயாரிப்பின் ஒவ்வொரு பிரிவையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டியவர்கள் இவர்கள். திரைப்படம் குறித்து எதுவுமே தெரியாத குடும்பத்தில் இருந்து வந்து, இன்று தேர்ந்த நிர்வாகத் தயாரிப்பாளராக தன்னை நிரூபித்துவருகிறார் அதிதி. தற்போது ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் மிகப் பெரிய பொருட்செலவில் தயாரித்துவரும் ‘சங்கமித்ரா’ படத்தில் பணிபுரிந்துவருகிறார்.

நிர்வாகத் தயாரிப்பாளர் பணி?

சினிமா என்பது ஒரு கூட்டு வேலை. அந்த வேலையைச் சரியாகச் செய்து, கொடுக்கப்பட்ட தொகைக்குள் செய்து முடிக்க வேண்டும் என்பதுதான் நிர்வாகத் தயாரிப்பாளரின் வேலை. தயாரிப்பாளர் இடத்தில் நின்று, படக் குழுவினரிடம் பேசி வேலைகளை முடிக்க வேண்டும்.

கற்றுக்கொண்டவை?

இந்தத் துறைக்கென படிப்புகள் உண்டு. அனுபவமும் சிறந்த ஆசான். ‘எந்திரன்’ படத்தில் பணியாற்றும்போது நிறைய கற்றுக் கொண்டேன். ஒவ்வொரு நாளும் புது அனுபவமாக இருக்கும். அப்போது சமூக விளம்பரங்கள் பரவலாக அறியப்படவில்லை. தொலைக்காட்சி, ரேடியோ மட்டும்தான். அவற்றில் எப்படிப் புதுமையாக விளம்பரப்படுத்தி மக்களைக் கவர முடியும் என்று சிந்தித்துப் பணியாற்றினோம்.

பெரிய நடிகர்களோடு வேலை பார்க்கும் அனுபவம்?

ஒரு நல்ல விஷயத்தை எடுத்துச் சொன்னால் அனைவருமே ஏற்றுக் கொள்வார்கள். சினிமா என்பது கூட்டு முயற்சி. இதில் பலர் இணைந்து பணியாற்றுகிறோம். இயக்குநர், நடிகர்களோடு மட்டும் சினிமா முடிந்துவிடுவதில்லை. பலருடைய உழைப்பும் அதில் இருக்கிறது. ஹீரோ, டைரக்டர் போன்றவர்களிடம் ஒரு விஷயத்தை எப்படிச் சொல்ல வேண்டும் என்று முறை இருக்கிறது. நாம் தொடர்புகொள்ளும் விதத்தில் கொஞ்சம் பிசகு இருந்தாலும் எல்லாமே மாறிவிடும்.

சவாலை எப்படிச் சமாளிக்கிறீர்கள்?

சில சமயம் 24 மணி நேரமும் வேலை இருக்கும். சில சமயம் வேலையே இருக்காது. ஒரு வேலைக்குள் வந்துவிட்டால், நேரத்தைப் பற்றியெல்லாம் கவலைப்படக் கூடாது. இந்தத் துறைக்கு சமயோசிதம் முக்கியம். நாம் ஒன்று திட்டமிட, அதற்குக் கொஞ்சமும் தொடர்பில்லாதவை நடந்துவிடும். அந்த நேரத்துக்குத் தகுந்தாற்போல் உடனே முடிவெடுக்க வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in