

இயற்கையை ரசிக்காதவர்கள் குறைவு. ஆனால் நாம் யாருமே எதிர்பார்க்க முடியாத அளவுக்கு இயற்கை மீது அன்பு செலுத்தி வருகிறார் சாரா மார்க்விஸ். எப்படி? உலகம் முழுவதும் ஆண்டுக் கணக்கில் பல்லாயிரம் கிலோ மீட்டர்கள் தன்னந்தனியாக நடந்துகொண்டே இருக்கிறார்! 2014-ம் ஆண்டுக்கான நேஷனல் ஜியாகிரபிக் சேனலின் அட்வென்சர்ஸ் ஆஃப் த இயர் விருது பெற்றிருக்கிறார்.
ஸ்விட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த 41 வயது சாரா, கடந்த 20 ஆண்டுகளாக இயற்கையைப் புரிந்துகொள்ளவும் இயற்கையைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் கிட்டத்தட்ட 42 ஆயிரம் கி.மீ. தொலைவை நடந்தே கடந்திருக்கிறார்!.
வவ்வால்களுடன் வாசம்
மனிதர்களைவிட விலங்குகள், பறவைகள், தாவரங்கள் என்று பிற உயிரினங்கள் மேல் அக்கறையும் ஆர்வமும் கொண்டுள்ள சாரா, 8 வயதிலேயே தனிமைப் பயணத்தை மேற்கொண்டார். யாரிடமும் சொல்லாமல் நாயை அழைத்துக்கொண்டு, அருகில் இருந்த காட்டுக்குள் சென்றார். இரவு முழுவதும் ஒரு குகையில் வவ்வால்களுடன் இருந்துவிட்டு, மறுநாள் திரும்பி வந்தார். மற்றவர்களுக்குக் கிலி ஏற்படுத்தினாலும், சாராவுக்கு அந்தப் பயணம் புதிய வழியைக் காட்டியது.
கல்லூரியில் படித்துக்கொண்டிருந் தபோது, சிலருடன் சேர்ந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அந்தப் பயணம் தந்த மோசமான அனுபவத்தால்தான் தனியாகப் பயணம் மேற்கொள்ள முடிவு செய்தார்.
ஆரம்பத்தில் வாகனம், குதிரை போன்றவற்றில் பயணித்தவர், பிறகு நடைப்பயணத்துக்கு வந்துவிட்டார். போகும் இடங்களுக்கு ஏற்றவாறு சுமைக்கு ஒரு தள்ளுவண்டி, துணைக்கு ஒரு நாய் என்று திட்டமிட்டுக்கொள்வார். காடு, மலை, பாலைவனம், பனிப்பிரதேசம் என்று எந்தப் பகுதியோ, பருவநிலையோ அவருக்கு ஒரு பொருட்டே இல்லை. தன்னால் முதுகில் எவ்வளவு பொருட்களைச் சுமக்க முடியுமோ, அவற்றை எடுத்துக்கொள்வார். இரவு நேரங்களில் கூடாரம் அமைத்துத் தங்கிக்கொள்வார். உணவு தீர்ந்துவிட்டால் காய்கள், கனிகளைச் சாப்பிடுவார்.
எதையும் தாங்கும் இதயம்
இது உங்களுக்குக் கஷ்டமாக இல்லையா? என்று அவரிடம் கேட்டால், “நான் ஏழு வயதிலேயே 1 ஃப்ராங்க் பணத்துக்காக எங்கள் தோட்டத்தில் 100 நத்தைகளைச் சேகரித்துக் கொடுப்பேன். எவ்வளவு குளிராக இருந்தாலும், மழை பெய்தாலும் என் வேலையைச் செய்வேன். 8 ஃப்ராங்க் கிடைத்தால் என் கனவு நிறைவேறும். அதாவது எனக்குப் பிடித்த நேஷனல் ஜியாகிரபிக் இதழை வாங்க முடியும். நான் வளர்ந்த சூழ்நிலைதான் இயற்கை மேல் இத்தனை அன்புகொள்ளச் செய்தது. மரம் ஏறுவேன், பறவைகளை கவனிப்பேன். ஆயிரம் ஆயிரம் அதிசயங்களை ஒளித்து வைத்திருக்கும் இயற்கையின் ஒரு துளியையாவது புரிந்து, அறிந்துகொள்ள வேண்டும் என்பதே என் லட்சியம். இயற்கைக்கும் மனிதனுக்கும் ஒரு பாலமாக இருக்க விரும்புகிறேன்’’ என்கிறார் சாரா.
பயணத்தின்போது தளர்வான ஆடைகள், கொண்டை போட்டு தொப்பியால் மறைத்த தலை, முகத்தைப் பெருமளவு மறைக்கும் கூலிங் கிளாஸ், உறுதியான நிமிர்ந்த நடை என்று சட்டென்று ஆணா, பெண்ணா என்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு தன்னை மாற்றிக்கொள்கிறார் சாரா.
