Published : 02 Feb 2014 03:02 PM
Last Updated : 02 Feb 2014 03:02 PM

‘சிறுதுளி’ தரும் மாற்றம்

சிறு மழைக்கே சாலையில் தேங்குகிற தண்ணீரைப் பார்த்து முகம் சுளிக்கிறோம். தாழ்வான பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துவிட்டது, பாம்புகளோடு போராடுகிறோம் என தொலைக்காட்சிகளுக்கும், பத்திரிகைகளுக்கும் பேட்டி தருகிறோம். ஏன் சாலையில் தண்ணீர் தேங்குகிறது? தண்ணீர் வடியும் வழிகளை அடைத்து வீடுகள் கட்டிவிட்டோம், அவற்றின் பாதையைச் சிதைத்துவிட்டோம். அவை தேங்குகிற ஏரிகள், குளங்கள், கண்மாய்களை மண்மேடாக்கிவிட்டோம். கோடைக்காலங்களில் மட்டுமல்லாது எல்லா நாட்களும் குடங்களைத் தூக்கிக்கொண்டு தண்ணீருக்காக அலைகிறோம். கொஞ்சம் வசதியிருந்தால் தண்ணீரை விலைகொடுத்து வாங்குகிறோம்.

வேலையும் விருப்பமும்

“நமக்காகப் பொழிகிற மழைத்தண்ணீரை வீணாக்கி விட்டு, எதற்காகத் தண்ணீருக்காக அலைய வேண்டும்? நீர் சேகரிப்பு ஆதாரங்களை முறைப்படுத்தினாலே தண்ணீர்ப் பஞ்சத்தைத் தவிர்க்கலாம்” என்கிறார் வனிதா மோகன். தொழில்துறை வட்டத்தில் பிரிக்கால் நிறுவனத் தின் துணை தலைவர் என்று அறியப்படுகிற இவர், பொதுமக்களுக்கு ‘சிறுதுளி’ அமைப்பின் நிர்வாக அறங்காவலர். “முன்னது என் வேலை, பின்னது என் விருப்பம்” என்று தெளிவாக விளக்கமும் தருகிறார். அனைவரையும் போலவே இவருடைய நாளிலும் 24 மணிநேரம்தான். ஆனால் அதை முறைப்படுத்திச் செயல்படுவதில்தான் வேறுபடுகிறார் வனிதா மோகன்.

“நான் பிறந்து, வளர்ந்தது எல்லாமே கோயமுத்தூர்தான். இந்தக் காலத்துக் குழந்தைகளைப் போல நெருக்கடிகள் நிறைந்ததாக இல்லை என் இளமைப் பருவம். பள்ளி நேரம் போக எங்களுக்கு விளையாட அதிக நேரம் கிடைத்தது. பெரிய குடும்பம் என்பதால் எப்போதும் குழந்தைகள் நிறைந்த வீட்டில் என் சித்தப்பா, பெரியப்பா குழந்தைகளுடன் உற்சாகமாகக் கழிந்தன நாட்கள். கல்லூரி முடித்ததுமே திருமணம். முன்னணி தொழில்நிறுவனமான பிரிக்கால் நிறுவன வீட்டு மருமகளானேன். அனைவரையும் போலவே புகுந்த வீடு, கடமைகள் என்றுதான் என் வாழ்வைக் கட்டமைத்துக் கொண்டேன். பிள்ளைகள் பள்ளிக்கு அனுப்பிவிட்டு, கிடைக்கிற நேரங்களில் எல்லாம் தொழிலிலும் கவனம் செலுத்தினேன். நான் படித்த நிர்வாகவியல் அதற்குத் துணை நின்றது. குழந்தைகள் கல்லூரியில் சேர்ந்ததும் என்னை அவர்கள் சார்ந்திருப்பது குறைந்தது. அப்போது தான் எங்கள் நிறுவன வேலையில் என்னால் முழுமூச்சாக இறங்கினேன்” என்று அறிமுகம் தருகிறார் வனிதா.

