

ஓய்வுபெற்ற நீதிபதி சித்ரா வெங்கட்ராமன் ‘பெண்களும் தலைமைப் பண்பும்: சாத்தியமான மறுசீரமைப்பு’ என்ற தலைப்பில் பெங்களூரு தொழில்துறை மற்றும் வர்த்தக சேம்பர் ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் கலந்துகொண்டு பேசினார்.
சமீபத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டில் பேசிய முன்னாள் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சித்ரா, வழக்கறிஞராக இருந்த ஆரம்ப கால நாட்களை நினைவுகூர்ந்தார்.
“ஜுனியர் வழக்கறிஞரான முதல் நாளிலேயே ஒரு வழக்கில் மாற்று ஏற்பாடு செய்யச் சொல்லிக் கேட்டேன். ஆனால், எனக்கு எதிர் தரப்பில் வாதாடிய ஓர் ஆண் வழக்கறிஞர் அதே வழக்கை ஒத்திவைக்கச் சொல்லிக் கேட்டார். அந்த வழக்கின் நீதிபதி, ‘ஐந்து ஆண்டுகளாக வழக்கறிஞராக இருக்கிறீர்கள். ஏன் உங்களால் இந்த வழக்கை சரியாகக் கையாள முடியவில்லை?’ என்று கேட்டது இன்னமும் நினைவிருக்கிறது. அந்த வழக்கைக் கையாண்ட வழக்கறிஞர் என்னிடம் அத்தனை மரியாதையாக நடந்துகொள்ளவில்லை” என்று தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார் அவர்.
அத்துடன், தலைமைப் பண்பைப் பறைசாற்றும் மூன்று உதாரணங்களை அவர் இந்த மாநாட்டில் விளக்கினார். அதில் பாலியல் வன்புணர்வால் பாதிக்கப்பட்ட சுனிதா கிருஷ்ணனுடனான தன் சந்திப்பை முக்கியமான நிகழ்வாக எடுத்துரைத்தார்.
“அவரை ஒரே ஒரு முறை சந்தித்திருக்கிறேன். அவர் மிகவும் உற்சாகமானவர். போராட்ட குணம் அவர் இயல்பிலேயே இருக்கிறது” என்று சொன்னார்.
தற்போது 45 வயதாகும் சுனிதா கிருஷ்ணன், பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படும் பெண் களுக்காகப் ‘பிரஜ்வாலா’ என்ற அமைப்பை ஹைதரா பாத்தில் நடத்திவருகிறார். அவரது அமைப்பு இதுவரை 2000-க்கும் மேற்பட்ட பெண்களைப் பாலியல் தொழிலில் இருந்து மீட்டிருக்கிறது.
இந்த மாநாட்டில் ‘இந்தியாவின் பணியிடங்களில் பெண்கள் முன்னேற்றம்’ என்ற தலைப்பில் நடத்தப்பட்ட ஆய்வறிக்கையும் வெளியிடப்பட்டது.