

பொதுவாக நீர் வண்ண ஓவியங்கள் உயிரோட்டத்துடன் தத்ரூபமாக இருக்கும். கோவையைச் சேர்ந்த விதி என்பவர் வரையும் ஓவியங்களும் அத்தகையவையே. அவருடைய ஓவியத் திறமையால் மெருகூட்டப்பட்டிருக்கும் வாட்டர் கலர் ஓவியங்கள் பார்வையாளர்களின் மனத்தையும் கவனத்தையும் ஒருங்கே ஈர்க்கின்றன.
சிறுவயதிலிருந்தே விதி நன்றாக ஓவியம் வரையும் திறனைப் பெற்றிருக்கிறார். தனியாக ஓவியப் பயிற்சி வகுப்புகளுக்குச் சொல்லாமல் வீட்டில் இருந்தபடியே சுயமுயற்சியால் ஓவியம்வரைய அவர் கற்றுக்கொண்டுள்ளார்.
“எங்க வீட்டில் யாருக்கும் வரையத் தெரியாது. நான் ஸ்கூல் பாடங்களுக்காக வரையும் ஓவியத்தை என் வீட்டில் உள்ளவர்கள் பாராட்டி ஊக்கப்படுத்துவார்கள். அந்த ஊக்கத்தால் எனக்கு ஓவியத்தின் மீது ஆர்வம் வந்தது. தினமும் எனக்குப் பிடித்த விஷயங்களை வரைந்து பார்ப்பேன்” என்கிறார் அவர்.
கட்டிட வடிவமைப்புத் துறையில் விதி இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார். ஐந்தாண்டு கல்லூரிப் படிப்பை முடித்த பொறியாளரான விதிக்கு, உடனடியாக வேலைக்குச் செல்ல விருப்பம் இல்லை. எப்போதும் படிப்பு படிப்பு என்ற மனநிலையிலிருந்து சற்று இளைப்பாற வேண்டும் என விதிக்குத் தோன்றியுள்ளது.
விட்டுப்போன தன் ஓவியப் பயிற்சியை மீண்டும் பொழுதுபோக்காகச் செய்யத் தொடங்கியுள்ளார். பொழுதுபோக்காகத் தொடங்கிய ஓவியப் பணி, தற்போது விதியின் முழுநேரப் பணியாக மாறிவிட்டது. இவரின் ஓவியங்கள் பெரும்பாலும் பூக்கள், இயற்கைக் காட்சிகளைப் பிரதிபலிப்பதாக உள்ளன.
இயற்கைக் காட்சி சார்ந்த ஓவியங்களை அதே அழகுடன் வரைவதில் விதி வல்லவர். வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நீர் வண்ண பெயிண்டுகளை அவர் பயன்படுத்துகிறார். விதியின் ஓவியங்களுக்கு அது தனித்தன்மையை அளிக்கிறது. பல ஓவியக் கண்காட்சிகளில் அவர் கலந்துகொண்டுள்ளார். ஓவிய வகுப்புக்கே செல்லாத விதி, தற்போது பலருக்கு ஓவிய வகுப்புகளும் எடுத்து வருகிறார். இன்று @limitlessart_viddhi என்ற அவரின் இன்ஸ்டாகிராம் வலைத்தளத்தை 29,000 பேர் பின்தொடர்கிறார்கள்.விதி