சிறுதுளியின் முதல் துளி

வேலை, நிர்வாகம், வருமானம் என்பதோடு நின்று விடாமல் இந்தச் சமூகத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பது வனிதாவின் ஆழ்மன ஆசைகளில் ஒன்றாகவே இருந்திருக்கிறது. ஏரி, குளங்கள் போன்ற நீர் சேகரிப்பு மையங்களை அமைத்துத் தண்ணீரைத் தேக்கிவைத்த நம் வரலாறு இவருடைய சிந்தனையைத் தூண்டியிருக்கிறது.

“அந்தக் காலத்தில் போதுமான தொழில்நுட்ப வளர்ச்சியும் இயந்திரங்களும் இல்லாமல் மனித சக்தி மூலமே உருவான ஏரிகளும் குளங்களும் என்னை ஆச்சரியப்படுத்தின. இவற்றை நாம் சரியாகப் பராமரிக்காததும் தண்ணீர் பஞ்சத்துக்கான காரணங்களில் ஒன்று என்பதும் புரிந்தது. ஒரே நாளில் எந்த மாற்றத்தையும் உருவாக்கிவிட முடியாது என்பதால் முதலில் ஒரு குளத்தைத் தூர்வாருவது என முடிவு செய்தேன். தனியொரு மனுஷியாக இருந்து செயல்படுவதைவிட கூட்டு முயற்சி நிச்சயம் வெற்றி தரும் என்பதால் கருத்தொருமித்த ஆர்வலர்கள் துணையுடன் ‘சிறுதுளி’ என்னும் அமைப்பை உருவாக்கினோம். எங்கள் தொழிலுக்குத் துணை நின்றவர்கள், என் ஆர்வத்துக்கும் ஆதரவு தந்தார்கள்” என்று சிறுதுளி உருவான பின்னணி குறித்துப் பகிர்ந்துகொண்டார்.

குளம் நிறைய தண்ணீர்

முதலில் பெரியநாயக்கன்பாளையத்தில் ஒரு குளத்தைச் சோதனை முயற்சியாகத் தூர்வார முடிவு செய்திருக் கிறார்கள். தூர்வாருவதுடன் தண்ணீர் வந்தடையும் வழிகளையும் செப்பனிட்டிருக்கிறார்கள். அந்த வருடம் பெய்த மழையில் அந்தக் குளத்தில் தண்ணீர் தேங்கியிருக் கிறது. அதைச் சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரவும் இது காரணமாக இருந்திருக்கிறது. நம் முன்னோர் போட்டுவைத்த பாதையில் பயணித்தாலே பாதி சிக்கல்கள் தீர்ந்துவிடும் என்று புரிந்துகொண்டவர்கள், அடுத்தடுத்து சில குளங்களைத் தூர்வாரியிருக்கிறார்கள். தன்னார்வலர்களை மட்டுமே வைத்துக் கொண்டு குளங் களைச் சீர்ப்படுத்துவது சிரமம் என்பதால் அந்தந்த பகுதி மக்களையும் உதவிக்கு அழைத்திருக்கிறார்கள். இவர்களே எதிர்பார்க்காத வகையில் ஆயிரக்கணக்கில் மக்கள் குவிந்துவிட, அதுவே இவர்களின் உற்சாகத்தை இரட்டிப்பாக்கியிருக்கிறது.

“முதல் முயற்சி தந்த வெற்றியில் அடுத்தடுத்து ஏழு குளங்களைத் தூர்வாரினோம். மக்களின் பங்கு வியக்கத் தக்க வகையில் இருந்தது. அனைவருக்குள்ளும் சுற்றுச் சூழல் குறித்த ஆர்வம் இருக்கத்தான் செய்கிறது. அதை எப்படிச் செயல்படுத்துவது என்ற வழிகாட்டுதல்தான் இல்லை. இதுபோன்ற ஆர்வலர்களைத்தான் நாங்கள் பயன்படுத்திக் கொண்டோம். குளங்களில் தங்கிய மழைநீர் போக உபரி நீர், ஆறுகளைச் சென்றடைந்து, அங்கிருந்து கடலில் கலக்க வேண்டும். இதுதான் நியதி. ஆனால் நம் பேராசையும் ஆக்கிரமிப்புகளும் தண்ணீர் ஆதாரங்களைச் சாகடித்து விட்டது. இப்போது நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விட்டது என்று யாரைக் குற்றம் சொல்ல முடியும்? நம் மீதே தான் நாம் குற்றம் சுமத்திக் கொள்ள வேண்டும்” என்று சொல் லும் வனிதா, நொய்யல் ஆற்றுத் திட்டம் என்கிற பெரும் பணியைத் தற்போது கையில் எடுத்திருப்பதாகச் சொல்கிறார்.