தனியாக ஒரு பெண் இப்படிப் பயணம் செய்வது ஆச்சரியமாக இருக்கிறது. அவ்வளவு நல்ல உலகமா இது என்று நாம் யோசிக்கலாம். ஆனால் அதற்கும் பதில் வைத்திருக்கிறார் சாரா.
“மங்கோலியாவில் தினமும் இரவு என் கூடாரத்துக்கு குதிரையோட்டிகள் வந்தார்கள். என்னைத் தொந்தரவு செய்தார்கள். பொருட்களை எடுத்துச் சென்றார்கள். தற்காப்புக்கு ஆயுதம் வைத்திருக்கிறேன். ஆனாலும் பலபேர் என்றால் கஷ்டம்தான். அவர்களுடன் பேச முடியாது. அவர்கள் பேசுவது எனக்கோ, நான் பேசுவது அவர்களுக்கோ புரியாது. அதனால் அமைதியையும் பொறுமையையும் கடைப்பிடித்து நிலைமையைச் சமாளித்தேன். சில நேரங்களில் கூடாரத்தை விட்டு வேறு எங்காவது மறைவாக ஒளிந்துகொள்வேன். ஒரே இடத்தில் தங்கவும் மாட்டேன்’’ என்று விளக்கம் தருகிறார்.
ஒரு நாளைக்கு 32 கி.மீ. வரை நடந்துகொண்டே இருப்பார். தண்ணீர் இருக்கும் இடங்களில் குளிப்பார். தண்ணீரே இல்லாத பாலைவனங்களில் மாதக் கணக்கில் குளிக்காமல் இருந்திருக்கிறார். குடிக்க தண்ணீர் இன்றி, உயிர் வாழ்வதற்காக விலங்கின் ரத்தத்தைக் குடித்திருக்கிறார். ஒட்டகம், நரி போன்ற விலங்குகள் அவர் கூடாரத்துக்கு அருகே வந்து சென்றுள்ளன. பாலைவனப் புயல், பனிக் காற்று எல்லாவற்றையும் அனுபவித்திருக்கிறார்.
இயற்கையின் பாதையில்
வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா என்று பயணம் செய்தவர், 2010-ம் ஆண்டு ஆசியப் பயணத்தை ஆரம்பித்தார். சைபீரியப் பனிப் பாலைவனம், மங்கோலிய கோபி பாலைவனம், சீனா, தாய்லாந்து என்று 6 நாடுகளில் பயணம் மேற்கொண்டார். ஆசியாவில் இருந்து கப்பலில் பயணம் செய்து ஆஸ்திரேலியாவை அடைந்தார். அங்கு மீண்டும் நடைப் பயணம். இப்படி 3 ஆண்டுகளில் 16,000 கி.மீ. தொலைவை நடந்து கடந்திருக்கிறார் சாரா!
பல்வேறு ஆபத்துகளைச் சந்தித்து, மனிதர்கள் வசிக்காத பகுதிகளில் பயணிக்கிற இந்த வாழ்க்கை நமக்குக் கடினமாகத் தெரிகிறது. சாராவுக்கு?
“மனிதர்கள் இருக்கும் இடங்களில் வசிப்பதுதான் கொஞ்சம் சிரமம். இயற்கை ஒரு கெடுதலையும் நமக்கு அளிப்பதில்லை. அதை நாம் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். லாவோஸ் காட்டில் பயணம் செய்தபோது டெங்கு காய்ச்சல் வந்துவிட்டது. மூன்று நாட்கள் கூடாரத்திலேயே கிடந்தேன். இயற்கை என்னைக் கைவிடவில்லை. பிழைத்துவிட்டேன். மனிதர்கள் இல்லாத இடங்களில் பயணிக்கும்போது, ஒரு கிலோ மீட்டருக்கு அப்பால் யாராவது மனிதர்கள் வந்தால்கூட வாசனையை வைத்து என்னால் கண்டுபிடிக்க முடியும். அதேபோல விலங்குகளையும். ஒவ்வொரு பயணத்தின் முடிவிலும் அடுத்த பயணம் பற்றிய சிந்தனைதான் வரும்! கொஞ்சம் சம்பாதித்துக்கொண்டு அடுத்த பயணத்தைத் தொடங்கி விடுவேன்’’ என்கிறார் சாரா.
பயணம் செல்லாத காலங்களில் புத்தகம் எழுதுகிறார். பல்வேறு இடங்களுக்குச் சென்று உரை நிகழ்த்துகிறார். இயற்கை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார். பயணத்திலும் பயணம் செய்யாத நேரங்களிலும் இயற்கையின் தன்மையைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கும் சாரா சொல்வது இதுதான்:
“உலகம் முழுவதும் பெண்கள் தங்கள் சுதந்திரத்துக்காகப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். போராடி சுதந்திரம் பெற்றவர்கள் அதைப் பயன்படுத்தாமல் இருக்கிறார்கள். ஓர் அடி முன் வைத்தால் புதிய உலகத்தைக் காணலாம்! உங்கள் கால்களுக்கு ஷுக்களை மாட்டிக்கொள்ளுங்கள்; இயற்கையோடு இனிமையாகப் பயணிப்போம் வாருங்கள்!”