

இந்தியாவின் பெருமை
2016 ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் பதக்கக் கணக்கைத் தொடங்கிவைத்த பெருமை சாக்ஷி மாலிக்கையே சேரும்.
தன்னுடன் மோதியவரை யாருமே எதிர்பாராத கடைசி விநாடிகளில் வீழ்த்திப் பதக்கம் வென்றதன் மூலம் மல்யுத்தப் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற புதிய வரலாற்றை எழுதியிருக்கிறார் 23 வயது சாக்ஷி! ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்லும் நான்காவது இந்தியப் பெண், இந்திய ஒலிம்பிக் வரலாற்றில் மல்யுத்தப் பிரிவில் பதக்கம் வெல்லும் ஐந்தாவது நபர் என்று அடுக்கடுக்கான அடையாளங்களை ஏற்படுத்தியிருக்கிறார் சாக்ஷி.
கேள்விக்கு இதுதான் பதில்
டென்னிஸ் உலகத் தர வரிசைப் பட்டியலில் இரட்டையர் பிரிவில் முதலிடத்தைப் பிடித்ததோடு அதை 80 வாரங்களுக்கும் மேலாகத் தக்கவைத்திருக்கிறார் சானியா மிர்சா. இந்தியாவின் சிறந்த டென்னிஸ் வீராங்கனையான இவர் Ace against odds என்ற தலைப்பில் தன் சுயசரிதைப் புத்தகத்தை வெளியிட்டார். அது தொடர்பான பேட்டியின் போது குடும்பம், குழந்தை என “செட்டில் ஆவது” குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. “உலகின் நம்பர் ஒன் வீராங்கனையாக இருப்பது என்பது வாழ்க்கையில் செட்டில் ஆவது இல்லையா?” என்று தெளிவுடன் பதில் சொன்ன விதம் பலரையும் கவர்ந்தது.
புதிய அடையாளம்
இந்தியாவின் புதிய அடையாளமாகக் கொண்டாடப்பட்டவர் தீபா கர்மகார். இந்திய ஜிம்னாஸ்டிக்ஸ் துறைக்குப் புத்துயிர் கொடுத்தவர். இந்திய வரலாற்றில் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்ற முதல் பெண் என்ற சாதனை படைத்ததன் மூலம் திரிபுராவின் தங்க மகளாக இருந்த தீபா, இந்தியாவின் சாதனை மகளானார்.
வானமே எல்லை
2016 பாராலிம்பிக் போட்டியில் குண்டு எறிதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றதன் மூலம் பாராலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் முதல் பெண் என்ற பெருமிதத்தைப் பெற்றிருக்கிறார் தீபா மாலிக். அடுத்தடுத்த அறுவை சிகிச்சைகளால் மார்புக்குக் கீழே உடல் பாகங்கள் செயல்படாத நிலையிலும் தன்னம்பிக்கையோடு அவர் புரிந்த சாதனை, தீபா மாலிக்கை வெற்றிப் பெண்ணாக மிளிரச் செய்தது.
உலகைத் திருப்பிய வெற்றி
2016 ஒலிம்பிக் போட்டியில் பாட்மிண்டன் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றதன் மூலம் உலகையே திரும்பிப் பார்க்கவைத்தார் பி.வி.சிந்து. ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் பேட்மிண்டனில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்றுச் சாதனையையும் இவர் நிகழ்த்தியிருக்கிறார். இந்தியாவில் இணையதளத்தில் அதிகம் தேடப்பட்டவர்கள் என்று யாஹூ நிறுவனம் வெளியிட்டிருக்கும் பட்டியலில் கிரிக்கெட் வீரர்களைப் பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்திருக்கிறார் பி.வி. சிந்து.
தளராத போராட்டம்
தடகள வீராங்கனை சாந்தி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தன் மூன்று ஆண்டுப் போராட்டத்துக்குப் பிறகு கிடைத்த அங்கீகாரம் இது என சாந்தி குறிப்பிட்டுள்ளார். 2006-ம் ஆண்டு தோஹாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் 800 மீ ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றதன் மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் தமிழ்ப் பெண் என்ற பெருமையைப் பெற்றார் சாந்தி. ஆனால் அதன் பிறகு நடந்த பாலினச் சோதனையின் முடிவால் சாந்தியின் பதக்கம் பறிக்கப்பட்டது. இந்த நிலையில் அவருக்குக் கிடைத்திருக்கும் இந்தப் பொறுப்பு, பல இளம் வீரர்களை உருவாக்குவதற்கான களமாக அமையும் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
வசப்பட்ட வானம்!
