Last Updated : 23 Sep, 2018 04:05 PM

 

Published : 23 Sep 2018 04:05 PM
Last Updated : 23 Sep 2018 04:05 PM

மாற்றத்தை நோக்கி: பகுத்தறிவுக்கு மரியாதை!

தந்தை பெரியாரின் 140-வது பிறந்தநாளைப் பலரும் பலவிதமாகக் கொண்டாட, ‘நன்செய்’ பதிப்பகத்தினரோ காலத்தின் தேவை கருதி, ‘லட்சியப் பெரியார் லட்சம் கைகளில்’ என்ற முழக்கத்தோடு கொண்டாடிவருகிறார்கள்.

பெரியாரின் ‘பெண் ஏன் அடிமையானாள்?’ என்ற முக்கியமான நூலைப் பத்து ரூபாய்க்குப் பதிப்பித்து, பெரியாரின் பிறந்தநாளையொட்டி செப்டம்பர் மாதம் முழுவதும் தமிழகமெங்கும் ஒரு லட்சம் நபர்களிடம் கொண்டுசேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.  குறிப்பாக, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடம் கொண்டுசேர்ப்பதை முதன்மையாகக் கருதுகின்றனர்.

பெண்களுக்குச் சமவாய்ப்புகள் மறுக்கப்பட்டு, கல்வி, வேலை, சுயமரியாதை எனப் பல அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட காலத்தில் அதிகாரத்துக்கும் பழமைவாதத்துக்கும் எதிராக உரத்துக் குரல் எழுப்பியவர் பெரியார். சமூகமாற்றத்தை ஒவ்வொரு வீட்டிலிருந்தும் அவர் எதிர்பார்த்தார். குறிப்பாக, பெண்களிடமிருந்தே அந்த மாற்றம் தொடங்க வேண்டுமென நினைத்தார்.

ஒரு சமூகத்தின் வலிமை என்பது மனிதனின் பாரபட்சமற்ற சம உரிமைதான், அந்த வகையில் நம் சமூகம் நெடுங்காலமாகத் தன் வலிமையை இழந்துவருகிறது. பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளுக்கும் அடக்குமுறைகளுக்கும் சமூகம் கட்டமைத்து வைத்திருக்கும் புனிதங்களுக்கு எதிராகவும் குரல்கொடுத்தவர் பெரியார். பெண்கள் மீது திணிக்கப்படும் புனிதங்களை முற்றிலும் நிராகரித்தார்.

காலத்துக்கேற்ப நவீன வாழ்க்கைக்கு நாம் மாறினாலும் பெண்கள், சிறுமிகள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறையும் பெண்ணடிமைத்தனமும் ஒழிந்தபாடில்லை. இந்தக் காலத்தில்தான் பெரியார் அவசியம் தேவைப்படுகிறார். அவரை இன்னும் நெடுந்தூரம் கொண்டுசெல்ல வேண்டியுள்ளது.

இதில் பெண்கள் அவர்களின் நிலையைப் புரிந்துகொள்வதைவிட ஆண்கள், பெண்களைப் புரிந்துகொள்வது அவசியம். அதனால்தான் ஒரு லட்சம் பேரிடம் பெரியாரின் புத்தகத்தைக் கொண்டுசேர்க்கும் பணியில் ‘நன்செய்’ பதிப்பகம் ஈடுபட்டுவருகிறது. 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x