

சென்னை வில்லிவாக்கம் காய்கறி மார்க்கெட்டுக்குள் நுழைந்து திரும்பியதுமே எதிர்ப்படுகிறது ‘ரூட்ஸ்’ என்கிற அந்தக் கடை. அமல்ராஜ், யோக அரசகுமாரன், மணிகண்டன் மூவரும் காய்கறிகளை அடுக்கிவைப்பதிலும் வாடிக்கையாளர்களைக் கவனிப்பதிலும் மும்முரமாக இருக்கிறார்கள். அவர்களுக்கு உதவிபுரிய மணிகண்டனின் அம்மா கமலம்மாளும் ராஜசேகரின் அம்மா மல்லிகாவும் உடனிருக்கிறார்கள். தங்கள் கடையைக் கடந்து செல்கிற அனைவரையும் இன்முகத்துடன் அணுகுகிற இந்த மூவரும் Schizophrenia என்கிற மனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு, அதற்காக இப்போதும் சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று அவர்களே சொன்னாலும் நம்பமுடியவில்லை.
சமூகத்தின் பார்வையில்
மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து இந்தச் சமூகமும் ஊடகங்களும் ஏற்படுத்தி வைத்திருக்கும் பிம்பம்தான் இந்த நம்பகமின்மைக்குக் காரணம். மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்றாலே சட்டையைக் கிழித்துக்கொண்டு ஓடுவதும் பார்க்கிறவர்களை எல்லாம் அடிப்பதுமாகவே சித்திரிக்கப்பட்டிருக்கிறது. உண்மையில் மனநலம் பாதிக்கப்பட்டால் அதற்குத் தகுந்த சிகிச்சை எடுத்துக் கொண்டு அவர்களும் மற்றவர்களைப் போல் இயல்பான வாழ்க்கையை வாழலாம். மனநலப் பாதிப்பின் உச்சத்தில் சிலர் இப்படி உக்கிரமாக நடந்துகொள்ளலாம். ஆனால் அதையும் மருந்து, மாத்திரைகளின் மூலமாகக் கட்டுக்குள் வைக்கலாம்.
“மற்ற நோய்களைச் சாதாரணமாக எதிர்கொள்கிற நாம், மனநலம் பாதிக்கப்பட்டவர்களைத் தீண்டத்தகாதவர்கள் போல் ஒதுக்கி வைப்பது எந்த விதத்தில் நியாயம்? அவர்களும் மனிதர்கள்தானே?” என்று கேட்கிற பொற்கொடி பழனியப்பன், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்காக சென்னையில் ‘பெட்டர் சான்ஸஸ்’ (better chances) என்கிற அமைப்பை நடத்திவருகிறார்.
தான் நடத்துகிற அமைப்பை மறுவாழ்வு மையம் என்று சொல்வதைப் பொற்கொடி விரும்புவதில்லை. காரணம் இங்கே மன நலம் பாதிக்கப்பட்டவர்களைத் தனிமைப்படுத்தும் அறைகள் இல்லை, அவர்களைக் கட்டிலோடு கட்டிப்போட்டுச் சிகிச்சையளிக்கும் முறைகள் இல்லை. அவர்களை அவர்களின் இயல்போடு செயல்பட அனுமதிப்பதுதான் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை விரைவில் குணப்படுத்தும் மருந்து என்கிறார் பொற்கொடி.
தேவை விழிப்புணர்வு
பொதுவாகத் தங்களுக்கு ஏற்படுகிற உடல் சார்ந்த நோய்களை வெளியே சொல்கிற மக்கள், மனநலம் சார்ந்த சிக்கல் என்றால் குடும்பத்துக்குள்ளேயே மறைத்துவிடுவார்கள். இன்னும் சிலர் சமூகத்துக்குப் பயந்து பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சையளிக்கவும் வெளியே அழைத்துவர மாட்டார்கள். இப்படியான அணுகுமுறை முற்றிலும் தவறு என்று சொல்லும் பொற்கொடி, தன்னிடம் வருகிறவர்களை மூன்றாவது கோணத்தில் இருந்து அணுகுகிறார். இதுவே அவர்களை மனதளவில் மீட்டெடுக்கும் என்று உறுதியுடன் நம்புகிறார்.
“மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் தருவதுடன் அவர்கள் மனதுக்குப் பிடித்தச் செயல்களைச் செய்யச் சொல்லி உற்சாகப்படுத்தலாம். அவர்களுக்குப் பிடித்த இடங்களுக்கு அழைத்துச் செல்லலாம். அவர்களின் கற்பனைத் திறனைச் செயல்படுத்துவதற்கு வழி ஏற்படுத்தித் தரலாம்” என்று வழிகாட்டும் பொற்கொடி, தன் அமைப்பில் இருக்கிறவர்களை உற்சாகப்படுத்தப் பூங்காக்களுக்கு அழைத்துச் செல்கிறார். படம் வரையவும், கவிதை எழுதவும் உற்சாகப்படுத்துகிறார். அவர்கள் மன நலம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை அடிக்கடி நினைவுபடுத்தாமல் முடிந்தவரை அவர்களை இயல்பாக இருக்க அனுமதிக்கிறார்.
கைகொடுக்கும் காய்கறி கடை
மனநலம் பாதிக்கப்பட்டவர்களை இந்தச் சமூகத்துடன் பிணைக்கும்போதுதான் அவர்கள் தங்கள் சிக்கலில் இருந்து எளிதில் விடுபட முடியும். அதன் ஒரு கட்டமாகத் தன் அமைப்பில் இருக்கிற மூன்று பேரைத் தேர்ந்தெடுத்து அவர்களே சுயமாகக் காய்கறி கடை நடத்துகிற ஏற்பாட்டைப் பொற்கொடி செய்துகொடுத்திருக்கிறார்.
