முகங்கள்: நம்பிக்கை இருந்தால் விருட்சமாக வாழலாம்!

முகங்கள்: நம்பிக்கை இருந்தால் விருட்சமாக வாழலாம்!
Updated on
1 min read

நாம் விருப்பப்பட்டுக் கற்றுக் கொள்ளும் விஷயங்கள்கூட நம் வாழ்க்கையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளார் பரத நாட்டிய ஆசிரியர் ஹேமலதா சுவாமிநாதன்.

தன்னுடைய பரத நாட்டிய குருவான வசந்தி செல்லப்பா நடத்திவரும் நிர்தியா நாட்டியப் பள்ளியில் இருபது வருடங்களாகப் பரதம் கற்றுக் கொடுத்துவருகிறார்.

“பொதுவாகப் பரத நாட்டியம் கற்றுக்கொள்ள நினைப்பவர்கள் சிறு வயதிலிருந்தே நாட்டிய வகுப்புகளுக்குச் சென்று பயிற்சி பெறுவார்கள். ஆனால், நான் கல்லூரி இறுதி ஆண்டின்போதுதான் ஏதோ ஆர்வத்தால் பரத நாட்டியம் கற்றுக் கொண்டேன். தற்போது அதுவே என் அடையாளமாக மாறிவிட்டது” என்று சொல்லும் ஹேமலதா வாழ்க்கையில் எதிர்கொண்ட சில சம்பவங்கள், அவரைப் பெரும் துயரத்தில் தள்ளிவிட்டன. துயரங்களிலிருந்து முழுமையாக அவரை வெளிக் கொண்டுவர உதவியது பரதக் கலைதான். எந்தக் கஷ்டமாக இருந்தாலும் மனதையும் உடலையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள பரத நாட்டியம் உதவுகிறது என்கிறார் ஹேமலதா.

“இன்று நான் யாரையும் எந்தச் சூழ்நிலையிலும் சார்ந்திருக்க வேண்டிய நிலை உருவாகவில்லை. தனித்து வாழ நேரிடும் பெண்களுக்கு வாழ்க்கை திடீரென்று சூனியமாக மாறிவிடுகிறது. அடுத்த என்ன செய்வது என்ற கேள்வி விஸ்வரூபம் எடுத்து முன்னால் நிற்கிறது. தன்னம்பிக்கை இருந்தால் துன்பத்திலிருந்து விடுபட்டு, நம் வாழ்க்கையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் சென்றுவிட முடியும். தனித்து வாழும் பெண்களுக்குக் கைத்தொழில் தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஏதோ ஒன்றைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் நம்பிக்கையும் இருந்தாலே வாழ்க்கையைப் புதிய இடத்திலிருந்து தொடங்க முடியும். மற்றவர் முன்னிலையில் விருட்சமாக வாழ்ந்து காட்ட முடியும்” என்கிறார் இவர்.

“சில புத்தகங்களில் முதல் சில பக்கங்கள் பிடிக்காமல் போகலாம். ஆனால், அதற்குப் பிறகு வரும் பக்கங்கள் மிக சுவாரசியமாக அமையலாம். அதுபோலதான் வாழ்க்கையும். முதல் பகுதி ஏமாற்றத்தைக் கொடுத்தாலும் இறுதியில் பிரகாசமான வாழ்க்கை இருக்கும் என்ற நம்பிக்கையில் இலக்கை நோக்கிப் பயணித்தால் கம்பீரமாக வாழலாம்” என்கிறார் ஹேமலதா.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in