

இனி அடுத்தடுத்து பண்டிகைகள் வரிசைகட்டி வரத் தொடங்கும். அந்தப் பண்டிகை நாட்களில் வழக்கமாக சர்க்கரையைச் சேர்த்துச் செய்யும் இனிப்புகளைத் தவிர்த்து, சிறு தானியங்களான தினை, வரகு, கம்பு இவற்றுடன் வெல்லம், பனங்கற்கண்டு சேர்த்து இனிப்புப் பலகாரம் செய்து கொடுக்கலாம். இது பாட்டி கால சமையல் முறை என்றாலும் இன்றைய தலைமுறையின் ஆரோக்கியத்திற்கு ஏற்றது.
கொள்ளை வறுத்து, பொடி செய்து வைத்துக் கொண்டால் சாதத்தில் பிசைந்து சாப்பிட, இட்லி, தோசைக்குத் தொட்டுக்கொள்ள, நினைத்தாற்போல் சட்டென்று கொள்ளு ரசம் வைக்க வசதியாக இருக்கும். கொள்ளு, நம் உடலில் தேவையற்ற கொழுப்பைக் குறைப்பதோடு, ஊளைச்சதையையும் குறைக்கக் கைகொடுக்கும்.
• பீட்ரூட், கேரட், முள்ளங்கி ஆகியவற்றின் மேல் பகுதியில் இருக்கும் கீரையைப் பருப்புடன் சேர்த்து பொரியல் செய்து சாப்பிடலாம். இந்த இலைகளில் சத்துகள் நிறைந்திருக்கின்றன.
• சுண்டைக்காயுடன், வெங்காயம், பூண்டு, தக்காளி ஆகியவற்றைச் சமஅளவு சேர்த்து நல்லெண்ணெயில் புளிக்குழம்பு செய்து சர்க்கரை நோயாளிகளுக்குக் கொடுத்தால், சர்க்கரையைக் கட்டுக்குள் வைக்கலாம்.
• இஞ்சியைக் கேரட் துருவியில் துருவி வெயிலில் காயவைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும். டீ போடும்போது டீத்தூளோடு இந்தத் துருவலையும் கொஞ்சம் சேர்த்து கொதிக்கவைத்து வடிகட்டி குடித்தால் டீ மணமாக இருப்பதுடன், மழைக்காலங்களில் தொண்டை கரகரப்புக்கு இதமாகவும் இருக்கும். சர்க்கரைக்குப் பதிலாகப் பனங்கற்கண்டு அல்லது கருப்பட்டியைச் சேர்த்துக்கொண்டால் இன்னும் ஆரோக்கியம்.
• இட்லி மாவுடன், ஜவ்வரிசி குருணையைச் சேர்த்து அரைத்தால் இட்லி வெள்ளை வெளேரென்று மல்லிகைப்பூ போல வரும்.
- சுமதி ரகுநாதன், கோவை-36