

வாள் சண்டை என்றால் மன்னர் காலத்து சண்டைக் காட்சிகள் நினைவுக்கு வரலாம். ஆனால் இப்போதும் ஒலிம்பிக்கில் வாள் சண்டைக்கென தனிப் போட்டியுள்ளதென்றும் அதில் இது வரை இந்தியாவிலிருந்து ஒருவர் கூட கலந்து கொண்டதில்லை என்பது உங்களுக்கு தெரியுமா?
ஒலிம்பிக்கில் வாள் சண்டையில் கலந்து கொண்ட முதல் இந்தியர் என்ற பட்டத்தையும் முதல் இந்திய பெண் என்ற பட்டத்தையும் பவானி தேவியால் கண்டிப்பாக தட்டிச் செல்ல முடியும் கொஞ்சம் பணம் இருந்தால்.
பணம் இல்லாததால் பயிற்சி கிடைக்கவில்லை
சென்னையைச் சேர்ந்த பவானி தேவி தனது எட்டாவது வயதிலிருந்து வாள் பயிற்சி மேற்கொண்டு இது வரை பல போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகள் வென்றிருக்கிறார். இவரது திறமையைக் கண்டு வாள் சண்டை பிரபலமான இத்தாலி நாட்டைச் சேர்ந்த பயிற்சியாளர் அவருக்கு ஆறு மாதம் பயிற்சி அளிப்பதாக கூறியிருக்கிறார். ஆனால் அதற்கு ஆறு லட்சம் ரூபாய் செலவாகும். செப்டம்பர் மாதம் கொரியாவில் நடக்கவிருக்கும் ஆசிய சேம்பியன்ஷிப் போட்டிக்கான பயிற்சி முகாம் தொடங்கி ஒரு மாதமாகியும் இன்னும் பவானியால் இத்தாலி செல்ல இயலவில்லை. இதே காரணத்தால் கடந்த இரண்டு மாதங்களாக நடந்த நான்கு சர்வதேச போட்டிகளில் பவானியால் கலந்து கொள்ள இயலவில்லை.
”உலகின் சிறந்த பயிற்சியாளர்களுள் ஒருவரான நிக்கோலா, தானே முன்வந்து எனக்கு பயிற்சி அளிப்பதாக கூறியுள்ளார். ஆனால் என்னால் செல்ல முடியவில்லை. இது போன்ற சர்வதேச பயிற்சி பட்டறைகளில் கலந்து கொண்டால் தான் ஒலிம்பிக்கில் வெல்ல முடியும். மேலும், விளையாட்டின் புது விதிகள், புது யுக்திகள் ஏதேனும் இருந்தால் அதை பழகிக் கொள்ள முடியும்,”என்கிறார் 20 வயதான பவானி.
சென்னை ராயபுரத்தில் வசிக்கும் பவானியின் தந்தை ஒரு புரோகிதர். அவருக்கு இரண்டு அண்ணன், மற்றும் இரண்டு அக்காக்கள் உள்ளனர். ”எங்களால் முடிந்தவரை பவானிக்கு இது வரை செலவு செய்து விட்டோம். இனி யாராவது உதவினால் தான் அவளால் தொடர முடியும்,” என்கிறார் அவரது அம்மா ரமணி.
வாள் சண்டை ஆர்வம்
இந்தியாவில் பிரபலமடையாத வாள் சண்டை மீது எப்படி ஆர்வம் வந்தது என்று பவானியிடம் கேட்ட போது, “ எனது பள்ளியில் வாள் சண்டைப் பயிற்சி கற்றுக் கொடுத்தார்கள். அப்போதிலிருந்தே இதன் மீது ஆர்வம் வளர தொடங்கியது. பள்ளி முடித்த பிறகு வெளியில் பயிற்சி மேற்கொண்டேன். ஆனால் தமிழ்நாட்டில் பயிற்சியளிப்பவர்கள் பலர் இல்லாததால் கேரளாவில் சாய் என்ற விளையாட்டு பயிற்சி மையத்தில் தங்கி பயின்று வருகிறேன்,” என்கிறார்.
வாள் சண்டையில் சேபர், ஃபாயில், எப்பி என்று மூன்றுஸ்டையில்கள் உள்ளன. இதில் பவானி பயில்வது சேபர். இதில் வாளை கொண்டு எதிரியின் உடலில் மேற் பாகங்களை மட்டுமே தாக்கக்கூடும்.
