

உலக மகளிர் தினம் கொண்டாடும் வழக்கம் எதற்காக, எப்போது உருவானது என்ற பின்னணியை விளக்குகிறது ‘மகளிர் தினம்: உண்மை வரலாறு’ என்ற இந்தப் புத்தகம். மகளிர் தினத்தைக் கொண்டாட மார்ச் 8 ஏன், எவ்வாறு, எப்போது நிச்சயிக்கப்பட்டது என்பதைப் பற்றி ஏராளமான கற்பனைக் கதைகள் உள்ளன. அந்தக் கற்பனை களை உடைத்திருக்கிறது இந்தப் புத்தகம்.
எண்பது பக்கங்களில் பதினேழு தலைப்புகளில் மகளிர் தின வரலாற்றை விளக்கியிருக்கிறார் நூல் ஆசிரியர் இரா. ஜவஹர். அத்துடன், சோஷலிச இயக்கத்துக்கும் உழைக்கும் மகளிர் தினம் உருவாகியதற்கும் இருக்கும் தொடர்பை எளிமையான குறுங்கட்டுரைகளாக விளக்குகிறது இந்தப் புத்தகம்.
எப்படி உருவானது?
உலக சோஷலிஸ்ட் பெண்கள் இயக்கத்தின் முதல் மாநாடு ஆகஸ்ட் 17, 1907-ம் ஆண்டு நடைபெற்றது. இந்த மாநாட்டில்தான் ஆண்கள், பெண்கள் அனைவருக்கும் வாக்குரிமை வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த இயக்கத்தின் செயற்குழு செயலளாராக கிளாரா ஜெட்கின் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த மாநாடு உழைக்கும் பெண்கள் மத்தியில் புதிய எழுச்சியை ஏற்படுத்தியது.
அதற்குப் பிறகு, உலக மகளிர் தினம் உருவானதற்கு உண்மை காரணமான ‘உலக சோஷலிஸ்ட் மாநாடு’ கோபன் ஹேகனில் 1910 -ம்
ஆண்டு, ஆகஸ்ட் 26, 27 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. பதினேழு நாடுகளைச் சேர்ந்த நூறு பெண் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டார்கள். கிளாரா ஜெட்கின் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் தான் ‘மகளிர் தினம்’ தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இந்தத் தீர்மானத்தில் மகளிர் தினத்துக்கான தேதி குறிப்பிடப்படவில்லை.
மார்ச் 8
உலக மகளிர் தினம் முதன்முறை யாக மார்ச் 19, 1911 அன்று ஜெர்மனி, ஆஸ்திரியா, ஸ்விட்சர்லாந்து, டென்மார்க் போன்ற நாடுகளில் கொண்டாடப்பட்டது. இதைத் தொடர்ந்து வந்த ஆண்டுகளில், மகளிர் தினம் கொண்டாடுவதில் ஜெர்மனி, ஸ்வீடன் நாடுகளுடன் ரஷ்யாவும் இணைந்துகொண்டது. அப்போது, முதல் உலகப் போரின் கோரப்பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தது ரஷ்யா. பசியால் தாங்களும் குழந்தைகளும் மற்றவர்களும் துடிப்பதைப் பொறுக்க முடியாத பெண் தொழிலாளர்கள் கொதித் தெழுந்தார்கள். பெட்ரோகிட் துணி ஆலைகளில் வேலை செய்த பெண் தொழிலாளர்கள் மார்ச் 8, 1917 அன்று வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கினார்கள். இந்த வேலை நிறுத்தம்தான் விஸ்வரூபம் எடுத்துப் பின்னர் ரஷ்யப் புரட்சிக்கு வித்திட்டது.
பெண் பாட்டாளிகள் தொடங்கிய போராட்டத்தை நினைவுகூரும் விதமாகத்தான் உலக மகளிர் தினம் மார்ச் 8 என்று கடைப்பிடிக்கப்படுகிறது என்பதை நிறுவுகிறது இந்தப் புத்தகம்.
ரஷ்யா மற்றும் சில நாடுகளில் மட்டும் கொண்டாடப்பட்டுவந்த மகளிர் தினம், உலக நாடுகளுக்குப் பரவியதற்கு ஐ.நா. சபை காரணமாக இருந்திருக்கிறது. 1975-ம் ஆண்டை உலக மகளிர் ஆண்டாக அறிவித்தது ஐ.நா. அத்துடன், ஆண்-பெண் சமத்துவத்தை ஊக்குவிப்பதற்காக அனைத்து நாடுகளிலும் ஏதேனும் ஒரு நாளை மகளிர் தினமாகக் கொண்டாட வேண்டும் என்ற தீர்மானத்தை 1977-ம் ஆண்டு நிறைவேற்றியது. அனைத்து நாடுகளும் மார்ச் 8-ம் தேதியை உலக மகளிர் தினமாக அங்கீகரித்துக் கொண்டாடிவருகின்றன.
பெண்களுக்குச் சமையல் போட்டியும் கோலப் போட்டியும் நடத்துவதற்கான நாள் அல்ல இது. நகைகளையும் சேலைகளையும் அழகு சாதனப் பொருட்களையும் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யும் வணிகத்துக்கான நாளும் அல்ல. உழைக்கும் பெண்களும் அவர்களது பிரதிநிதிகளும் நடத்திய உரிமைப் போராட்டங்களில் உருவான நாள் இது என்ற உண்மையை அழுத்தமாகப் பதிவுசெய்திருக்கிறது இந்நூல். 1960களில் உருவான பெண்ணிய இயக்கங்கள் பற்றியும் இந்தப் புத்தகத்தில் அறிந்துகொள்ள முடிகிறது.