

வித்தியாசமான சுவையுடைய லீக்ஸ், கீரைத்தண்டை ஒத்த வெங்காயத்தாளைப் போன்றது. இரு பருவத் தாவரமான லீக்ஸ், உயரமான, ஒடுங்கிய, மென்மையான இலைகள் கொண்ட தாவர வகையாகும். ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஆசிய நாடுகளில் சமையல் காயாகப் பயன்படுத்தப்படுகிறது. இது அல்லியம் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. வெங்காயம், பூண்டு போன்றவை இதன் சகாக்கள்.
லீக்ஸ் தரும் ஆரோக்கியம்
* உடலுக்கு நன்மையைத் தரும் ப்ளாவோநாய்ட் ஆண்டி ஆக்சிடன்ட் பொருட்களும், தாதுச் சத்து மற்றும் வைட்டமின் வளமும் கொண்டது.
* லீக்ஸை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். கலோரி அதிகம் ஏறாது. 100 கிராம் தண்டுகளைச் சாப்பிட்டால் 61 கலோரி கூடும். அத்துடன் லீக்ஸின் தண்டு, நார்ச்சத்துகளை அதிகம் தன்னகத்தே கொண்டது.
* பூண்டைவிட தியோ-சல்பினைட்களைக் குறைவாகவே கொண்டி ருந்தாலும், போதுமான அளவு ஆண்டி ஆக்சிடன்ட் பொருட்களான டையாலில் தைசல்பைட், டயாலில் ட்ரைசல்ஃபைட் மற்றும் அலில் ப்ரொபைல் டிசல்ஃபைட் ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது.
* லீக்ஸில் உள்ள அல்லிசின் பொருள், கொழுப்பு உற்பத்தியைக் குறைக்கிறது. அத்துடன் பாக்டீரியா, வைரஸ் மற்றும் பூஞ்சைக் காளான் பாதிக்காமல் பாதுகாக்கிறது.
* லீக்ஸ், நைட்ரிக் ஆக்சைடை வெளியிடுவதன் மூலம் ரத்தத் தமனிகளை லகுவாக்குகிறது. அத்துடன் ரத்தத் தமனிகளில் ப்ளேட்லெட்கள் உறையாமல் பாதுகாக்கிறது. இதனால் இதயத் தமனியில் ஏற்படும் பிரச்சினைகளைத் தடுக்கிறது.
* உடல் பலமாக இருப்பதற்கு உதவும் தாதுச்சத்தும், வைட்டமின் களும் லீக்ஸில் அபாரமாக உள்ளன. உயிராற்றலைப் பெருக்கும் வைட்டமின்களான பைரிடாக்சின், போலிக் அமிலம், நியாசின், ரிபோஃபிளேவின் மற்றும் தயமின் பொருட்கள் அதிகம் உள்ள தாவரம் இது. போலிக் அமிலம், டி.என்.ஏவின் செயல்முறைகளுக்கு உதவியாக உள்ளது. கர்ப்பமான பெண்கள் லீக்ஸை அடிக்கடி சாப்பிட்டுவந்தால், சிசுவின் நரம்பு மண்டலம் வலுப்பெறும்.