பசுமை நிறைந்த நகரம்

சுற்றுச்சூழலை அச்சுறுத்தும் இன்னொரு பிரச்சினை குப்பைகள். தினமும் வீட்டைப் பெருக்குகிறோம், சமைக்கிறோம். காய்கறி கழிவுகளையும் வீட்டில் சேரும் குப்பைகளையும் வீட்டுக்கு வெளியே கொட்டிவிடு கிறோம். அப்படிக் கொட்டப்படும் குப்பைகள் என்னவா கின்றன? அதெல்லாம் அரசாங்கமோ, குப்பைக்கு அருகில் வசிப்பவர்களோ பார்த்துக்கொள்வார்கள் என்றுதானே தோன்றுகிறது. இந்த அலட்சியம்தான் நம் சுற்றுப்புறத்தையும், நகரத்தையும், நாட்டையும் குப்பைகளின் கூடாரமாக்கிவிடுகிறது. ஆனால் அதை முறைப்படி கையாண்டால் குப்பைகளற்ற நகரம் அமைக்கலாம் என்று நம்பிக்கை தருகிறார் இவர்.

“குளங்கள் புதர் மண்டிக் கிடக்கக் குப்பைகளும் காரணம் என்பது புரிந்தது. இவற்றை முறைப்படி அகற்ற வேண்டும் என முடிவு செய்தோம். குப்பைகள் இல்லாத கோவை என்பதை இலக்காக வைத்துச் செயல்பட்டுவருகிறோம். திடக்கழிவு மேலாண்மை குறித்து இல்லத்தரசிகளுக்கும், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் எடுத்துச் சொல்கிறோம். வர்த்தக நிறுவனங்களிலும் இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். வீடுகளில் சேரும் குப்பைகளை வைத்தே இயற்கை உரங்கள் தயாரித்து அதன் மூலம் வீட்டிலேயே தோட்டம் அமைக்கும் வகையில், ‘நம்மாழ்வார் காய்கனி பண்ணை’ திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறோம்.

உலகமே கான்கிரீட் காடாகிவரும் இந்நாளில் பசுமையைப் பார்ப்பதே கானல்நீராகி வருகிறது. அதை மாற்றுவதற்காக மரக்கன்றுகள் நடும் வேலையையும் செய்துவருகிறோம். கோவையில் கிட்டத்தட்ட பதினைந்து லட்சம் பேர் வசிக்கிறார் கள். தலைக்கு ஒரு மரக்கன்று வீதம் நடுவதுதான் எங்கள் இலக்கு. தற்போது நான்கு லட்சம் மரக்கன்றுகளுக்கு மேல் நட்டு, பரமாரித்துவருகிறோம். குடியிருப்பு பகுதிகளில் மரம் வளர்க்கப் போதிய இடம் இல்லாத பட்சத்தில் புறநகர்ப்பகுதி களில் அந்தப் பகுதி பஞ்சாயத்து மற்றும் வனத்துறை உதவியுடன் மொத்தமாக மரக்கன்றுகளை நட்டுவருகிறோம். பசுமையாகப் படரும் அந்த மரங்கள்தான் எங்கள் நம்பிக் கையை அதிகரிக்கின்றன” என்று பசுமைக் கனவுகள் பளிச்சிடப் பேசுகிறார் வனிதா மோகன்.

நிச்சயம் ‘சிறுதுளி’ பெருவெள்ளமாகும் என்பதை நிரூபிக்கின்றன நீர்நிறைந்த குளங்களும், செழித்தோங்கும் மரங்களும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x