உடல் நலத்துடனும் தொடர்புடையது மன நலம். அதனால் தன்னிடம் இருக்கிற மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்குக் காய்கறி சூப் செய்துகொடுப்பது பொற்கொடியின் வழக்கம். அதற்காக அருகில் இருக்கும் வில்லிவாக்கம் காய்கறி மார்க்கெட்டுக்குச் சென்று அங்குக் கடை வைத்திருப்பவர்களிடம் காய்கறிகளைத் தானமாகப் பெறுவார்கள். அப்போது அந்தக் கடைகளை நிர்வகிப்பவரிடம் மன நலம் பாதிக்கப்பட்டவர்களை வைத்து ஒரு டீக்கடை நடத்தத் திட்டமிட்டிருப்பதாகப் பொற்கொடி சொன்னார். டீக்கடை நடத்துவது நடைமுறையில் சாத்தியம் இல்லை, அதற்குப் பதில் காய்கறி கடை நடத்தலாம் என்று அந்த நிர்வாகி சொல்ல, இனிதே தொடங்கியது வேர்களின் பயணம். ‘ரூட்ஸ்’ கடையில் இருக்கிறவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டுச் சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்பவர்கள் என்று தெரிந்தும் அக்கம் பக்கத்துக் கடைக்காரர்கள் அவர்களை அன்புடன் அணுகுகிறார்கள். இந்த அன்பும் கனிவும் தங்களுக்குப் பிடித்திருப்பதாகச் சொல்கிறார் அமல்ராஜ்.
அரசியல் ஆர்வம்
அமல்ராஜின் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் விவாகரத்தாகிவிட்டது. அம்மாவுடன் வசிக்கும் அமல்ராஜுக்கு 24 வயது. பள்ளி சென்று கொண்டிருந்தவர் திடீரென மனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டார். எப்போதும் தனிமை, மாற்றி மாற்றி பேசுவது, ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத செயல்பாடுகள் என்று இருந்தவர், தொடர்ச்சியான சிகிச்சையால் ஓரளவுக்குத் தேறிவந்தார். அப்போதுதான் ‘பெட்டர் சான்ஸஸ்’ பற்றி கேள்விப்பட்டுப் பொற்கொடியைச் சந்தித்தார். அப்போதும் அவருக்கு நம்பிக்கை இல்லாமல் முதலில் தனியாகவும் பிறகு தன் அம்மாவுடனும் வந்து அமைப்பின் செயல்பாடுகளைக் கவனித்திருக்கிறார். பிறகுதான் அமைப்பில் இணைந்தார். இப்போது இந்த அமைப்பின் நிர்வாகத்தைக் கவனித்துக் கொள்கிறார். காய்கறி கடையிலும் முழு ஈடுபாட்டுடன் பணிபுரிகிறார்.
“எனக்குப் படம் வரைவது பிடிக்கும். எங்கள் அமைப்பு இயங்கும் கட்டிடத்தில் இருக்கிற படங்கள் அனைத்தும் நான் வரைந்தவைதான்” என்று சொல்லும் அமல்ராஜுக்கு அரசியலில் ஈடுபடும் ஆசையும் இருக்கிறதாம்!
தொழிலதிபர்
கரையான்சாவடியைச் சேர்ந்த யோக அரசகுமாரனுக்குக் கவிதைகள் எழுதுவதில் அலாதிப் பிரியம். பள்ளி நாட்களில் நடந்த சில சம்பவங்களால் இவருக்குப் பேய் பிடித்துவிட்டது என்று சொல்லித் தனிமைப்படுத்தி இருக்கிறார்கள். பிறகு மன நல மையங்களில் சேர்க்க அங்குப் பூட்டிய அறைக்குள் தனிமைப்படுத்தப் பட்டிருக்கிறார். தொடர்ச்சியான சிகிச்சையால் அவற்றில் இருந்து மீண்டு வந்திருக்கும் யோகா, நிச்சயம் பெரிய தொழில்முனைவோராக மாறுவேன் என்கிறார்.
“நான் இதே போலப் பல கடைகளை நிர்வகிக்கும் முதலாளியாக மாறுவேன். என்னால் எதையும் சாதிக்க முடியும்” என்று சொல்கிற யோக அரசகுமாரனின் வார்த்தைகளில் அரச குமாரனின் கம்பீரம்!
நிலையான புன்னகை
ஐம்பது வயதாகும் மணிகண்டனுக்குப் பிளாட்பாரமே வீடு. அம்மா இருந்தாலும் எதிலுமே பற்றற்ற தன்மை. குளிக்காமல், வீட்டுக்கு வராமல் வருடக் கணக்கில் அலைந்துகொண்டிருந்தவர் இப்போது காய்கறி கடையைக் கவனித்துக் கொள்வதில் அவருடைய அம்மா கமலம்மாளுக்கு அத்தனை மகிழ்ச்சி. எதைக் கேட்டாலும் சிரிப்பைத்தான் பதிலாகத் தருகிறார் மணிகண்டன்.
“இந்தச் சிரிப்பு எப்போதும் நிலைத்திருக்க வேண்டும் என்பதுதான் எங்கள் இலக்கு. இப்படிச் சிரிக்கிற முகங்கள் அதிகரிக்க வேண்டும்” என்று பொறுப்போடும் அக்கறையோடும் சொல்கிறார் பொற்கொடி. கடையில் களைகட்டுகிறது காய்கறி வியாபாரம்!
படங்கள்: ம. பிரபு.