Last Updated : 30 Sep, 2018 03:50 PM

 

Published : 30 Sep 2018 03:50 PM
Last Updated : 30 Sep 2018 03:50 PM

முன்னோடிப் பெண்கள்: காந்தி இட்ட தீ

இந்தியாவில் அரசியலிலும்  சேவையிலும் பெண்களைப் பெருந்திரளாக ஈடுபடுத்திய முதல் தலைவர் காந்தி. ஆணுக்குத் துணையான பெண்ணுக்குச் சுதந்திரத் திலும் சமஉரிமை உண்டு என்று அவர் கருதினார். அவர் நடத்திய சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறை சென்ற 30 ஆயிரம் பேரில் 17 ஆயிரம் பேர் பெண்கள்.

அவர் நடத்திய சட்டமறுப்பு இயக்கத்தில்தான், கல்வி தொடங்கி வாழ்க்கையின் சகல அம்சங்களிலும் உரிமை மறுக்கப்பட்டிருந்த பெண்கள் வீட்டைவிட்டு வெளியே வந்து பெரும் எண்ணிக்கையில் பங்குபெற்றனர்.

அதனால்தான் சுதந்திரப் போராட்டத்தை முன்னின்று நடத்திய தலைவராக மட்டுமல்ல, பெண்களை வீட்டுத்தளையிலிருந்து விடுவித்த சீர்திருத்தவாதியாகவும் அவர் கருதப்படுகிறார். காந்தியின் தாக்கத்தால் பொது வாழ்வுக்கும் சேவைக்கும் தங்களை அர்ப்பணித்த நால்வர் இவர்கள்: 

சுசிலா நய்யார்

காந்தியின் அந்தரங்கச் செயலராக இருந்த பியாரேலால் நய்யாரின் தங்கை இவர். தற்போது பாகிஸ்தானில் இருக்கும், பஞ்சாபின் கஞ்சாஹ் பகுதியில் 1914-ல் பிறந்தார். டெல்லி லேடி ஹார்டிஞ்ச் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்த சுசிலா, 25 வயதில் சேவையாற்றுவதற்காகத் தன் அண்ணனுடன் சேவா கிராமத்துக்கு வந்தார்.

வார்தா பகுதியைத் தாக்கிய கொள்ளை நோய் காலராவை ஒற்றை மருத்துவராக சுசிலா நய்யார் உறுதியாகக் கையாண்டதைப் பார்த்து காந்தி அவரைத் தனது தனி மருத்துவராக நியமித்தார். வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறை சென்றார். காந்தியின் படுகொலைக்குப் பிறகு அமெரிக்காவுக்குச் சென்று மேற்கல்வி படித்த சுசிலா நய்யார், பொது மருத்துவத்தில் இரண்டு பட்டங்களைப் பெற்றார்.

1950-ல் இந்தியாவுக்குத் திரும்பி பரிதாபாத்தில் காசநோய் மருத்துவமனையை நிறுவினார். காந்தி நினைவு தொழுநோய் அறக்கட்டளை ஒன்றின் தலைவராகவும் இருந்தார். 1952-ல் தேர்தல் அரசியலில் நுழைந்து டெல்லி சட்டமன்ற உறுப்பினரானார். மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இரண்டு முறை பதவி வகித்திருக்கிறார்.

இந்திரா காந்தியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஜனதா கட்சிக்குச் சென்றார். ஒரு கட்டத்தில் அரசியலிலிருந்து விலகி சேவைக்குத் திரும்பினார். 1969-ல் மகாத்மா காந்தி இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்சஸ் அமைப்பை ஆரம்பித்தார்.

கடின உழைப்பு, ஆசை துறப்பை அடிப்படை யாகக் கொண்ட காந்தியநெறியால் தாக்கம் பெற்றவர் சுசிலா நய்யார். மதுவிலக்கு மட்டுமே ஏழைப் பெண்களை வறுமையிலிருந்தும் வன்முறையி லிருந்தும் விடுவிக்கும் என்பதில் நம்பிக்கை கொண்டு அது தொடர்பான செயல்பாடுகளிலும் ஈடுபட்டவர்.

