

‘மனிதன் சுதந்திரமாகப் பிறக்கிறான். ஆனால் அவன் எப்போதும் பலவிதமான சங்கிலிகளால் பிணைக்கப் பட்டிருக்கிறான்’ என்பார் பிரெஞ்சு தத்துவஞானி ரூசோ. அதாவது, சமூகத்தில் ஒரு தனி மனிதர் உயிர் வாழ்வதற்குப் பல்வேறு விஷயங்களைச் சார்ந்திருக்க வேண்டியுள்ளது என்பதை விளக்கவே அவர் இப்படிச் சொன்னார்.
அதுபோலவே, இயற்கையிலும் நிறைய சங்கிலித் தொடர்கள் இருக்கின்றன. ஒவ்வொரு உயிரும் இன்னொரு உயிரைச் சார்ந்தே வாழ முடியும். மனிதச் செயல்பாடுகளால் நிலம், நீர், வானம், வனம் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதிப்புகளால் உணவுச் சங்கிலி, உறைவிடச் சங்கிலி எனப் பல சங்கிலித் தொடர்கள் அறுந்திருக்கின்றன; அறுந்துவருகின்றன. இப்படியொரு சங்கிலித் தொடர் உடைவதைப் பார்த்த ஒரு பெண், பிற்காலத்தில் இருண்ட கண்டத்தின் ஒளி விளக்காகச் சுடர்விட்டுப் பிரகாசித்தார்!
ஆகச் சிறந்த வரவேற்பு
ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள நாடுகளில் ஒன்று கென்யா. அங்கு 1940-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி கிக்குயூ எனும் பழங்குடி இனத்தில் பிறந்தார் வங்காரி. அந்த இனத்தில் குழந்தைகள் பிறக்கும்போது ஒரு நடைமுறை பின்பற்றப்படுகிறது. குழந்தை பிறந்தவுடன், பிரசவத்தில் ஈடுபட்ட பெண்கள் தங்கள் தோட்டங்களுக்குச் சென்று சில வாழைப் பழங்களை மண்ணில் புதைத்துவிட்டு வருவார்கள். சில நாட்களுக்குப் பிறகு, அந்தப் பழங்கள் தோண்டியெடுக்கப்படும். நன்கு கனிந்த அந்தப் பழங்களை, குழந்தையைப் பெற்றெடுத்த பெண்ணுக்குத் தருவார்கள். அதை உண்ணும் அந்தப் பெண், தன் எச்சிலில் சிறு பங்கை தன் குழந்தைக்கு ஊட்டிவிடுவாள். குழந்தைக்குக் கொடுக்கப்படும் முதல் இணை உணவே இதுதான். ஒரு குழந்தையை, அது சார்ந்திருக்கும் நிலத்துக்கு அறிமுகப்படுத்த இதைவிடவும் சிறந்த நடைமுறை எதுவும் உள்ளதா? வங்காரியும் இப்படித்தான் பூமிக்கு வரவேற்கப்பட்டார்.
பெயரைப் பயன்படுத்த நிபந்தனை
வறுமை உள்ளிட்ட பல்வேறு தடைகளைத் தாண்டி, கால்நடைத் துறையில் ஆய்வு செய்து தனது 31-ம் வயதில் முனைவர் பட்டம் பெற்றார். கிழக்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்காவிலிருந்து முனைவர் பட்டம் பெற்ற முதல் பெண் வங்காரி மாத்தாய். மூன்று குழந்தைகளை வைத்துக்கொண்டு இவ்வளவு சின்ன வயதில் முனைவர் பட்டம் பெறுவது பெரிய விஷயம். ஆனால், இன்று இருப்பது போலத் தகவல் தொழில்நுட்ப வசதிகள் அன்று இல்லாத காரணத்தால், அந்தப் பெருமை கென்யாவைக்கூடத் தாண்டியிருக்குமா என்பது சந்தேகம்தான்!
கருத்து வேறுபாடுகள் காரணமாக தனது 39-வது வயதில் தன் கணவர், வாங்கி மத்தாயிடமிருந்து விவகாரத்துப் பெறும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.
பசுமைப் பட்டை பெண்
வங்காரி, தன் ஆய்வுப் படிப்புக் காலத்தில் கென்யாவின் பல கிராமங்களுக்குச் சென்றார். அங்கெல்லாம் மக்கள் சத்துக் குறைபாட்டுடன் இருப்பதைக் கண்டார். அது ஏன் என்று யோசித்தபோது, அவருக்கு இயற்கையின் சங்கிலித் தொடர் புலப்பட்டது.
சத்தான உணவைச் சமைப்பதற்குத் தேவையான விறகுகள் கிடைப்பதில்லை. காரணம் மரங்கள் இல்லை.
ஏன் மரங்கள் இல்லை? மரங்கள் வளர்வதற்குத் தேவையான மண் வளம் இல்லை.
ஏன் மண் வளம் இல்லை? மண் அரிப்பு.
ஏன் மண் அரிப்பு? மரங்கள் அதிகளவில் வெட்டப்படுவதால்.
ஏன் மரங்கள் வெட்டப் படுகின்றன? ஏனென்றால், மனிதனின் பேராசை.
