உனக்கு மட்டும்: பரிசோதனை என்ற பெயரில் பாலியல் அத்துமீறல்

உனக்கு மட்டும்: பரிசோதனை என்ற பெயரில் பாலியல் அத்துமீறல்
Updated on
2 min read

நான் பிறந்து வளர்ந்தது  எல்லாம் சென்னையில்தான். நல்ல குடும்பம், சிறந்த கல்வி என எல்லாமே எனக்கு நல்லபடியாகவே அமைந்தன. தனியார் கல்லூரியில் எம்.ஏ. ஆங்கிலம் படித்து முடித்தவுடனே பிரபலப் பத்திரிகையில் சில மாதங்கள் வேலை செய்தேன். அதன்பிறகு டெல்லியில் செயல்பட்டுவரும் ஆன்லைன் பத்திரிகை ஒன்றில் வேலை கிடைத்தது.

அங்கே மகளிர் விடுதியில் தங்கி வேலைக்குச் சென்றுவந்தேன். ஆனால், புதிய சூழ்நிலை, சத்தான உணவுப் பற்றாக்குறை போன்ற பிரச்சினைகளால் உடல்வலி, காய்ச்சல் எனத் தொடர்ந்து அவதிப்பட்டுவந்தேன். தொடர்ந்து இரண்டு மாதங்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டதால், சிகிச்சைக்காகக் கடந்த மாதம் சென்னைக்கு வந்தேன்.

விமான நிலையத்திலிருந்து வீட்டுக்குக் கூட அழைத்துச்செல்லாமல் நேராக வடபழனி பேருந்து நிலையம் அருகில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் என் பெற்றோர் என்னைச் சேர்த்தார்கள். அங்கே பல பரிசோதனைகளை மேற்கொண்டார்கள். இரவு 11  மணிக்குமேல், மீண்டும் எனக்குக் காய்ச்சல் வந்ததால் அந்த மருத்துவமனையில் உள்ள High Dependency Unit–ல் சேர்த்தார்கள்.

அங்கு உறவினர்கள் யாருக்கும் அனுமதி கிடையாது. இதனால் என் பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவிட்டார்கள். என்னுடைய உதவிக்காக நர்ஸ் ஒருவர் மட்டும் இருந்தார்.

ஒரு பெரிய ஹாலில் ஒவ்வொரு நோயாளிகளுக்கும் தனித்தனியாக நான்கு பக்கமும் திரை கட்டப்பட்டிருந்தது. எல்லா பரிசோதனைகளையும் முடித்துவிட்டு HDU-வில் எனக்காக ஒதுக்கப்பட்டிருந்த படுக்கையில் நான் படுத்துக்கொண்டிருந்தேன். அப்போது நள்ளிரவு 12 மணி இருக்கும். அந்த நேரத்தில் நைட் ஷிப்ட் பணிக்கு வந்திருந்த 30 வயதுக்கும் குறைவான ஆண் மருத்துவர், என் அறைக்குள் நுழைந்தார்.  அவர் வந்ததும் என் அறையில் இருந்த நர்ஸை வெளியே போகச் சொன்னார். பிறகு என்னைப் பரிசோதனை செய்யத் தொடங்கினார்.

கடுமையான உடல்வலியாலும் காய்ச்சலாலும் பாதிக்கப்பட்டிருந்த எனக்கு, அந்த டாக்டர் என்ன செய்கிறார் என்பதே முதலில் புரியவில்லை. கடுமையான காய்ச்சல் காரணமாக என்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று விளங்காமல் இருந்தது. இது பரிசோதனையா இல்லை பரிசோதனை என்ற பெயரில் டாக்டர் என்னிடம் தவறாக நடந்துகொள்கிறாரா எனப் புரியாமலே இருந்தேன். சிறிது நேரம் கழித்து அந்த டாக்டர் வெளியே சென்றுவிட்டார்.

என்ன செய்வதென்று புரியமால் உட்கார்ந்துகொண்டிருந்தேன். அப்போது மீண்டும் அந்த டாக்டர் உள்ளேவந்து, “என் பரிசோதனையால் உங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லையே, ஓ.கே.தானே?” எனக் கேட்டார். அப்போதுதான் அவர் என்னிடம் தவறாக நடந்துகொண்டிருக்கிறார் என்பது புரிந்தது. ஆனால், அதை எதிர்த்து கேட்க முடியாத என் நிலைமையை நினைத்து வருத்தத்தில் ஆழ்ந்தேன். அந்த டாக்டர் என்னிடம் தவறாக நடந்துகொண்டதற்கு எந்த ஆதாரமும் என்னிடம் இல்லை. இதை எப்படி வெளியே சொல்வது எனப் புரியாமல் மனதுக்குள்ளேயே  புழுங்கினேன்.

அடுத்த நாள் காலை நார்மல் வார்டுக்கு என்னை  மாற்றினார்கள். எனக்கு எந்தப் பெரிய பிரச்சினையும் இல்லை என்பதால், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மூன்றாவது நாள் வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள். வீட்டுக்கு வந்த பிறகுதான் மருத்துவமனையில் நடந்ததைக் குடும்பத்தாரிடம் சொன்னேன். உடனே அவர்கள் மருத்துவமனைக்குச் சென்று நிர்வாகத்தினருடன் சண்டைபோட்டார்கள். சம்பந்தப்பட்ட டாக்டர் எங்கே எனக் கேட்டபோது, அவர் மருத்துவமனையில் இல்லை, ஓடிப்போய்விட்டார் என நிர்வாகம் பதிலளித்தது. அவர்கள் பதிலில் உண்மை இல்லாததால், மருத்துவமனைக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினேன்.

ஆனால், அதன் பிறகும் மருத்துவமனை சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மருத்துவமனையை விட்டு  ஓடிப்போய்விட்டார் என நிர்வாகத்தால் சொல்லப்பட்ட அந்த டாக்டர், அதே மருத்துவமனையில் தற்போதும் பணியாற்றி வருவது எனக்கு அதிர்ச்சியளித்தது. ஆனால், இவை அனைத்தும் தெரிந்திருந்தும் என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. நன்கு படித்து, ஒரு பத்திரிகையில் பணியாற்றிவரும் எனக்கே இதுபோன்ற நிலைமை என்றால், எதுவும் தெரியாத மற்ற பெண்களின் நிலைமை எப்படியிருக்கும் என்பதை யோசித்துக்கூட பார்க்க முடியவில்லை.

நம் உடல்நலனைப் பாதுகாப்பார்கள் என்று நம்பித்தான், மருத்துவர்களிடம் செல்கிறோம். ஆனால், மருத்துவர்களில் இப்படிப்பட்ட இழிகுணம் படைத்த பிறவிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். மருத்துவர்களின் பரிசோதனை உங்களுக்குத் தவறாகப்பட்டால் உடனே எதிர்த்துப் பேசுங்கள் அல்லது குடும்பத்தினரிடமாவது சொல்லி நடவடிக்கை எடுங்கள். இல்லையென்றால் பாதிக்கப்பட்ட நாம்தான், அதை நினைத்து வாழ்நாள் முழுக்கக் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்க வேண்டும். அத்துடன், இதுபோன்ற கேவலமான மருத்துவர்கள், பரிசோதனை என்ற பெயரில் பாலியல் சீண்டலில் தொடர்ந்து ஈடுபடுவதைத் தடுக்க முடியாமலும் போய்விடும்.

- பெயர் வெளியிட விரும்பாத வாசகி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in