Last Updated : 11 Sep, 2016 11:41 AM

 

Published : 11 Sep 2016 11:41 AM
Last Updated : 11 Sep 2016 11:41 AM

சிந்தனை: பெண் கல்வி என்னும் கானல் நீர்

பெண்கள் கல்வி அறிவு பெற்ற சமூகம் முன்னேறும். அங்கே ஆண் – பெண் சமத்துவம் உண்டாகும். வறுமை குறையும். கலாசார மாற்றங்கள் ஏற்படும். ஆரோக்கியம் பெருகும். ஆனால் நம் சமுதாயத்தில் கடந்த காலங்களில் பெண்களுக்கு மட்டுமில்லை, ஆண்களில் சில பிரிவினருக்கும் கல்வி மறுக்கப்பட்ட ஒன்றாகவே இருந்து வந்தது.

வீடு பெண்ணுக்கென்றும் வெளி உலகு ஆணுக்கென்றும் தீர்மானிக்கப்பட்ட ஆதி வேலைப் பிரிவினையிலேயே பெண் கல்விக்கான தடை ஆரம்பித்துவிட்டது. அது இன்றும் பெண்களை இறுக்கிப் பிடித்துக்கொண்டிருக்கிறது.

பெண் கல்விக்கான சிந்தனை

மகாத்மா ஜோதிபா புலே பெண் கல்வி குறித்து அதிகம் அக்கறைகொண்டவர். தமது மனைவி சாவித்ரி பாயைப் படிக்க வைத்தார். இந்தியாவின் முதல் பெண் ஆசிரியரான சாவித்ரி பாய், அனைத்துப் பெண்களும் படிக்க வேண்டும் என்பதற்காகப் பள்ளியை ஆரம்பித்தார்.

விடுதலைப் போராட்டத்தில்…

இந்திய விடுதலைப் போராட்ட முன்னோடிகளில் சிலர், நாட்டின் விடுதலைக்கும் சமூக விடுதலைக்கும் பெண் விடுதலைக்கும், பெண் கல்விக்கும் இடையே இருக்கும் சமன்பாட்டை அக்கறை யோடு ஆராய்ந்தனர். தன்னையும் தன்னைச் சுற்றியுள்ள சமூகத்தையும் பாதிப்பவை குறித்து பெண்ணே முடிவெடுக்கும் அறிவையும், சாத்தியப்பாட்டையும் கல்வி வசமாக்குகிறது போன்ற கருத்துகள் தலைவர்களால் எடுத்து வைக்கப்பட்டன. கல்வி அறிவும் விழிப்புணர்வும் பெற்ற பெண்களில் பலர், நாட்டின் விடுதலைப் போராட்டத்துக்குத் தங்களை முழுமையாக ஒப்படைத்துக்கொண்டனர்.

சுதந்திர இந்தியாவின் அரசமைவுச் சட்ட வழிகாட்டு நெறிமுறையின் 45வது பிரிவு 14 வயதுக்குட்பட்டவர்களுக்குக் கட்டாய இலவசக் கல்வியைத் தர அனைத்து மாநிலங்களையும் வலியுறுத்தி இருக்கிறது. அனைவருக்கும் கல்வி என்ற முழக்கம் பரவலாக்கப்பட்டது.

முன்னேற்றம் வந்துள்ளதா?

2011-ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தரும் அறிக்கையின்படி நகர்ப்புறத்திற்கும் கிராமப்புறத்திற்கும் இடையே கல்வியறிவில் இருக்கும் வேறுபாடு சிந்திக்க வைக்கிறது. குறிப்பாக நகர்ப்புறமானாலும் கிராமப்புறமானாலும் பெண் கல்வி பின்தங்கிய நிலையில் இருப்பதையே காட்டுகிறது. இங்கே கல்வியறிவு பெற்றவர்கள் என்பதற்குக் கையெழுத்துப் போடத் தெரிந்திருத்தலே போதுமானது. எழுபதாண்டு சுதந்திரத்திற்குப் பின் பெண் கல்விக்கு எதிரான சிந்தனைகள் ஓரளவு மாறியிருந்தாலும், வாய்ப்புகள் ஏற்படுத்தித் தருவதில் இருக்கும் குறைபாடுகளைச் சிந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

கிராமப்புறங்களில், பெண் கல்வியின் நிலை, சமூக அக்கறை கொண்டோருக்கு மன நிறைவைத் தருவதாக இல்லை. கடைக்கோடிச் சிறுமிக்கும் கல்வி கொண்டு சேர்க்கப்படுவதில்தான் அரசின் கரிசனமும் நிர்வாகத் திறமையும் வெளிப்படும். கல்வியின் தேவை குறித்து பெற்றோர்கள் உணர்ந்தால்தான் தங்கள் குழந்தைகளுக்குக் கல்வியைத் தருவது, அரசின் கடமை மட்டுமல்ல, தங்கள் கடமையும்கூட என்பதைப் புரிந்துகொண்டு செயல்படுவார்கள்.

பெண் கல்வியின் நோக்கம், படித்த பெண்களிடையேயாவது நிறைவேறியிருக்கிறதா?

1. பெண் குறித்த சமூகத்தின் கோணல் பார்வை மாறியிருக்கிறதா?

2. பாலியில் பாகுபாடுகள் ஒழிக்கப்பட்டுவிட்டனவா?

3. பெண்களுக்கு எதிராகப் பெருகி வரும் வன்முறைகளிலிருந்து படித்த பெண்களுக்காவது பாதுகாப்பு கிடைத்திருக்கிறதா?

4. குடும்பத்தில், சமூக, அரசியல், பொருளாதார தளங்களில் படித்த பெண்கள் தங்களுக்கு உரிய பங்கையும் முக்கியத்துவத்தையும் அங்கீகாரத்தையும் சமத்துவத்தையும் பெற முடிகிறதா?

இந்தக் கேள்விகளுக்கு நம் பதில் ‘இல்லை’ என்பதாகவே இருக்கும் என்றால், நம் பாடத் திட்டங்களும் கல்வி முறைகளும் பரிசீலிக்கப்பட வேண்டியவையே. நம் பாடப் புத்தகங்கள் செய்திகளைத் தருகின்றன, சிந்தனைகளை விதைப்பதில்லை. மானுட விழுமியங்களும் மாண்புகளும் வகுப்பறைகளில் பேசப்படுவதில்லை.

ஆண் பெண் சமத்துவம், அனைவருக்கும் பொதுவான மனிதநேயம், மனித உரிமைகள்,மேடைப் பேச்சுகளே அன்றி பள்ளிப் பாடங்களாக ஆக்கப்படவில்லை.

‘அல்ல’, ‘இல்லை’ என்பவற்றை ‘ஆம்’, ‘உண்டு’ என்று மாற்றுவதே கல்வியாளர்களின் பணியாக இருக்க வேண்டும்.

கட்டுரையாளர்: பேராசிரியர்; தலைவர்,
தமிழ்நாடு மக்கள் சிவில் உரிமைக் கழகம்.
தொடர்புக்கு: prof.saraswathi@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x