

‘துணிச்சலே அழகு’ (Bold is Beautiful) என்ற பிரச்சாரத்தைக் கடந்த ஆண்டு தொடங்கியது ‘அனுக்’(Anouk) என்ற ஆடை நிறுவனம். இந்தப் பிரச்சாரத்துக்காக இதுவரை ஐந்து குறும்படங்களை வெளியிட்டிருக்கிறது இந்நிறுவனம். இந்த ஐந்து குறும்படங்களுமே இன்றைய பெண்கள், பிரச்சினைகளைத் துணிச்சலுடன் எதிர்கொள்வதைப் பதிவுசெய்திருக்கின்றன. இந்தப் பிரச்சார வரிசையில் சமீபத்தில் வெளியான குறும்படம் ‘தி மூவ்’ (The Move). இந்தக் குறும்படம் திருமணமான பெண்களின் பணிவாழ்க்கைத் தேர்வின் முக்கியத்துவத்தைப் பேசுகிறது.
கணவரின் பணிவாழ்க்கைக்கு முன்னுரிமை கொடுத்தே, ஒரு திருமணமான பெண் தன் பணி வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும் என்று காலங்காலமாகச் சமூகத்தில் நிலவிவரும் கருத்தை இந்தக் குறும்படம் இயல்பாக உடைத்திருக்கிறது. திருமணத்துக்குப் பிறகு, பெண்கள் பணிவாழ்க்கைக்கு ஏன் முன்னுரிமை கொடுக்கக் கூடாது என்ற கேள்வியையும் இந்தக் குறும்படம் முன்வைத்திருக்கிறது.
ஓர் இளம் தம்பதியின் உரையாடலுடன் தொடங்குகிறது ‘தி மூவ்’ குறும்படம். டெல்லியில் பணிமாற்றம் கிடைத்துச் செல்லும் பிரதிமாவுடன் அவளுடைய கணவன் அஜயையும் அழைத்துச் செல்வதாக முடிவு செய்யப்படுகிறது. ஆனால், புறப்படுவதற்குச் சில நாட்களுக்கு முன்னர் தனக்குப் பதவி உயர்வு கிடைக்கவிருப்பதால் தன்னால் டெல்லி வர முடியாது என்று தெரிவிக்கிறார் அஜய். அத்துடன், எல்லா மனைவிகளும் கணவருடன்தான் பயணம் செய்வார்கள் என்ற கருத்தையும் தெரிவிக்கிறார். ஆனால், பிரதிமா “எல்லாரும் நானும் ஒன்றல்ல. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், உன்னுடைய பணிக்காகத்தான் இந்த நகரத்துக்கு மாற்றலாகி வந்தோம். இந்த முறை என்னுடைய பணிவாழ்க்கை எனக்கு முக்கியம்” என்கிறார். கடைசியில், பிரதிமா தன் பணிவாழ்க்கைக் கனவைத் துணிச்சலுடன் பின்தொடர்வதாக முடிவடைகிறது இந்தக் குறும்படம்.
இரண்டு நிமிடங்கள், நாற்பத்து நான்கு நொடிகள் ஓடும் ‘தி மூவ்’ குறும்படம், திருமணமான பெண்கள் பணிவாழ்க்கைக்கு முன்னுரிமை கொடுப்பதைக் கொண்டாடியிருக்கிறது. அதுவும் எந்தவித ஆர்ப்பாட்டமும், எதிர்மறைக் கருத்துகளும் இல்லாமல் மிக இயல்பான ஓர் உரையாடலில் பெண்கள் பணிவாழ்க்கையைத் தேர்வு செய்வதில் இருக்கும் நியாயத்தை உணர்த்தியிருக்கிறது. திருமண பந்தத்தில், ஆணின் பணிவாழ்க்கைக்குக் கொடுக்கப்படும் முன்னுரிமை பெண்ணின் பணிவாழ்க்கைக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்பதை ‘தி மூவ்’ விளக்கியிருக்கும் விதம் பல தரப்புகளிலிருந்தும் பாராட்டுகளைப் பெற்றிருக்கிறது.
இதற்குமுன், பெண்களைக் கேலிசெய்வதை எதிர்ப்பது, பெண்களின் உறவு தேர்வு, பணியிடத்தில் கருவுற்றிருக்கும் பெண்கள் சந்திக்கும் பாரபட்சம், தனித்து வாழும் தாய் எதிர்கொள்ளும் கேள்விகள் போன்ற தலைப்புகளில் குறும்படங்களை ‘அனுக்’ வெளியிட்டிருக்கிறது.
‘தி மூவ்’ குறும்படத்தைப் பார்க்க: https://www.youtube.com/watch?v=OwbfFZiHxOA