என் பாதையில்: ஆணென்ன, பெண்ணென்ன?

என் பாதையில்: ஆணென்ன, பெண்ணென்ன?
Updated on
1 min read

நான் பள்ளியில் படித்தபோது நன்கு படிக்கும், தைரியமான பெண் எனக்கு சீனியராக இருந்தார். பன்னிரண்டாம் வகுப்பில் 996 மதிப்பெண் பெற்றார். எதிர்காலத்தில் நன்கு படித்து நல்ல பணியில் இருக்க வேண்டும் என ஆசைப்பட்டார். ஆனால், இன்றோ அவர் 26 வயதில் மூன்று பெண் குழந்தைகளுக்குத் தாயாக இருக்கிறார்.

பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவுடனே பெற்றோரின் வற்புறுத்தலால் உறவுக்காரரைத் திருமணம் செய்துகொண்டார். முதலில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. ஆண் குழந்தை வேண்டும் என்ற அவருடைய கணவரின் ஆசைக்காகவும் வற்புறுத்தலுக்காகவும் அடுத்த குழந்தையைப் பெற்றுக்கொண்டார்.

அதுவும் பெண் குழந்தை. அறுவை சிகிச்சை வேறு.  ஆனாலும், ஆசை விட்டு வைக்கவில்லை. மூன்றாவது குழந்தை நிச்சயம் ஆணாகப் பிறக்கும் என நினைத்தார்கள்போல. ஆனால், அதுவும் பெண் குழந்தைதான்.

மூன்று குழந்தைகளை அடுத்தடுத்துப் பெற்றெடுக்க உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் அவர் எவ்வளவு வலியையும் வேதனையையும் அனுபவித்திருப்பார். அவருடைய கணவரோ அதைப் பற்றி எதுவும் கவலைப்படாமல் ஆண் குழந்தை வேண்டும் என்ற ஆசையுடன் மட்டும் இருந்திருக்கிறாரே, இது நியாயமா?

பெண் என்பவள் குழந்தை பெற்றெடுக்கும் இயந்திரம் அல்ல. எந்தக் குழந்தை பிறந்தாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆண் குழந்தை என்றால் உயர்வு என்று இன்னும் எத்தனை காலத்துக்குச் சொல்லிக்கொண்டிருக்கப் போகிறோமோ.

சென்னையில் வசிக்கும் இந்தப் பெண்ணுக்கே இந்த நிலை என்றால் கிராமத்தில் வசிக்கும் பெண்களின் நிலை? கல்வியிலும் வாழ்க்கைத்தரத்திலும் முன்பைவிட நாம் இப்போது ஓரளவுக்கு முன்னேறியிருந்தாலும், பெண் அடிமைப்பட்டுக் கிடக்கும் இந்த நிலை எப்போது மாறப்போகிறது? படித்த பெண்ணுக்கே குழந்தைப்பேறு  குறித்து முடிவெடுக்கும் உரிமையில்லை.

படிக்காத பெண்களின் நிலை? பெண்கள் சொல்வதை ஆண்கள் காதுகொடுத்துக் கேட்க வேண்டும். ஆண் குழந்தைதான் வாரிசு என்ற நிலை மாற வேண்டும். மகனோ மகளோ யாராக இருந்தாலும் இருவருமே ஒன்று என்ற நிலை வர வேண்டும்.

நீங்களும் சொல்லுங்களேன்

தோழிகளே, இந்தப் பகுதியில் நீங்களும் உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளலாம். காய்கறி வாங்கிய அனுபவம் முதல் கடைசியாகப் படித்த புத்தகம்வரை எதுவாக இருந்தாலும் எங்களுக்கு எழுதுங்கள். நம் அனுபவம் அடுத்தவருக்குப் பாடமாக அமையலாம். குழம்பியிருக்கும் மனத்துக்குத் தெளிவைத் தரலாம்.

- ராஜீ, சென்னை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in