

கடந்த நவம்பர் 19 அன்று, பாரதிய மஹிளா வங்கி, மும்பையில் தொடக்கிவைக்கப்பட்டது. இந்த வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பதவியை ஏற்றுள்ள உஷா அனந்த சுப்பிரமணியன் ஒரு தமிழர். வங்கித் துறையில் ஆழ்ந்த அனுபவம் கொண்ட இவர் அனைத்து மகளிர் வங்கியின் மூலம் பல புதுமையான விஷயங்களைச் செய்துவருகிறார்.
கிராமப் பகுதிகளில் வசிக்கும் ஏழைப் பெண்களுக்குக் கடன் வழங்கி உதவுவதும், பெண்களுக்கான சட்டப்பூர்வமான உரிமையை அவர்களுக்கு உணர்த்திடச் செய்வதுமே எனது முன்னுரிமை என்கிறார் உஷா. தாய்வழிச் சமூக அமைப்பு நிலவும் கேரளா, மேகாலயா நீங்கலாகப் பெரும்பாலான மாநிலங்களில், பெண்களின் பெயரில் சொத்துக்கள் அதிகம் இருப்பதில்லை. கிராமப் பெண்களும் சொத்துக்களை சொந்தமாகப் பெறுவதற்கான உரிமையை ஊக்குவிக்கச் செய்வதே என் முக்கியப் பணி என்று உறுதியாகச் சொல்கிறார்.
வீடு தேடிவரும் வங்கி
அண்மையில் உத்தரப்பிரதேசம் லக்னோவிற்குச் சென்றிருந்தபோது அங்குள்ள கிராம மக்களுக்கு பெண்ணுரிமையின் கருத்தையும் அதன் அவசியத்தையும் உஷா எடுத்துரைத்திருக்கிறார். அவர்கள் சொந்தக் காலில் நிற்பதற்கு ஏதுவாக, சுமார் 10 பெண்களைக் கொண்ட ஒரு குழுவினருக்கு வங்கிக் கடன் வழங்கியிருக்கிறார். “கஸ்டமர்கள்தான் வங்கிகளைத் தேடிப் போவார்கள்; ஆனால் எனது திட்டத்தின்படி, வங்கித் துறையினரே கஸ்டமர்களிடம் நேரடியாகச் சென்று உதவுகிறார்கள். இது மகளிர் வங்கியின் சிறப்பு அம்சம்” என்கிறார்.
வங்கிக்குச் சென்று பணம் போடுவது, பணத்தை எடுப்பது ஆகியவற்றைப் படிப்பறிவில்லாத கிராமத்து ஏழைப் பெண்களுக்கு நேரில் சென்று கற்றுத்தருவது இந்த வங்கியின் முயற்சிகளில் ஒன்று.
வணங்கும் வழிகாட்டிகள்
உங்கள் வாழ்க்கையில் உத்வேகம் அளித்தவர்கள் யார் என்றால் ஜே.ஆர்.டி. டாடா, லேடி சிவஸ்வாமி ஐயர் பெண்கள் உயர்நிலைப்பள்ளி நிறுவனர் சிவஸ்வாமி ஐயர் ஆகியோரைச் சொல்கிறார். “டாடாவைப் பற்றிய பல புத்தகங்களைப் படித்திருக்கிறேன். அவரின் சொற்பொழிவுகளைக் கேட்டிருக்கிறேன். அவரின் அடக்கமும், மனிதத்தன்மையும் என் மனதைத் தொட்டுவிட்டன” என்கிறார்.
தான் படித்த லேடி சிவஸ்வாமி ஐயர் பெண்கள் உயர்நிலைப் பள்ளியின் நிறுவனர் சிவஸ்வாமி ஐயரின் மகத்தான தியாகத்தை நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்கிறார். “இந்தப் பள்ளி, கொஞ்ச காலம் நிதி வசதி குன்றி நலிந்திருந்தது. குழந்தைகளின் கல்வியைக் கருதி, பிரம்மாண்டமான தமது சொந்த வீட்டை சிவசைலம் என்பவரிடம் விற்றுவிட்டார். அதில் கிடைத்த பணத்தை வைத்துப் பள்ளியைத் தொடர்ந்து நடத்தினார். வீட்டை விற்று அதில் கிடைத்தத் தொகையில் ஒரு பகுதியை அடையார் புற்றுநோய் சிகிச்சை நிலையத்துக்குத் தானமாக வழங்கினார். பெண் கல்விக்கு முதலிடம் தந்து, பெரிய அரண்மனையாகத் திகழ்ந்த தனது இல்லத்தையே விற்றுவிட்ட அவர் என்னைப் பொறுத்தவரை, ஒரு தியாகச் செம்மல்” என்கிறார் உஷா.
அண்மையில் அந்தப் பள்ளி நிர்வாகத்தினர் பூர்வ வித்யார்த்தினி ரத்னா என்ற விருதை இவருக்கு வழங்கினார்கள். “எனக்கு மறக்க முடியாத ஒரு நிகழ்ச்சி அது” என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார் உஷா.
இசை ஆர்வம்
விரிவான வாசிப்பும் புதிய மொழிகளைக் கற்றுக்கொள்வதும்தான் இவரது பொழுதுபோக்கு. கர்நாடக சங்கீதத்தை முறைப்படி கற்றிருக்கும் இவர், வீணை வாசிப்பதிலும் தேர்ச்சிபெற்றவர். எம்.எஸ். சுப்புலக்ஷ்மி, எம்.எல். வசந்தகுமாரி ஆகியோரின் இசை அமுதத்திற்கு உஷா அடிமை.