முகங்கள்: எதையும் சாதிக்கும் துணிவு

முகங்கள்: எதையும் சாதிக்கும் துணிவு
Updated on
1 min read

பள்ளி செல்லும் வயதில் திருமணம். வாழ்க்கையென்றால் என்னவென்று தெரியாத வயதிலேயே வரிசையாக நான்கு குழந்தைகள். பொறுப்பேற்க வேண்டிய கணவன் வீட்டுக்கே வராமல் கிடக்க, என்ன செய்திருப்பார் அந்தப் பெண்?

திரும்பிய திசையெல்லாம் வாழ்க்கை வறுத்தெடுக்க, எதற்கும் அசைந்துகொடுக்காமல் உறுதியோடு நின்றார். கிடைத்த வேலையைச் செய்து குடும்ப பாரத்தைத் தன் தோளில் ஏற்றிக்கொண்டார். நான்கு குழந்தைகளையும் நல்லமுறையில் படிக்க வைத்துக்கொண்டிருக்கிறார்.

அமுதாவின் கதையைக் கேட்கிற யாருக்கும் தன்னம்பிக்கையின் அளவு அதிகரித்துவிடும். கடலூர் மாவட்டம் தியாகவல்லி கிராமத்தைச் சேர்ந்த அமுதா, நாகை மாவட்டம் சீர்காழி வட்டத்துக்கு 1985-ம் ஆண்டு வாக்கப்பட்டு வந்தார். விவசாயக் கூலித் தொழிலாளியான கணவன், வேலை முடிந்து குடியோடுதான் வீடு திரும்புவார். எப்போதாவது கணவன் கொண்டுவரும் பணத்தை வைத்து குடும்பத்தை நடத்தினார் அமுதா. இதற்கிடையில் மூன்று மகள்களும், ஒரு மகனும் பிறந்தனர்.

“பசங்க வளர்ந்த பிறகும் அந்த மனுஷன் திருந்தலை. பிள்ளைங்க செலவுக்காக நான் வச்சிருக்கிற பணத்தையும் எடுத்துக்கிட்டுப் போயிடுவாரு. கொடுக்கலன்னா சமைச்சு வச்சிருக்கிற சாப்பாடு, சாமான் செட்டையெல்லாம் தூக்கி தெருவில வீசிடுவாரு. பாதி நாள் காலைலை சாப்பிடாம பள்ளிக்கூடம் போற பிள்ளைங்க அங்க மதிய சாப்பாடு சாப்பிட்டுக்கும். இப்படி பசியும் பட்டினியுமாவே குடும்பம் இருந்துச்சு” என்று சொல்லும் அமுதா, கணவனை நம்பிப் பயனில்லை என்று முடிவெடுத்து வயல் வேலைக்குச் சென்றார்.

அதன் பிறகு அந்தக் குடும்பத்தினரால் பசியாறச் சாப்பிட முடிந்தது. வயல் வேலை இல்லாத நாட்களில் வீட்டு வேலை, கட்டிட வேலை என்று கிடைக்கிற வேலைகளைச் செய்தார். அமுதாவின் ஓய்வில்லாத உழைப்பின் விளைவால் மூத்த மகள் இலக்கியா டிப்ளமோ பிரிவில் நர்சிங் முடித்துவிட்டு தற்போது பயிற்சி செவிலியராக பெங்களூரூவில் பணிபுரிகிறார். இரண்டாவது மகள் தரணியம்மாள், பி.ஏ. படிக்கிறார். வழக்கறிஞராக ஆக வேண்டும் என்பது தரணியம்மாளின் லட்சியம். மற்ற இரண்டு குழந்தைகளும் பள்ளியில் படிக்கிறார்கள்.

“ரெண்டு நாள் சம்பளத்தை வச்சுத்தான் புத்தகப்பையை வாங்க முடியுது. ஒரு வார சம்பளத்தை எடுத்து வச்சுதான் புத்தக செலவைச் சமாளிக்கணும். பணம், காசு இல்லைன்னு புள்ளைங்க படிப்பை நிறுத்திட முடியுமா?” என்று கேட்கிறார் நந்தினி. அது நம் அனைவருக்குமான கேள்வி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in