திரைத் துறை பெண்களுக்கு ஆகிவராத துறை என்பதை உடைத்தெறிந்து, புதிய தடம் பதித்திருக்கிறார்கள் இயக்குநர் சுதா கொங்கராவும் பாடலாசிரியர் உமாதேவியும். பெண் இயக்குநர்கள் என்றாலே காதல் படங்கள் மட்டும்தான் கைவரும் என்ற பொதுவான நினைப்புக்குக் குத்துச் சண்டையை மையமாக வைத்து இயக்கிய ‘இறுதிச் சுற்று’ படத்தின் மூலம் முற்றுப்புள்ளி வைத்தார் சுதா. உச்சத்தில் இருக்கும் நடிகர்களுக்கு ஆண்களே பாடல் எழுதிவந்த மரபை ‘மாய நதி இன்று மார்பில் வழியுதே’ பாடலின் மூலம் மாற்றியெழுதியினார் உமாதேவி. இதன் மூலம் தமிழ்த் திரையுலகின் உச்ச நட்சத்திரமாகக் கொண்டாடப்படும் நடிகர் ரஜினிகாந்துக்குப் பாடல் எழுதிய முதல் பெண் பாடலாசிரியர் என்ற பெருமையையும் உமாதேவி பெற்றிருக்கிறார்.
மரங்களின் தாய்
கடந்த ஆண்டு பிபிசி வெளியிட்ட ‘சமூகத்தில் செல்வாக்கு செலுத்தக்கூடிய 100 பெண்கள்’ பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த நான்கு பெண்கள் இடம்பெற்றிருக்கின்றனர். இவர்களில் முக்கியமானவர் 105 வயது ‘சாலு மரத’ திம்மக்கா. கர்நாடக மாநிலத்தின் குக்கிராமத்தில் பிறந்த இவர், பள்ளிப் படிப்பைத் தாண்டாதவர். நெடுஞ்சாலைகளில் 4 கி.மீ. நீளத்துக்கு வரிசையாகக் கிட்டத்தட்ட நானூறு ஆலமரக் கன்றுகளை நட, அவை இன்று விருட்சங்களாகித் தழைத்திருக்கின்றன. கடந்த 75 ஆண்டுகளாக மரங்கள் வளர்ப்பது பராமரிப்பதையே வாழ்க்கையின் நோக்கமாகக் கொண்டவர். வறட்சியான காலங்களில்கூடப் பல கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று தண்ணீர் கொண்டுவந்து மரக்கன்றுகளுக்கு ஊற்றிய இவர், சூழல் ஆர்வலர்களுக்குச் சிறந்த முன்னோடி!
போராட்டத்தின் புதிய வடிவம்
ஆயுதப் படைக்குச் சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டத்தை விலக்கிக்கொள்ள வலியுறுத்திக் கடந்த பதினாறு ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருந்துவந்தவர் இரும்புப் பெண் இரோம் ஷர்மிளா. உலகின் நீண்ட நெடிய உண்ணாவிரதப் போராட்டத்தைக் கடந்த ஆகஸ்ட் மாதம் 9-ம் தேதி அவர் கைவிட்டார். நீதிக்காகவும் நேர்மைக்காகவும் அறவழியில் போராடிய அவர், இனி நேரடி அரசியல் மூலம் மக்களுக்காகப் போராடப்போவதாக அறிவித்தார். மக்கள் எழுச்சி மற்றும் நீதி கூட்டணி என்ற கட்சியைத் தொடங்கிய இரோம், இந்த ஆண்டு நடக்கப்போகும் மணிப்பூர் பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்தார். திருமணம் செய்துகொள்ளப் போவதாக இரோம் ஷர்மிளா சொல்ல, அதை ஆதரித்தும் எதிர்த்தும் விவாதங்கள் வெளியாகின.
குழந்தைகளின் குரல்
பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, யுனிசெஃப் அமைப்பின் சர்வதேச நல்லெண்ணத் தூதுவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். ஹாலிவுட் தொடரான ‘குவாண்டிகோ’வில் நடித்தது, ஆஸ்கர் விழாவில் விருது வழங்குவதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது ஆகியவை பிரியங்காவுக்கு உலக அளவில் ரசிகர்களைப் பெற்றுத் தந்தன. உலகம் முழுவதுமுள்ள ஒடுக்கப்பட்ட குழந்தைகளின் குரலாக இனி பிரியங்காவின் குரல் ஒலிக்கும். “குழந்தைகளின் சுதந்திரமே என் முதல் விருப்பம். சிந்திப்பதற்கும் வாழ்வதற்கும் அவர்களுக்கு சுதந்திரம் வேண்டும்” என்று சொல்லியிருக்கிறார் பிரியங்கா சோப்ரா.
அமெரிக்காவின் பெண் குரல்
கடந்த ஆண்டு நடைபெற்ற அமெரிக்கா அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் அதிபர் வேட்பாளராகப் போட்டியிட்டார் ஹிலாரி கிளிண்டன். அனைத்திலும் தன்னை வளர்ச்சி பெற்ற நாடாக அறிவித்துக்கொள்ளும் அமெரிக்காவின் தலைமைப் பீடத்தில் இன்றுவரை ஒரு பெண் அமர்ந்ததேயில்லை. பிரதானக் கட்சிகளின் வேட்பாளர்களாகக்கூடப் பெண்கள் போட்டியிட்டதில்லை. முதல் முறையாக அமெரிக்கத் தேர்தல் வரலாற்றில் அதிபர் பதவிக்குப் போட்டியிட்ட பெருமையைப் பெற்றதோடு, பெண்களுக்கு ஆதரவான பிரச்சாரத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
தங்கமே தங்கம்
தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம் கடந்த ஆண்டு நடத்திய பட்டமளிப்பு விழாவில் 9 தங்கப் பதக்கங்கள் உட்பட 32 பதக்கங்களை அள்ளிச்சென்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் லாவண்யா. சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்த இவர் அரசுப் பள்ளியில் படித்தவர்.