குடும்பக் கட்டுப்பாடு ஏழைப்பெண்களின் வாழ்வில் தன்னிறைவை ஏற்படுத்தும் என்று பிரச்சாரம் செய்தவர். இளம் வயதிலேயே காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டுத் திருமணம் செய்துகொள்ளாமல் அவரது நெறிகளைத் தனது வாழ்க்கையாகவே மாற்றிக்கொண்டார்.

உயர் சாதி, வர்க்கத்தில் பிறந்த சுசிலா நய்யார் தனது பின்னணி சார்ந்த எல்லா மேட்டிமைத்தன்மையையும் களைந்து, எல்லாப் பணிகளும் மேன்மையானதே என்பதைத் தன் மருத்துவ வாழ்க்கை வாயிலாக நிரூபித்தவர்.  

சுசிலா நய்யாரின் காலத்தில்தான், இந்திய அரசின் மிகச் சிறந்த ஆரோக்கிய நலத் திட்டங்களும் முக்கியமான மருத்துவக் கல்வி நிலையங்களும் தொடங்கப்பட்டன. அவர் மத்திய அமைச்சராக இருந்தபோது மலேரியா கட்டுப்பாடு, பால்வினை நோய்கள், காசநோய், தொழுநோய் போன்றவற்றுக்குச் சிறந்த பொது சிகிச்சை நிலையங்கள்  தொடங்கப்பட்டன.

சரளா தேவி சௌதாரினி

இந்தியத் துணைக் கண்டத்தில் முதல் பெண்கள் அமைப்பான ‘பாரத் ஸ்திரீ மகாமண்டல் அமைப்பை ஆரம்பித்த சரளா தேவி எழுத்தாளர், பாடகர், அரசியல் போராளி என்று பலமுகங்களைக் கொண்டவர். செல்வாக்கு மிகுந்த வங்காளக் குடும்பத்தில் 1872-ல் பிறந்த சரளா தேவி, ரவீந்திரநாத் தாகூரின் உறவினர்.

saralajpgright

பனாரஸ் காங்கிரஸ் மாநாட்டில் ‘வந்தே மாதரம்’ பாடலின் முதல் இரண்டு வரிகளை மட்டுமே தாகூர் பாடினார். மிச்ச வரிகளை சரளா தேவி பாடினார். சரளா தேவியின் அம்மா ஸ்வர்ணகுமாரி தேவி வங்காளத்தின் முதல் தலைமுறை நாவலாசிரியர் களில் ஒருவர். இந்தியாவில் பெண் கல்விக்கு இன்று ஏற்பட்டிருக்கும் முக்கியத் துவம், வளர்ச்சிக்கு அடிப்படை யான காரணிகளில் சரளா தேவியும் ஒருவர்.

1901-ல் 29 வயதில் இந்திய தேசிய காங்கிரசுக்காக எழுதப்பட்ட பாடலுக்கு இசையமைத்துக் கொண்டிருந்த தருணத்தில் காந்தியை முதல்முறையாகச் சந்தித்தார். ஆனால், ஜாலியன் வாலாபாக் படுகொலைக்குப் பிறகு, லாகூருக்குச் சென்ற காந்தி, சரளா தேவியின் வீட்டில் தங்கிய போதுதான் அவர்களுக்கிடையே நட்பு ஏற்பட்டது.

தைரியம், சாகசம், சேவை சார்ந்ததாக நம் வாழ்க்கையை அர்த்தப் படுத்திக்கொள்ளும்போது எதற்கும் அச்சப்படத் தேவையில்லை என்பதைத் தனது வாழ்க்கைநெறியாகவே வைத்திருந்தவர் சரளா. உடலுறுதியும் ஆரோக்கியமும் அர்த்தமிக்க வாழ்க்கையை நடத்துவதற்கான அடிப்படைகள் என்பதை  காந்தியிடம் கற்றுக்கொண்டவர்.