சர்வதேச பரிசுகள்
2007-ம் ஆண்டு டர்கியில் நடந்த சர்வதேசப் போட்டியில் கலந்து கொண்டார். 2008-ல் மலேசியாவில் நடந்த ஆசிய சேம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்றார். 2010 மற்றும் 2012-ல் நடந்த சர்வதேச போட்டிகளிலும் வெண்கலம் வென்றுள்ளார். இது தவிர தேசிய ஜீனியர் மற்றும் சீனியர் பிரிவுகளில் பரிசுகள் வென்றுள்ளார். 2012 ஒலிம்பிக்ஸில் கலந்து கொள்வதற்கான தகுதிச் சுற்று ஜப்பானில் நடந்தது. அதில் 9வது இடம் பிடித்த பவானி இரண்டு புள்ளிகளில் ஒலிம்பிக்கை வாய்ப்பை இழந்து விட்டார்.
உலக தரப்பட்டியலில் 357வது இடத்திலிருந்து தற்போது 116வது இடத்தை பிடித்துள்ளார் பவானி. 32-வது இடத்துக்குள் வந்து விட்டால் ஒலிம்பிக்கில் பங்கேற்பது நிச்சயம். இந்த முறை அந்த இடத்தை எப்படியும் பிடித்து விட வேண்டும் என்று தீவிரமாக இருக்கிறார் பவானி.
போராடி வரும் வீராங்கணை
ஆனால் இத்தனை வெற்றியும் எளிதாக கிடைத்தவிடவில்லை. ஒவ்வொரு முறையும் வாழ்வா சாவா என்ற போராட்டம் தான் என்கிறார் பவானி. “சர்வதேசப் போட்டியில் கலந்து கொள்ளும் பதிவு செய்வதற்கான கடைசி தேதிக்குள் ஸ்பான்சர்ஸ் கிடைக்குமா கிடைக்காதா என்ற அச்சம் எப்போதும் தொக்கிக் கொண்டு நிற்கும். ஸ்பான்சர்ஸ் கிடைக்கும் முன்பே வரை பதிவு செய்து, பின்பு ஸ்பான்சர்ஸ் கிடைக்காமல் போட்டியில் கலந்து கொள்ளவில்லை என்றால், அதற்காக அபராதம் செலுத்த வேண்டும். தகுதிச் சுற்றில் தேர்ந்தெடுக்கப்பட்டும் பணம் இல்லாததால் பல போட்டிகளில் கலந்து கொள்ளாமல் இருந்திருக்கிறேன்,” என்கிறார் பவானி.
எவ்வளவு போராட்டங்களின் பவானியின் திறமை உலகளவில் பல சந்தர்பங்களில் பலரின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. ” இத்தாலியில் நடந்தப் போட்டியில் ஒரு முறை பதிவு செய்வதற்கான கடைசி தேதி முடிந்து விட்டது. ஆனால் யாருக்கும் தரப்படாத விலக்கு எனக்காக அளிக்கப்பட்டு என்னைப் போட்டியில் கலந்து கொள்ள அனுமதித்தனர். இத்தாலி பயிற்சியாளர் கூட தாமாகவே முன் வந்து தான் கற்று தர சம்மதித்திருக்கிறார்.” என்கிறார் பவானி.
தமிழக முதல்வருக்கு கோரிக்கை
பவானிக்கு தமிழக அரசிடமிருந்து 2007–ம், 2008–ம் ஆண்டு நிதியுதவி கிடைத்துள்ளது. ஒலிம்பிக்கில் இந்தியாவின் முதல் வாள் வீராங்கணை என்ற பட்டத்தை கைக்கு எட்டும் தூரத்தில் வைத்துக் கொண்டு காத்திருக்கும் பவானிக்கு தமிழக முதல்வர் ஏதேனும் உதவி செய்தால் ஒரு சாதனைக்கு வித்திட்தாக இருக்கும். “அம்மா எங்களுக்கு ஏற்கெனவே உதவி செய்திருக்கிறார். பவானி கேரளாவில் பயின்றாலும் அவளுக்கு எந்த உதவியானாலும் அவர் செய்வதாக உறுதியளித்திருந்தார். அவரை நேரில் சந்திக்க பல முறை முயன்றும் இயலவில்லை. அவரை பார்க்க வாய்ப்பு கிடைத்தால் அவர் எங்களுக்கு கண்டிப்பாக உதவுவார் என்று நம்பிக்கை இருக்கிறது,” என்று கோருகிறார் அவரது தாய்.