வரலாற்றுப் பதவி
ரோம் நகரத்தின் 2800 ஆண்டு வரலாற்றில் முதல் பெண் மேயராக வர்ஜீனியா ரக்கி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ரோம் வரலாற்றில் மிக இளம்வயதில் மேயராகப் பதவியேற்றவர் என்ற பெருமையைப் பெற்றிருக்கும் வர்ஜீனியா, ஏற்கனவே மூன்று ஆண்டுகள் ரோம் நகரமன்ற உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார்.
புதிய தலைமை
ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகுவது தொடர்பான பொது வாக்கெடுப்பின் முடிவு ஏற்புடையதாக இல்லாததால் கடந்த ஆண்டு பதவி விலகினார் டேவிட் கேமரூன். அதைத் தொடர்ந்து பிரிட்டனின் பிரதமராகப் பதவியேற்றார் தெரசா மே. இரும்புப் பெண்மணி எனப் புகழப்பட்ட மார்கரெட் தாட்சருக்குப் பிறகு பிரட்டனின் பிரதமர் பதவியை வகிக்கும் இரண்டாவது பெண் இவர்.
விவசாயப் பெண்கள்
சிறந்த விவசாயிக்கான தேசிய விருது பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பூங்கோதைக்கு வழங்கப்பட்டது. மக்காசோள உற்பத்தியில் படைத்த சாதனைக்காக அவருக்கு கிரிஷிகர்மான் என்ற தனிநபர் சாதனையாளர் விருது பிரதமரால் வழங்கப்பட்டது.
மதுரை திருப்பாலை கிராமத்தை சேர்ந்த பிரசன்னா, நெல் விளைச்சலில் தமிழகத்திலேயே முதலிடம் பெற்றுச் சாதனை படைத்துள்ளார். இயற்பியல் பட்டதாரியான இவர், நவீன காலத்துக்கு ஏற்ப புதிய கண்ணோட்டத்துடன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்தச் சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்.
அதிகார மையம்
தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் கடந்த டிசம்பர் மாதம் நியமிக்கப்பட்டார். நிர்வாகச் சீர்திருத்தம் மற்றும் ஊழல் கண்காணிப்பு ஆணையர் பொறுப்பையும் இவர் கூடுதலாகக் கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டது. 1983-ம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டத்தில் உதவி ஆட்சியராகப் பணியைத் தொடங்கிய இவர், அதன் பிறகு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் இணை மேலாண்மை இயக்குநர், மதுரை மாவட்ட ஆட்சியர், நிதித்துறை சிறப்புச் செயலாளர், பள்ளி மற்றும் உயர்கல்வித் துறை செயலாளர், நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் உள்பட பல்வேறு பொறுப்புகளை வகித்திருக்கிறார். நில நிர்வாக ஆணையராகவும் பணியாற்றியிருக்கிறார்.
அரசியல் வெற்றிடம்
பல்வேறு கருத்துக் கணிப்புகளைப் பொய்யாக்கி கடந்த ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் அமோக வெற்றிபெற்று மீண்டும் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுக்கொண்டார் ஜெயலலிதா. காய்ச்சல், நீர்ச்சத்து குறைபாடு காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்த பல்வேறு சர்ச்சைகளுக்கு நடுவே திடீர் மாரடைப்பு காரணமாக டிசம்பர் 5-ம் தேதி அவர் உயிரிழந்ததாக அறிவிப்பு வெளியானது. ஜெயலலிதாவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஆயிரக் கணக்கான அதிமுக தொண்டர்கள் சென்னையில் குவிந்தார்கள். கருத்து வேறுபாடுகளைக் கடந்து எதிர்க்கட்சியினரும் அவரது மறைவுக்கு வருந்தினர். சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடம் அருகிலேயே வலுவான ஆளுமையான ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. ஜெயலலிதாவின் மறைவு அரசியல் களத்தில் வெற்றிடத்தை எற்படுத்தியது.
உரத்து ஒலிக்கும் எதிர்க்குரல்
மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் 34 ஆண்டு கால ஆட்சியை தேர்தல் வெற்றியின் மூலம் 2011-ம் ஆண்டு முடிவுக்குக் கொண்டுவந்தார் மமதா பானர்ஜி. அதற்குப் பிறகு 2016-ல் நடந்த பொதுத் தேர்தலிலும் அவர் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். கடந்த ஆண்டு பிரதமர் மோடி அறிவித்த பண மதிப்பு நீக்க திட்டத்துக்கு எதிராகத் தொடர்ந்து தன் கண்டனங்களைப் பதிவுசெய்துவருகிறார்.