

சோர்வாக இருக்கும்போது பூத்துக்குலுங்கும் வண்ணமயமான பூக்களைப் பார்க்க யாருக்குத்தான் பிடிக்காது? எல்லா நாட்களிலும் பூத்துக் குலுங்கும் பூச்செடிகளை வீட்டில் வளர்க்கப் பலரும் விரும்புவார்கள். ஆனால், இது நிஜப் பூக்களில் சாத்தியமல்லாத நிலையில் செயற்கைக் களிமண்ணைக் கொண்டு அழகழகான பூக்களைச் செய்துவருகிறார் சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜலட்சுமி சிவராமன்.
பொதுவாக, எல்லோருக்கும் சிறுவயதில் ஓவியம் வரைய ஆசையிருப்பதுபோல் ராஜலட்சுமியும் பள்ளிக் காலத்தில் ஓவியம் வரைவதில் திறமைசாலியாக இருந்துள்ளார். ஆனால், அதைத் தொடர்ச்சியாகச் செய்ய முடியவில்லை. இந்நிலையில் திருமணத்துக்குப் பிறகு மும்பையில் குடியேறிய ராஜலட்சுமி தன்னுடைய கலைத்திறமையை மீண்டும் தொடங்க ஒரு வாய்ப்பாக அமைந்ததுதான் கைவினைக் கலை.
செயற்கைக் களிமண்ணைக் கொண்டு நேர்த்தியான முறையில் இவர் வடிவமைக்கும் பொருட்கள் அசலைத் தோற்கடித்துவிடும் அளவுக்குத் தத்ரூபமாக இருக்கும். இந்தக் கலையைக் கற்றுக்கொண்ட அவர் அதன்பிறகு தனக்கு விருப்பமான பொருட்களைச் செய்யக் கற்றுக்கொண்டுள்ளார். தொடக்கத்தில் பொழுதுபோக்காகத் தொடங்கிய கைவினைக் கலை பின்னர் சிறு தொழிலாக மாறியுள்ளது.
அதற்குக் காரணம் ராஜலட்சுமியின் கைவினைப் பொருட்களில் உள்ள நேர்த்தியும் அழகும்தாம். கடந்த பத்தாண்டுகளாக இதுபோன்ற கைவினைப் பொருட்களை வடிவமைத்தும் விற்பனை செய்தும் வருகிறார் அவர்.
இயற்கையான பூக்களில் உள்ள நிறங்கள், வடிவமைப்பு போன்றவற்றை மிகவும் தத்ரூபமாகச் செயற்கைப் பூக்களில் கொண்டுவருவதே அவரது தனிச் சிறப்பு. “இந்தக் கைவினைக் கலையைக் கற்றுக்கொள்வதற்கு நமக்கு வரையத் தெரிய வேண்டும் என்ற தகுதியைவிடப் பொறுமையாக இருப்பதே முதல் தகுதி.
மனம் அமைதியாக இருந்தால் இந்தக் கலையைச் சீக்கிரமாகக் கற்றுக்கொள்ள முடியும். அப்போதுதான் இயற்கையான பூக்களில் உள்ள அதே நுணுக்கங்களை நாமும் இந்தச் செயற்கைப் பூக்களில் கொண்டுவர முடியும்” என்கிறார் அவர். இதுபோன்ற பூக்களைச் செய்வதோடு மட்டுமல்லாமல் சுயதொழில் தொடங்க ஆர்வமாக உள்ளவர்களுக்கும் கற்றுக்கொடுக்கிறார்.