இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம்!

இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம்!
Updated on
3 min read

சிலிர்ப்பூட்டும் சாகசப் பயணம்

“பயணம் பெரும் வரம். தேடல் நிறைந்த பயணம் தேனினும் சுவை நிறைந்தது. பேராசானைப் போலப் பாடங்கள் புகட்டுபவை. சிறகற்ற மனிதனையும் காற்றில் பறக்கச் செய்பவை. புதியன‌ படைப்பவை. மாற்றங்களைத் தருபவை. பயணத்தின் வல்லமையை அறிய, நீ பயணித்துதான் ஆக வேண்டும். இப்போதே தீ மூட்டு. எல்லா ஆற்றலும் உன்னிடமே இருக்கிறது. இப்போதே பறந்து போ!” என அமெரிக்க கவிஞன் பீட்டர் வில்டர் பாடுவார். ஆம், பயணம்தான் எல்லாம்.

அழகு தேசத்தில் நெடும் பயண‌ம்

கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் அரங்கேறிவரும் பெண்களுக்கு எதிரான கொடூர வன்முறைகள், உலக அரங்கில் இந்தியாவுக்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளன. இதை மையப்படுத்தி போட்டி நாடுகளும், பெரும் நிறுவனங்களும் மேற்கொள்ளும் பிரச்சாரத்தால் இந்தியாவின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்பட்டுள்ளது. என் தாய்நாடு பெண்களுக்குப் பாதுகாப்பான நாடு என்பதை உலகுக்கு உணர்த்தும் நோக்கில், இந்தியா முழுக்கப் பயணிக்க முடிவு செய்தேன்.

ஜனவரி 26, 2016 அன்று காலை, சற்றே தயக்கமான மனநிலையுடன் மெரினா கடற்கரையில் தொடங்கி பாண்டிச்சேரி வழியாக‌ தமிழகம் முழுக்க வலம் வந்தேன். வழியில் தென்பட்ட அற்புதமான மனிதர்கள் தந்த அபார நம்பிக்கையுடன் கேரளம், கர்நாடகம், தெலங்கானா, ஆந்திரம், ஒடிஷா, மேற்கு வங்கம், பிஹார், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், மகாராஷ்டிரம், குஜராத், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட் என அடுத்தடுத்த மாநிலங்களை நோக்கித் துணிச்சலுடன் பயணித்தேன். சரியாக 110 நாட்களில் 16 மாநிலங்களில் உள்ள 150 நகரங்கள் வழியாக 32,079 கி.மீ. தூரத்தைக் கடந்திருக்கிறேன். கடைசியாக உத்தராகண்டை முடித்துவிட்டு, பெங்களூருவை அடுத்துள்ள நந்திமலைக்குப் பறந்து வந்த‌ எனக்கு நண்பர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

நல்ல சமாரியர்களுக்கு சமர்ப்பணம்

இயற்கை எழிலுடன் பரந்திருக்கும் இந்தியாவில் ஒவ்வொரு 300 கி.மீ. தூரத்தைக் கடக்கும்போதும் புதிய‌ மொழி, புதிய‌ மனிதர்கள், புதிய‌ கலாச்சாரம், புதிய‌ பண்பாடு, புதிய உணவுமுறை எனப் புதிய உலகமே விரிந்திருக்கிறது. இந்த 16 மாநிலங்களில் எத்தனை எத்தனை வண்ணங்கள், புதுவிதமான காட்சிகள், நுட்பமான கலைகள், வெள்ளந்தி கதைகள், அழகொழுகும் தனித்துவ அடையாளங்கள்! ஆச்சரியக் குறிகளாய் நடமாடும் ஒவ்வொருவரும் பயணத்தில் ஏற்பட்ட களைப்பையும், அத்தனை வலியையும் மாயமாக்கிவிட்டார்கள். கொளுத்தும் வெயிலும், வாட்டும் குளிரும், புதுக் காற்றும் என்னை ஒன்றுமே செய்யவில்லை.

இந்த‌ நீண்ட பயணத்தை நான் மட்டுமே முடிவு செய்திருந்தாலும் வழி நெடுக என்னை வழிநடத்தியது வழியில் சந்தித்த நல்ல சமாரியர்கள்தான். பாதை தவறிய போது வழிகாட்டி, தாகத்துக்கு நீர் கொடுத்து, பசிக்கு உணவிட்டு, உறங்க இடமளித்து, என்னை பத்திரமாக இலக்கை அடைய வைத்தது முகம் தெரியாத மனிதர்கள்தான். சாதி, மதம், இனம், மொழி, பாலினம் என எதையும் பார்க்காமல் என்னைப் பாதுகாப்புடன் வழிநடத்தினார்கள். தனியொரு பெண்ணாக இந்தியாவில் அதிக தூரம் மோட்டார் சைக்கிளில் பயணித்ததால் ‘இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’-ல் இடம்பிடித்திருக்கிறேன்.

அதற்கான சான்றிதழும், பட்டயமும் என்னை தேடிவந்தபோது அப்பாவும், அம்மாவும் ஆனந்த‌ கண்ணீர் சிந்தினார்கள். இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸை ‘தற்கொலை எதற்கும் தீர்வல்ல’ என்ற நோக்கத்துக்காகப் பயணிக்கும் சனா இக்பாலுக்கும், இந்தியாவின் பண்பாட்டை பிரபலப்படுத்த பயணிக்கும் கேன்டிடா லூயிஸுக்கும் சமர்ப்பித்தேன். இந்த இரு லேடி பைக்கர்களும் எனக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் தூண்டுதலாக இருக்கிறார்கள்.

