

எனக்குக் கருப்பையில் நீர்க்கட்டி இருக்கிறது. இதனால் மாதவிடாய் தள்ளிப் போகிறது. வீட்டில் இருந்தபடியே அதைக் குணப்படுத்தும் வழியிருக்கிறதா?
- சரண்யா.
பி.வசந்தாமணி, முதல்வர், விழுப்புரம் மருத்துவக் கல்லூரி.
உடல் எடை அதிகமாக இருவர்களுக்குக் கருப்பையில் நீர்க்கட்டிகள் உருவாகலாம். அதனால் மாதவிடாய் முறையாக வராமல் தள்ளிப்போவதற்கான சூழலும் ஏற்படும். கருப்பையில் பிரச்சினை உள்ளவர்கள் உடனடியாக உடல் எடையைக் குறைக்க வேண்டும். உடற்பயிற்சி செய்ய வேண்டும். உணவில் அதிகமாக எண்ணெய் சேர்த்துக்கொள்ளக் கூடாது. நார்ச்சத்து நிறைந்த உணவு வகைகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் பத்து சதவீத உடல் எடையைக் குறைத்தால் முறையாக மாதவிடாய் வருவதற்கான வாய்ப்புள்ளது. உடல் எடையைக் குறைத்த பிறகும் மாதவிடாய் சரியாக வரவில்லையென்றால் மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறவேண்டும்.
திருமணமான எட்டு மாதங்களில் கருவுற்றேன். உதிரப் போக்கு அதிகமாக இருந்ததால் மருத்துவரிடம் சென்று ஸ்கேன் செய்து பார்த்தோம். குழந்தைக்கு இதய துடிப்பு இல்லாத காரணத்தால் கரு கலைந்துவிட்டது என்று சொல்லி, அதை கருப்பையில் இருந்து அகற்றிவிட்டனர். ஆனால் அடுத்த மூன்று மாதத்துக்குக் கருவுறக் கூடாது என்று சொல்லிவிட்டனர். கவலையாக உள்ளது. இதற்கு ஏதாவது மாத்திரைகள் எடுக்க வேண்டுமா? நான் அடுத்து எந்தச் சிக்கலும் இல்லாமல் கருத்தரிக்க முடியுமா?
- சுமின்ஸ்
குழந்தையின் இதயத் துடிப்பு நின்றுவிட்ட காரணத்தால் அந்தக் கருவை மருத்துவர்கள் நீக்கியுள்ளனர். கருப்பையில் நோய்த் தொற்று வராமல் இருப்பதற்காக ‘டி அண்ட் சி’ சிகிச்சை செய்வது வழக்கம். இது ஒரு சாதாரண பிரச்சினைதான். முதல் கரு கலைந்துவிட்ட காரணத்தால், உடனடியாக அடுத்த கருவைத் தாங்குவதற்கான சக்தி கருப்பைக்கு இருக்காது. இதன் காரணமாகவே சில மாதங்கள் கழித்துக் கருவுறுமாறு மருத்துவர்கள் சொல்லியிருக்கிறார்கள். இந்த இடைவெளியில் நீங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளுங்கள். இரும்புச் சத்து நிறைந்த பேரீச்சை, முருங்கைக் கீரை போன்றவற்றை தினமும் சாப்பிடுங்கள். நல்ல சத்தான உணவோடு உடற்பயிற்சியும் அவசியம்.
மூன்று மாதங்கள் கழித்தும் கரு உண்டாகவில்லையென்றால், மகப்பேறு மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது. மனக்குழப்பம் அடையத் தேவையில்லை.
உங்கள் கேள்வி என்ன? ‘கேளாய் பெண்ணே’ பகுதிக்கு நீங்களும் கேள்விகளை அனுப்பலாம். சமையல், சரித்திரம், சுயதொழில், மனக்குழப்பம், குழந்தை வளர்ப்பு, மருத்துவம் என எந்தத் துறை குறித்த சந்தேகமாக இருந்தாலும் தயங்காமல் கேளுங்கள். உங்கள் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை நிபுணர்களே பதிலளிப்பார்கள். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி: பெண் இன்று, தி இந்து, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை-600002. மின்னஞ்சல் முகவரி: penindru@thehindutamil.co.in |