சுதேசி இயக்கத்தில் இந்தியப் பொருட்களை வாங்க பெண்களை ஊக்குவித்தவர். சரளா தேவி, இந்திய சுதந்திரம் கிடைப்பதற்கு இரண்டு ஆண்டுகளே இருந்த நிலையில் 72 வயதில் உயிர் நீத்தார். இந்தியா கண்ட முதல் பெண்ணியப் போராளிகளில் ஒருவராக அவர் என்றும் நினைவுகூரப்படுவார்.

ஷோபனா ரானடே

ஆதரவற்ற பெண்களின் மேம்பாட்டுக்காகத் தன் வாழ்வையே அர்ப்பணித்த ஷோபனா ரானடே 1924-ல் பிறந்தவர். 18 வயதில் ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டம் நடைபெற்ற காலத்தில், புனேயில் இருந்த ஆகாகான் மாளிகையில் காந்தியைச் சந்தித்ததுதான் அவரது வாழ்வையே மாற்றியது. மகாத்மா காந்தி, வினோபாபாவே இருவரது சிந்தனைகளைத் தனது வாழ்நெறியாகத் தேர்ந்தெடுத்துக்கொண்டார் ஷோபனா.

shobanajpg

1955-ல் அசாமுக்கு நகர்ந்த அவர், ‘சிசு நிகேதன்’ என்ற பள்ளியைத் தொடங்கினார். திக்பாய் எண்ணெய் நகரத்தில் முதல் குழந்தை நல மையத்தையும் உருவாக்கினார். பெண்கள் மேம்பாட்டுக்காக நாகலாந்தின் பழங்குடி கிராமங்களிலும் அருணாச்சலப் பிரதேசத்திலும் பணியாற்றினார்.

கஸ்தூர்பா காந்தி தேசிய அறக்கட்டளையின் அறங்காவலராகப் பெண்கள் மேம்பாடு, தன்னிறைவு, சமத்துவம், கல்விப் பணி ஆகியவற்றில் தொடர்ந்து ஈடுபட்டார். ஆதரவற்ற குழந்தைகள், ஏழைக் குழந்தைகள், சாலைவாழ் குழந்தைகளின் ஆரோக்கியம், கல்விக்கான சேவைகளில் ஈடுபட்டார்.

‘ஆஸ்ரம் பேக்கரி யூனிட்’ என்ற பிரிவை ஏற்படுத்தி வேளாண்மை, காய்கறி பயிரிடுதல், தையல், மாவுத் தயாரிப்பு, உணவுப் பொருள் உற்பத்தி, நகைத் தொழில் போன்றவற்றில் பெண்களை ஈடுபடுத்தினார்.

‘பால்கிராம் மகாராஷ்டிரா’ என்ற பெயரில் மகாராஷ்டிர மாநிலத்தில் எஸ்ஓஎஸ் குழந்தைகள் கிராமத்தைத் தொடங்கினார். அவர் வழியில் சாலைவாழ் குழந்தைகளின் கல்வி, மறுவாழ்வுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ‘தி ஹெர்மன் மீனர் சமூக மையம்’ இன்றும் உயிர்ப்புடன் இருக்கிறது.

காந்தியைத் தனது இளம்வயதில் சந்தித்த ஆகாகான் மாளிகையை மையமாக வைத்தே இன்னும் தனது பணிகளை ஷோபனா ரானடே தொடர்ந்துகொண்டிருக்கிறார்.