இதையடுத்து நீண்ட தூரம் பயணித்து இந்திய மக்களிடையே நட்புறவை ஏற்படுத்திய ஐ.எஃப்.எம்.ஆர் (இன்டர்நேஷனல் ஃபெல்லோஷிப் ஆஃப் மோட்டார்சைக்ளிங் ரோட்டரியன்) என்ற உயரிய அங்கீகாரமும் தேடிவந்தது.

தெய்வமான பெண், ஏன் அடிமையானாள்?

தெற்கே கன்னியாகுமரியில் தொடங்கி வடக்கில் ஹரித்துவார்வரை மொழி எல்லைகளைக் கடந்து பயணித்தேன். வாழும் ஊர், பாயும் நதி, பாதுகாப்பு அரணாக நிற்கும் மலைகள், வணங்கும் தெய்வம் என எல்லாவற்றிலும் பெண்ணே நிறைந்திருக்கிறாள். பண்டைய இலக்கியத்தில் தொடங்கி, தொன்மையான பண்பாட்டுக் கூறுகள்வரை பெண்மை போற்றப்படுகிறது. நிகழ்காலத்தில் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும், திறமையிலும் பெண் ஜொலிக்கிறாள். சகல துறைகளிலும் நிகரற்று ஆள்கிறாள். ஆனாலும் பெண் ஏன் அடிமையானாள்?

இந்திய எல்லைகளை ஊடறுத்துப் பார்த்ததில், நம்முடைய சமூகம் சாதிக் கட்டமைப்பிலே கட்டப்பட்டிருக்கிறது. மேல் சாதியாகச் சொல்லப்படும் சாதியில் பிறந்த ஆண், பெண்ணை இழிவுப்படுத்துகிறான். கீழ் சாதி ஆணும் பெண்ணை ஒடுக்குகிறான். நகர வாசனையே படாத தண்டகாரண்யக் காட்டில் வாழும் பழங்குடி ஆணும் பெண் மீது அதிகாரம் செலுத்துகிறான். நம் சமூகத்தில் சாதி, மத, இனம், மொழி ரீதியாக எல்லாவற்றிலும் அதிகமாக ஒடுக்கப்பட்டவளாகப் பெண்ணே இருக்கிறாள்.

காலங்காலமாகப் பெண் மீது அளவற்ற அடக்குமுறை கையாளப்பட்டுள்ளது. காலங்கள் மாறி பெண் அடுக்களை விட்டு வெளியே வந்து படித்து, சுதந்திரப் பறவையாக வேலைக்குச் செல்கிறாள். தனக்கான உடை, உடைமை, துணை என எல்லாவற்றையும் பெண்ணே தேர்வு செய்கிறாள். அதனை ஆண் தடுக்கும்போது, பெண் எதிர்க் கேள்வி கேட்பதால் தாக்குதல் தொடங்குகிறது. அடி, உதையில் தொடங்கி பாலியல் வன்முறை, கொலை வரை நீள்கிறது.

பழமைவாதத்திலும், அறிவற்றச் செயல்பாடுகளிலும் மூழ்கியுள்ள இந்தியச் சமூகத்தில் மாற்றத்தைப் பெண்களால் மட்டுமே கொண்டுவர முடியும்.

சுதந்திர காற்றைச் சுவாசிப்பேன்

‘நட்சத்திரங்களை நோக்கிப் பயணம் செய். ஒருவேளை நட்சத்திரங்களை அடைய முடியாவிட்டாலும் குளிர்ச்சியான நிலவில் போய் குடியேறலாம்’ என்பார்கள். கின்னஸ் சாதனையை நோக்கித் தொடங்கப்பட்ட எனது பயணத்தின் பாதியிலேயே, அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனியாக 78 ஆயிரம் கி.மீ. தூரத்தைக் கடந்து புதிய இலக்கை நிர்ணயித்தார். எனவே எனது 32 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் என்பது கின்னஸ் சாதனையை அடையவில்லை. இதனால் எனக்குத் துளியும் வருத்தமில்லை. ஏனென்றால் 18 ஆண்டு காலம் பள்ளியிலும், கல்லூரியிலும் நான் கற்றுக்கொண்டதைவிட இந்தப் பயணத்தில் நிறையக் கற்றுக்கொண்டேன். இயற்கையையும், மக்களையும், மொழியையும், வரலாறையும் பண்பாட்டையும் படித்தறிந்த பெருமிதத்தோடு இருக்கிறேன்.

நீண்ட பயணத்தால் என் வாழ்வின் நிறம் மாறியிருக்கிறது. கவலைகள் காற்றிலே பறந்துவிட்டன. தனியாகக் கடைக்குப் போகவே பயப்பட்ட நான், இன்று இந்தியாவை தைரியமாக வலம்வந்திருக்கிறேன். பெண் என்பதால் எனக்கு பைக் மறுக்கப்பட்டது. இன்று பைக் ரைடர் என்பதே என் அடையாளமாக மாறிவிட்டது. இலக்கை அடையும்வரை பயணிப்பேன். இறுதி மூச்சிருக்கும் வரை பயணித்து, சுதந்திர காற்றைச் சுவாசித்துக்கொண்டே இருப்பேன்!

(நிறைந்தது)

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in