முகங்கள்: பெண்களின் வேலை என்று எதுவுமில்லை!

முகங்கள்: பெண்களின் வேலை என்று எதுவுமில்லை!
Updated on
2 min read

படிப்போ சுய சம்பாத்தியமோ இல்லாமல் கணவரையே முழுக்க முழுக்க நம்பி வாழும் பெண்கள், திடீரென்று கணவரை இழக்க நேரிட்டால் நிலைகுலைந்து போய்விடுகிறார்கள். அப்படிப்பட்ட பெண்களில் ஒருவரான ஜெயலட்சுமி, வாகனம் பழுது பார்க்கும் கடையில் வாட்சர் சர்வீஸ் வேலை செய்து வறுமையை விரட்டி, தன்னையும் தன் குழந்தைகளையும் காப்பாற்றிக்கொண்டிருக்கிறார்.

சிதம்பரம் அருகே உள்ள சிவபுரி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயலட்சுமி. எட்டாம் வகுப்புவரை படித்திருக்கிறார். தமிழ், ஆங்கிலம் இரண்டும் ஓரளவுக்கு வாசிக்கத் தெரியும். வெளியுலகமே தெரியாமல் வளர்ந்தவரை, ராமகிருஷ்ணனுக்குத் திருமணம் செய்துவைத்திருக்கிறார்கள். ராமகிருஷ்ணன் பூ வியாபாரி.

“எங்களுக்கு நாலு குழந்தைங்க பொறந்துச்சு. 14 ஆண்டுகளுக்கு முன் என் கணவர் இறந்துவிட்டார். அடுத்தடுத்து இரண்டு மகன்களையும் பறிகொடுத்தேன். வாழ்க்கையில் மிகக் கொடுமையான காலகட்டம். மனம் நிறைய துக்கத்தோடு இருந்தாலும் வீட்டில் முடங்கிக் கிடக்க முடியாத சூழல். இரண்டு பிள்ளைகளைக் காப்பாற்ற வேண்டுமே. கிடைக்கும் சின்னச் சின்ன வேலைகளைச் செய்துவந்தேன். என் சம்பாத்தியத்தால் மூன்று பேர் சாப்பிட முடியவில்லை” என்று சொல்லும் ஜெயலட்சுமி ஒரு மகனை வாகனம் பழுது பார்க்கும் கடையில் வேலைக்குச் சேர்த்துவிட்டார்.

“அவன் புத்திசாலி. வேகமாகத் தொழிலைக் கத்துக்கிட்டான். எங்க வீட்டிலேயே தனியாகக் கடை வைத்தான். ஓரளவு வறுமை நீங்கியது. என் மகளுக்கும் திருமணம் ஆனது. நான் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் என் மகனின் வேலைகளைக் கவனிப்பேன். பட்ட காலிலேயே படும்னு சொல்லுவாங்க. என்னையும் அப்படித்தான் துக்கம் துரத்தி துரத்தி அடிக்குது. ஒரு வண்டிக்கு வாட்டர் சர்வீஸ் செய்துகிட்டு இருக்கும்போது என் மகன் ஷாக் அடிச்சி இறந்துட்டான். மீண்டும் வாழ்கையில் சூறாவளி. என்னைத் தேற்றவோ, காப்பாற்றவோ யாருமில்லை. நானே கொஞ்சம் கொஞ்சமாக என்னைத் தேற்றிக்கொண்டேன்” என்று சொல்லும் ஜெயலட்சுமி, தன் மகன் விட்டுச் சென்ற வேலையைத் தொடர முடிவெடுத்தார். மகன் செய்த வேலைகளைப் பார்த்திருந்த அனுபவத்தில் அவராகவே வாகனங்களைக் கழுவும் வேலையைச் செய்துபார்த்தார். சில நாட்களில் அந்த வேலை அவருக்குப் பழக்கமாகிவிட்டது.

கடந்த நான்கு வருடங்களாக இருசக்கர வாகனங்களுக்கு வாட்டர் வாஷ் செய்துவருகிறார். அவர் வசிக்கும் பகுதியில் உள்ள டூவீலர் மெக்கானிக்குகள் பலர் அவரது மகனுக்கு அறிமுகமானவர்கள். அதனால், வாட்டர் சர்வீஸ் செய்ய ஜெயலட்சுமியின் கடைக்கு வண்டிகளை அனுப்புகிறார்கள். அவர்களைப் பார்த்து மற்றவர்களும் வாட்டர் வாஷ் செய்து தருமாறு கேட்கிறார்கள். தற்போது ஒரு மெக்கானிக்கை வேலைக்கு வைத்து, டூவீலர் வொர்க் ஷாப்பை நிர்வகித்துவருகிறார் ஜெயலட்சுமி.

“இந்தக் காலத்துல பெண்கள் படிக்கிறதுக்கு நிறைய வாய்ப்பு இருக்கு. அவர்கள் படித்த படிப்புக்கு ஏற்ற வேலை கிடைப்பதில்லை. வாழ்க்கையும் ஒரே மாதிரி போய்க்கொண்டிருப்பதில்லை. திடீரென்று ஏற்படும் பிரச்சினைகளைச் சமாளித்து, வாழ்க்கையைத் தொடர பெண்களும் சம்பாதிக்க வேண்டியது அவசியம். ஆண்கள் செய்யும் வேலை,பெண்கள் செய்யும் வேலை என்ற வித்தியாசம் இல்லாமல் ஏதாவது ஒரு கைத்தொழிலைக் கண்டிப்பாகக் கற்றுக்கொள்ள வேண்டும். அதுதான் கணவன் இருந்தாலும் குடும்பத்துக்கு உதவியாக இருக்கும்; கணவன் மறைந்தாலும் வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்கும்” என்று தன் அனுபவத்தில் சொல்கிறார் ஜெயலட்சுமி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in