இப்படியொடுரு சங்கிலித் தொடர்பைக் கண்ட வங்காரி, ‘பசுமைப் பட்டை இயக்க’த்தைத் தொடங்கினார். மரங்கள் நடுவதும் அவற்றைப் பராமரித்துப் பாதுகாப்பதுமே இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கம். மரங்கள் அதிக அளவில் இருந்தால், சத்தான உணவைச் சமைப்பதற்கு விறகுகள் கிடைக்கும். மரங்கள், கால்நடைகளுக்குத் தீவனத்தையும் தரும். மரங்கள், பறவைகளுக்கும் மனிதர்களுக்கும் அடைக்கலம் தருவதுடன், நீர்ப்பிடிப்புப் பகுதிகளைப் பாதுகாக்கவும், மண் அரிப்பைத் தடுக்கவும் செய்யும். மொத்தத்தில் மரங்கள், நிலத்தின் காயங்களுக்கு மருந்தாக அமையும்.
இந்தக் கருத்துகளை முன்வைத்து தன் இயக்கத்தை கென்யா முழுவதும் கொண்டு சென்றார். பிறகு, ஆப்பிரிக்காவின் இதர நாடுகளுக்கும் அது பரவி, இறுதியில் உலகம் முழுவதும் இந்த இயக்கம் ஆழமாக வேர் விட்டது. இந்த இயக்கத்தின் மூலம் கோடிக்கணக்கான மரங்கள் நடப்பட்டிருப்பதோடு, மரங்கள் வெட்டப்படுவதும், காடுகள் அழிக்கப் படுவதும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. இவரின் பணிகளைப் பாராட்டி 2004-ம் ஆண்டு இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. அந்த அறிவிப்பு வந்தபோது, ஒரு மரக்கன்றை நட்டு ‘நாம் எவ்வளவு உயர்ந்தாலும், நாம் வந்த வேர்களை மறக்கக் கூடாது’ என்று தன் மகிழ்ச்சியை வங்காரி வெளிப்படுத்தினார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு வழியாக அமைதியை நிலைநாட்டுவதற்காக அமைதி நோபல் பரிசு வழங்கப்பட்ட முதல் நபர் இவர்.
அடக்கிய ஆணாதிக்கம்
இந்தப் பணிகள் எல்லாவற்றையும் பல்வேறு சிக்கல்களுக்கு இடையில்தான் மேற்கொண்டு வந்தார் வங்காரி மாத்தாய். அந்தச் சிக்கல்களில் முதன்மையானது, கென்யா அரசு! 1979-ம் ஆண்டு முதல் 2002-ம் ஆண்டுவரை கென்யாவின் இரண்டாவது அதிபராக இருந்தவர் டேனியல் அரப் மோய். கொடுங்கோல் ஆட்சி புரிந்தவர்.
தனக்கும் சுற்றுச்சூழல் மீது கரிசனம் உண்டு என்பதைக் காட்டிக்கொள்ளும் விதமாக, சுதந்திர கென்யாவின் வரலாற்றில் முதன்முறையாக, கள்ள வேட்டையாடப்பட்ட யானைத் தந்தங்களைப் பொதுவெளியில் வைத்து எரித்தவர் இந்த மோய். இப்படிப்பட்டவர் வங்காரிக்கு வழங்கிய பரிசு, சிறை வாழ்க்கை. எதற்கு? மரங்கள் வெட்டப்படுவதைத் தடுத்ததற்கு. இந்தப் பின்னணியில் இயற்கையைச் சீரழிக்கும் ஆணாதிக்கத்துக்கு எதிராகவே வங்காரியின் பசுமைப் பட்டை இயக்கத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
“தொடர்ந்த கைது, சிறை ஆகியவற்றால் என்னைக் கோபப்படுத்தவும் பயமுறுத்தவும் அவர்கள் முயன்றார்கள். என்னைக் கோபப்படுத்திய அவர்களால், என்னைப் பயமுறுத்த முடியவில்லை” என்று அரச பயங்கரவாதத்துக்குத் தலைவணங்காத வணங்காமுடியாக உயர்ந்து நின்றார் வங்காரி.
மர வளர்ப்பில் பெண் தன்மை
இந்த இயக்கத்தின் ஆரம்ப காலத்தில், ‘மரம் வளர்க்க டிப்ளமோ படிப்பு தேவை. படிக்காத பழங்குடிப் பெண்களுக்கு என்ன தெரியும்?’ என்று கேள்வி எழுப்பினர் அரசு வனத்துறை அதிகாரிகள். இதனால் சோர்வடைந்த பெண்களுக்கு வங்காரி தந்த பதில்: உங்களிடம் உள்ள பெண் தன்மையை மர வளர்ப்பில் பயன்படுத்துங்கள். ஆம், உங்கள் வீட்டின் சமையலறையில் கையாளும் அவரை விதைகளைப் போன்றவைதான் இந்த விதைகள். மண்ணில் விதையுங்கள். அவை நல்ல விதையாக இருந்தால் மரம் வளரும். இல்லாவிட்டால் வளராது. அவ்வளவுதான் அறிவியல்!
தன் வாழ்க்கையையும் பணியையும் ‘அன்பௌட்’ எனும் தலைப்பில் சுயசரிதையாக எழுதிய மாத்தாய் 2011-ம் ஆண்டு செப்டம்பர் 25-ம் தேதி இறந்தார். கிக்குயூ இனத்தில் யாரேனும் ஒருவர் இறந்தால், ‘நீ உறங்கும் இடத்தில் மழை பெய்யட்டும்’ என்று வாழ்த்துவது உண்டு. மழைக்கு ஆதாரமாக இருக்கும் மரங்களை வளர்க்கச் சொல்லிப் பணியாற்றிய வங்காரி மாத்தாய் உறங்கும் இடத்தில், மழை பெய்துகொண்டுதானே இருக்கும்!