

ஆடை வடிவமைப்புக்குச் சவால் விடுகிற படங்கள், நிரஞ்சனாவுக்குத் தனி அடையாளத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. ‘வாயை மூடி பேசவும்’, ‘சிகரம் தொடு’, ‘காவியத் தலைவன்’ போன்ற படங்களில் ஆடை வடிவமைப்பாளராகப் பணியாற்றிய நிரஞ்சனா, அடுத்து வரும் சவால்களுக்கும் தயாராக இருக்கிறார்.
ஆடை வடிவமைப்பாளர் துறைக்குள் எப்படி வந்தீர்கள்?
முதலில் தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகப் பணியாற்றினேன். அப்போது உடைகளைத் தேர்வு செய்வதில்தான் நிறையப் பிரச்சினைகள் வரும். திடீரென்று நாங்களே ஆடை வடிவமைப்பாளராகக் களமிறங்கி உடைகளைத் தேர்வு செய்வோம். அப்படித்தான் எனக்கு இந்தத் துறையில் ஆர்வம் வந்தது. ஒரு கட்டத்தில் இதை எப்படிச் செய்கிறார்கள் என்று தெரிந்துகொள்வதற்காகவே களமிறங்கினேன்.
‘கற்றது களவு’ படத்துக்குப் பிறகு ஏன் நீண்ட இடைவெளி?
ஆடை வடிவமைப்பாளராக எனது முதல் படம் ‘கற்றது களவு’. இயக்குநர் அகத்தியனின் மகள் என்பதால் என்னை நிறையப் பேருக்குத் தெரியும். ஆடை வடிவமைப்பாளராக முதல் படத்தில் பணிபுரியும்போது எனக்கு ஒன்றும் பிடிபடவில்லை. யாராவது கேள்வி கேட்டால் பதில் சொல்ல வேண்டும் என்பதற்காகக் கற்றுக்கொள்ளத் தீர்மானித்தேன். நிறைய வாய்ப்புகள் வந்தாலும் மறுத்துவிட்டு, டிசைனர் நளினி ராமிடம் சேர்ந்து மூன்று ஆண்டுகள் பணியாற்றினேன். இல்லை, கற்றுக்கொண்டேன். அதற்குப் பிறகு ‘சிகரம் தொடு’ என் முதல் படம். நான் பணியாற்றியதில் முக்கியமான படம் ‘காவியத் தலைவன்’.
காவியத் தலைவன் படத்துக்கு ஆடை வடிவமைப்பு மிகவும் சிரமமாக இருந்திருக்குமே?
ஆமாம். மிகவும் கடினமான படம் அது. என் மீது முழு நம்பிக்கை வைத்து வசந்தபாலன் வாய்ப்பு கொடுத்தார். ஒரு பாடல் மட்டும் கொடுத்து, பணியாற்றிவிட்டு வாருங்கள் என்றார். அப்போது அப்பா ரொம்ப உதவியாக இருந்தார். பழைய காலத்தில் எப்படியெல்லாம் இருந்தார்கள் என்று நூலகத்திலிருந்து புத்தகங்கள் எடுத்துவருவது உள்ளிட்ட பல விஷயங்களை எனக்காகச் செய்தார். இந்தப் படத்துக்காக இரண்டு விருதுகளும் கிடைத்தன.
கபாலி படத்தின் ஆடை வடிவமைப்பு பற்றிச் சொல்லுங்கள்?
‘கபாலி’ படத்துக்காக மலேசியா சென்று, அங்கு எப்படியெல்லாம் உடைகள் அணிகிறார்கள் என்று பார்த்து வடிவமைத்தேன். அந்தப் படத்தில் ரஜினி சாரின் உடைகள் தவிர்த்து, மற்றவர்களுக்கு நான்தான் ஆடை வடிவமைப்பு செய்தேன். பல்வேறு காலங்களில் கதை நகரும் என்பதால் மிகவும் சவாலாக இருந்தது. கபாலியில் என் பணிக்காக விருது கொடுத்தார்கள்.
ஆடை வடிவமைப்பாளர்களிடம் போட்டி இருக்கிறதா?
போட்டி நிறைய இருக்கிறதே என்று நான் நினைப்பதே கிடையாது. என் வேலையை நான் பார்க்கிறேன். வாய்ப்பு கிடைக்கிற படங்கள் அனைத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைப்பதில்லை. சவாலான படங்களைத் தேர்வு செய்து பணியாற்றிவருகிறேன். அரசர் காலத்துப் படங்களில் பணியாற்ற வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. அதில்தான் நமது முழுத் திறமையையும் வெளிப்படுத்த முடியும். உடைகளை வாங்கிக் கொடுக்காமல், உருவாக்கிக் கொடுப்பதுதான் எனக்குப் பிடிக்கும். நாம் உருவாக்கிய உடையைத் திரையில் பார்க்கும்போது கிடைக்கிற உற்சாகமே தனி.