கிருஷ்ணம்மாள் ஜகநாதன்

காந்தியின் சத்தியாகிரகப் பாதையால் ஈர்க்கப்பட்டு, வினோபாபாவேயின் பூதான இயக்கத்தால் உந்தப்பட்டு, உழுபவருக்கு நிலம் சொந்தம் என்ற கோஷத்துடன் லாஃப்டி இயக்கத்தின் மூலம் சமூக அநீதிகளுக்கு எதிராக இன்றுவரை போராடிவருபவர் கிருஷ்ணம்மாள் ஜகநாதன்.

krishanammaljpgright

நிலமற்ற தலித் விவசாயக் குடும்பத்தில் 1926-ல் பிறந்தார். பட்டப் படிப்பு படித்தபோது, காந்தியைச் சந்தித்தார். அவரது சர்வோதய இயக்கத்தில் ஈடுபட்ட போதுதான் தன் கணவர் சங்கரலிங்கம் ஜகநாதனைச் சந்தித்தார்.

ஒத்துழையாமை இயக்கம், சட்ட மறுப்பு இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆகியவற்றில் ஈடுபட்ட இத்தம்பதி, அமைதியான முறையில் பூமிதான இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டனர்.  நிலமற்ற விவசாயிகளுக்கு இதுவரை நான்கு மில்லியன் ஏக்கர் பரப்பளவு நிலத்தைப் பகிர்ந்தளித்துள்ளனர். அத்துடன், 13 ஆயிரம் தலித் பெண்களை நில உரிமையாளர்களாக மாற்றியுள்ளனர்.

1968-ல் தஞ்சாவூர் மாவட்டம் கீழ்வெண்மணி சம்பவத்தில் குழந்தைகள், பெண்கள், ஆண்கள் உட்பட தலித் விவசாயிகள் படுகொலை செய்யப்பட்ட நிலையில் நிலப்பகிர்வுக்காக இத்தம்பதி தஞ்சாவூர் மாவட்டத்திலேயே முகாமிட்டனர்.

2013 பிப்ரவரி மாதம் தன் கணவரை இழந்தார். அவரது மறைவுக்குப் பிறகும் ஊக்கத்துடன் தலித் மக்கள், பெண்கள் முன்னேற்றத்துக்கான பணியைத் தொடர்கிறார். பத்மஸ்ரீ, ரைட் டு லைவ்லிஹுட் விருதைப் பெற்றிருக்கும் இவரது பெயர் நோபல் பரிசுக்கும் பரிந்துரைக்கப்பட்டது. சமூகமாக வாழ்வது, சமூகத்துக்காக வாழ்வது என்ற இரண்டு கொள்கைகளை காந்தியிடமிருந்து கற்றுக்கொண்டதாகக் கூறும் கிருஷ்ணம்மாள் ஜெகநாதன், இந்தியா அடைந்திருக்கும் மேம்பாட்டுக்கு உரமாக மாறியுள்ளார்.

பெண்ணைப் பலவீனமானவள் என்று உரைப்பது அவமதிப்பு; பெண்ணுக்கு ஆண் செய்யும் அநீதி;

gandhijpg

வலு என்பதைக் கொடும் பலம் என்பதாகவே அர்த்தப்படுத்தினால் பெண், ஆணைவிடக் கொடும்தன்மை குறைந்தவள்தான். ஆனால், தார்மிக வலுவை அடிப்படையாகக் கொண்டால் ஆணைவிடப் பெண்ணே அளவிட முடியாத அளவு வலுவானவள்.

அவளைவிட உள்ளுணர்வு உள்ளவர் யார்? சுய தியாகத்தில் அவள் எவ்வளவு உயர்ந்தவள்? அத்தனை கஷ்டங்களையும் தாங்கும் உரம் பெற்றவளும் அதீத தைரியம் கொண்டவளும் அவள்தானே? அவள் இல்லாமல் மனிதன் இருந்திருக்கவே முடியாது.

நமது வாழ்க்கையிருப்பின் நியதியாக அகிம்சை இருக்குமென்றால், பெண்ணிடம்தான் நமது எதிர்காலம் இருக்கிறது. பெண்ணைத் தவிர யாரால் இதயத்துக்கு ஒரு கோரிக்கையை வைக்க முடியும்?

 - மகாத்மா காந்தி.

ஓவியங்கள்: முத்து, வெங்கி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x