போகிற போக்கில்: மன அமைதி தரும் ஓவியங்கள்

போகிற போக்கில்: மன அமைதி தரும் ஓவியங்கள்
Updated on
2 min read

குடும்பத் தலைவி, பள்ளி ஆசிரியர் என இரண்டு பொறுப்புகளிடையே பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறார் சென்னையைச் சேர்ந்த பூர்ணிமா. கடினமான வேலைப் பளு அவரைச் சூழ்ந்துகொண்டிருந்தாலும் அதிலிருந்து மீள உதவியாக இருப்பது அவருடைய ஓவியங்கள்தான்.

சிறுவயதில் பொழுதுபோக்குக்காக ஆரம்பித்த ஓவியக் கலை, தற்போது பூர்ணிமாவின் தீவிர ஆர்வமாக மாறிவிட்டது. ஓவியங்கள் மட்டுமில்லாமல் காகிதங்களைக்கொண்டு கைவினைப் பொருட்களைச் செய்வது, இவரின் தனித்திறமைகளில் ஒன்று. பென்சில் ஓவியம், கண்ணாடி ஓவியம், இயற்கை நிலக் காட்சிகள், பட்டு நூலில் செய்யப்படும் கம்மல், நெக்லஸ், பழைய நாளிதழ்களைக்கொண்டு செய்யப்படும் காகித கிராப்ட் என அவருடைய கலைப் படைப்புகளின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.

பரம்பரைத் தொடர்ச்சி

“என்னுடைய சொந்த ஊர் செய்யாறு. கூட்டுக் குடும்பமாக வசித்த என்னுடைய வீட்டில் பள்ளி விடுமுறை நாட்களில் குழந்தைகள் எப்போதும் ஓடியாடி விளையாடிக்கொண்டே இருப்போம். இதில் எங்களை ஒரே இடத்தில் உட்கார வைக்கும் விஷயம் என்றால், அது ஓவியம்தான். அப்போது ஒரு விளையாட்டு போலதான் ஓவியம் வரையக் கற்றுக்கொண்டேன். எங்கள் சகோதரிகளில் யார் முதலில் வரைந்து முடிப்பது என்ற போட்டியில், வெற்றிபெற வேண்டும் என்பதற்காகவே ஓவியங்களைச் சீக்கிரமாக வரைந்து முடித்துவிடுவேன். என்னுடைய அப்பாவிடம்தான் ஓவியம் கற்றுக்கொண்டேன். அவரும் ஓவியர் என்பதால், எனக்கு ஓவியம் வரைவது இயல்பாக இருந்தது” என்கிறார்.

தற்போது ஓவியக் கலையில் டிப்ளமோ படித்துள்ள பூர்ணிமா, தனியார் பள்ளி ஒன்றில் கணிதம், கணினி அறிவியல் பாடங்களைக் கற்பித்துவருகிறார். “வேலை டென்ஷன், குடும்பத்தில் ஏதேனும் பிரச்சினை என்றால், அதிலிருந்து விடுபட எனக்கு உதவியாக இருப்பவை ஓவியங்கள்தான். ஓவியம் வரையத் தொடங்கியதும் என் முழுக் கவனமும் அதிலேயே சென்றுவிடும். இதனால் மன அழுத்தம் குறைந்து இயல்புக்கு வந்துவிடுவேன். மனதும் லகுவாகிவிடும்.அடுத்ததாக, தஞ்சை ஓவியங்களை வரைய வேண்டும் என்ற ஆசை உள்ளது. அதற்கான முயற்சி விரைவில் கைகூடும் என நம்புகிறேன்” என்கிறார் உற்சாகமாக.

படங்கள்: எல். சீனிவாசன்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in