இசையின் மொழி: வில்லில் வழிந்தோடும் இசை

இசையின் மொழி: வில்லில் வழிந்தோடும் இசை
Updated on
1 min read

‘‘இசை இவர்களின் ரத்தத்தில் ஓடுகிறது. தாயின் கர்ப்பத்தில் இருந்தபோதே தங்களின் இசைப் பயிற்சியை இவர்கள் தொடங்கிவிட்டிருப்பார்கள்" என இசை விமர்சகர் சுப்புடுவால் பாராட்டப்பட்டவர்கள் லலிதா - நந்தினி சகோதரிகள். இசை விமர்சகர்களில் முக்கியமானவ ராக மதிக்கப்படும் மறைந்த சுப்புடுவாலேயே பாராட்டப் படுவது என்பது நிச்சயம் சாதாரணப் பாராட்டல்ல.

இசையைப் போற்றி வளர்க்கும் குடும்பத்தின் நான்காம் தலைமுறையைச் சேர்ந்த கலைஞர்கள் இவர்கள். மூன்று வயதிலேயே லலிதா - நந்தினி சகோதரிகளுக்குக் கைவசமான வாத்தியம் வயலின். காரணம் வீட்டில் திரும்பிய பக்கமெல்லாம் ஒலித்தது வில்லின் ஓசை. இவர்களுடைய தாய்மாமன்கள்தான் பிரபல இசைக் கலைஞர்களான எல்.வைத்தியநாதன், எல். சுப்பிரமணியம், எல்.ஷங்கர்.

இருவரும் இணைந்து அளிக்கும் இசை நிகழ்ச்சிகளைத் தவிர, ஷாகித் பர்வேஸ், கார்ல் ரேத்தஸ், ஃபாசல் குரேஷி, பாஸ்பேலா ஸ்டிரிங் ஆர்கெஸ்ட்ரா, ரோணு மஜூம்தார், தருண் பட்டாச்சார்யா, மன்னார்குடி வாசுதேவன், எல்.வைத்தியநாதன் சகோதரர்கள் போன்ற பலதரப்பட்ட இசை கலைஞர்களுடன் இணைந்து இவர்கள் வயலின் வாசித்துள்ளனர்.

‘மேற்கத்திய இசையையும் கர்னாடக இசையையும் வயலினில் வாசிப்பதில் இருக்கும் நுணுக்கங்கள்' என்னும் தலைப் பில் ஆய்வு செய்து, முனைவர் பட்டம் பெற்றிருப்பவர் லலிதா.

தகவல் அறிவியல், இந்திய இசை, எத்னோ மியூசிகாலஜி ஆகிய பிரிவுகளில் முதுகலைப் பட்டம் பெற்றிருப்பவர் நந்தினி.

சோனி, காஸ்மிக், ஹெச்.எம்.வி. போன்ற முன்னணி நிறுவனங்கள் இவர்களுடைய இசை ஆல்பங்களை வெளியிட்டிருக்கின்றன.

நிகழ்த்து கலைஞர்களுக்கு அமெரிக்காவில் வழங்கப்படும் ஃபுல்பிரைட் கல்வி உதவித் தொகையை லலிதா பெற்றிருக்கிறார். லண்டனில் நிகழ்த்து கலைகளுக்காக வழங்கப்படும் உயரிய அங்கீகாரமான சார்லஸ் வாலஸ் ஃபெல்லோஷிப்பை நந்தினி பெற்றிருக்கிறார். இந்தியாவின் கலாச்சாரத் தூதுவர்களாக அமெரிக்காவிலும் லண்டனிலும் லலிதாவும் நந்தினியும் இசையை வழங்கி இருக்கிறார்கள்.

மியூசிக் அகாடமியின் விருதும் தமிழக அரசின் கலைமாமணி முதலான பல விருதுகளை இருவரும் பெற்றிருக்கிறார்கள்.

இந்திய இசை மரபிலும் மேற்கத்திய, ஈரானியன், பெர்ஷியன், ஸ்பானிஷ் போன்ற இசை வடிவங்களிலும் தங்களின் திறமையை வயலின் வழியாக ஒலித்துக்கொண்டிருக்கிறார்கள், இந்தச் சகோதரிகள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in