கணவனே தோழன்: கல்லுக்குள் ஈரம் அவர்

கணவனே தோழன்: கல்லுக்குள் ஈரம் அவர்
Updated on
1 min read

என்னவர் ரங்கநாதன் மற்றவர்களின் பார்வைக்கு முசுடு, கோபக்காரர். ஆனால் கல்லுக்குள் ஈரமாக அவருக்குள் புதைந்திருக்கும் அன்பு நெருங்கியவர்கள் மட்டுமே அறிந்த ரகசியம். பெண்களுக்கு மட்டும்தான் இளகிய இதயமா, நானும் தாயுமானவன்தான் என்று உணர்த்தக்கூடிய அன்பு அவருடையது!

பத்தாம் வகுப்பு முடித்த நான் 17 வயதில் இவரைக் கைப்பிடித்தேன். என் ஆர்வம் என்ன என்பதை உணர்ந்து தையற்கலை, அழகுக்கலை, கைவினைப் பொருட்கள் செய்வது, பெயிண்டிங் என அனைத்தையும் கற்றுக்கொள்ளத் துணையிருந்தார்.

பிரசவ சமயத்தில் என் பெற்றோரும் உடன்பிறப்புகளும் என்னுடன் இருக்க முடியாத சூழல். ஆனால் அந்தக் குறையே எனக்குத் தெரியாத விதத்தில் என் கணவர் எனக்குச் செய்த பணிவிடைகளும் கொடுத்த அரவணைப்பும் வார்த்தைகளால் சொல்லிவிட முடியாதவை.

சில வாரங்களுக்கு முன்பு நாங்கள் எங்கள் திருமண வெள்ளிவிழாவைக் கொண்டாடினோம். எனக்கு ஏதாவது என்றால் அவரால் தாங்கிக்கொள்ள முடியாது. என்னமோ, ஏதோவென குழம்பித் தவிக்கும் அவரது மன ஓட்டத்தை அவரது செயல்களிலேயே கண்டுபிடித்துவிடுவேன்.

அன்பை வெளிப்படுத்தும் வழி அவருக்குத் தெரியாது. ஆனால், அவரைப் போல அன்பு கொண்டவர் யாரும் இருக்க முடியாது. இன்று நான் அழகுக்கலை நிபுணராக இருக்கிறேன், எனது படைப்புகள் வார இதழ்களில் வெளிவருகின்றன. பள்ளி, கல்லூரி மேடைகளில் உரையாடுகிறேன். இந்த முன்னேற்றத்துக்கும் அடையாளத்துக்கும் என் ஆர்வம் மட்டுமே காரணமல்ல. அதைச் செயல்படுத்தத் துணையாக இருந்த என்னவருக்குத்தான் அதில் அதிக பங்கு உண்டு.

- டி. ஜெயபாரதி, சென்னை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in