

‘சுயம்பு’ எனும் தலைப்பில் பலதரப்பட்ட பெண்களைப் படம் எடுத்துவருகிறார் ஒளிப்படக் கலைஞர் நவீன் கௌதம். பளிச்செனப் பற்கள் தெரிகிற மாதிரியும் பற்கள் கொட்டிப்போன நிலையில் உதடுகள் விரிய புன்னகைத்தபடியுமாகப் பல வயதுப் பெண்கள் இத்தொகுப்பில் நிறைந்திருக்கிறார்கள்.
நிறங்களைக் கடந்த இந்தக் கறுப்பு - வெள்ளைப் படங்களில் அவர்கள் ஒருமித்த அழகுடன் மிளிர்கிறார்கள். பெண்ணை சுயம்புவாகக்கொள்ளும் எண்ணத்தின் வெளிப்பாடே இப்புகைப்படத் தொகுப்பு என்கிறார் நவீன் கௌதம்.
‘எந்தத் தூண்டலும் இல்லாமல் ஒரு சிறு வித்தாக விழுந்து, தன்னுள்ளிருந்து கிளைத்துப் பரவி அவளாகவே முளைப்பவள். தன்னிச்சையாக வாழ்வுபெருக்கி ஆயிரக்கணக்கான பறவைகளுக்கும் சிற்றுயிர்களுக்கும் பெரிய உயிரினங்களுக்கும் வாழ்விடம் தரும் வனமாக மாறும் சுயசக்தி கொண்டவள். உயிர்த்திரளை உயிர்ப்பிக்கும் பெருந்தாய். அவளே சுயம்பு’ என்று இந்தப் படங்கள் குறித்துத் தன் முகநூலில் அவர் பதிவிட்டிருக்கிறார்.
தானாய் முளைத்து
தானாய் வளர்ந்து
தானாய் பூத்து
தானாய் காய்த்து
தானாய் கனிந்து
தானாய் உதிர்ந்து
எல்லா விதையும் சுயம்பு
எல்லாக் காடும் சுயம்பு
- என்ற கவிஞர் வண்ணதாசனின் கவிதையை ஆதாரமாகக் கொண்டுதான் இந்தப் புகைப்படத் தொகுப்பு உருவானதாக நவீன் சொல்கிறார். “உயிருள்ள ஒரு படைப்பை இந்தப் பிரபஞ்சத்தில் உருவாக்கும் ஆற்றல் மண், பெண் ஆகிய இரண்டுக்கும்தான் இருக்கிறது. வாழ்வின் எத்தனையோ நெருக்கடியான சூழ்நிலைகளில் வீழ்ந்து, தன்னை உயிர்ப்பித்துக்கொண்டு அதிலிருந்து மீளும் பெண்கள் ஒவ்வொருவரும் சுயம்புவே” என்கிறார் நவீன்.
- லலித்கலா அகாடமியில் நடக்கும் ஒளிப்படக் கண்காட்சிக்காக இந்தப் படங்களை எடுத்திருக்கிறார் நவீன். “இதுபோன்ற படங்களில் கண்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்படும். ஒரு மாறுதலுக்குச் சிரிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து பற்கள் தெரியச் சிரிக்கும்படி இப்படங்களை எடுத்தேன்.
கறுப்பு - வெள்ளைப் படங்கள் எனக்குப் பிடிக்கும். தவிர ஒரு தலைப்பின் கீழ் எடுக்கப்படும் படங்கள் ஒரே தொனியில் இருக்க வேண்டும் என்பதற்காகவும் கறுப்பு-வெள்ளைப் படங்களாக எடுத்தேன்.
நான் செல்கிற இடங்களில் பார்க்கும் பெண்களை அவர்களின் அனுமதியோடு படமெடுத்துக் கொண்டிருக்கிறேன். இதற்குச் சம்மதிக்காதவர்களுக்கு எனது நோக்கம் குறித்து விளக்குவேன். அதன் அவர்களும் மகிழ்வுடன் பிறகு ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்” என்கிறார் நவீன் கௌதம்.