

தனியார் மருத்துவக் கல்லூரியில் பட்ட மேற்படிப்பு படித்துவந்த பட்டியல் இன மாணவி ஒருவரை வாட்ஸ்அப் குழுக்களில் மூன்று சீனியர் மாணவிகள் சாதிரீதியாகக் கிண்டலும் கேலியும் செய்துவந்ததால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார். 25 வயதான, சொந்தமாக முடிவெடுக்கக் கூடிய, மருத்துவம் படித்த ஒரு பெண்ணை மூன்று சீனியர் பெண்கள் தற்கொலைக்குத் தூண்ட முடியுமா? அதுவும் வெறும் வாட்ஸ்அப் குழுவின் மூலமாக என்றால். ஆம், முடியும்!
இதுவும் வாட்ஸ்அப் குழு பற்றிய உதாரணம்தான். பெரும்பான்மையான பள்ளிக் குழந்தைகளின் பெற்றோருக்கான குழுக்களிலும் கல்லூரி மாணவர்களுக்கான குழுக்களிலும் இதே போன்ற செயல்பாட்டை உணரலாம். இதுபோன்ற குழுக்களைத் தொடங்கி நடத்துபவர்கள் பெரும்பாலும் ஆதிக்க அல்லது நடுநிலைச் சாதியினராக இருப்பார்கள். ஒன்று, முதன்முதலில் மொபைலையும் சோஷியல் மீடியாவையும் அவர்கள் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். இரண்டு, இது போன்ற ‘அட்மின்’ அடையாளத்தின் மூலம் சாதியப் படிம நிலையில் தன் உயரத்தை உயிர்ப்புடன் வைத்துக்கொள்ள அவர்கள் விரும்புவது.
இதுபோன்ற குழுக்களில் ஒடுக்கப்பட்ட சாதியினர் அமைதியாகவே இருப்பர். அவர்களது பதிவுகளுக்குப் பதில் பதிவுகளோ கமெண்டுகளோ வருவதில்லை. காற்றில் கைவீசுவதுபோல அவர்கள் ஆங்காங்கே சொல்லும் சில வரிகளும் கவனிப்பாரற்றுப்போகும். பெரும்பாலும் இவர்கள் பற்றிய ‘லோடட் கமெண்டு’கள் இருந்துகொண்டே இருக்கும். உயர் சாதி என்று தங்களை நினைத்துக்கொள்பவர்கள் இந்த நண்பர்களுக்கு எதிராகக் குழுவாகச் சேர்வது வெகு இயல்பாக நடக்கும். தங்கள் குழுவல்லாத பிறரை மட்டம் தட்டுவதும் தங்களது கருத்துகளை முன்வைக்கப் பிறருக்குப் போதிய இடம் தராததும் நடக்கும். அடுத்ததாக அவர்களைக் கிண்டல் செய்யத் தொடங்குவார்கள். பார்ப்பதற்குச் சாதாரணமாகத் தோன்றும் கமெண்டுகள் அவை என்றாலும், அவற்றில் விஷம் தோய்ந்திருக்கும். “உனக்கென்னப்பா… எதுவும் இல்லைன்னாலும் காலேஜ்ல இடம் கிடைக்கும், உனக்கென்ன கவர்மென்ட்டே எல்லாம் ஃப்ரீயா தரும்” என்பது தொடங்கி பலவாக விரியும். அது நிச்சயமாக விளையாட்டுக்கு அல்ல; வயிற்றெரிச்சல்!
இப்படி ஒருவரை அல்லது ஒரு சாராரை மட்டும் ரவுண்டு கட்டுகிறார்கள் என்றால், உஷார் ஆகுங்கள். வெறும் கிண்டல், கேலி, விளையாட்டுக்கு என்று வர்க்க/சாதி விஷயங்களில் அசட்டையாக இருக்க வேண்டாம். நான் உயர்ந்த சாதி என்ற திமிர்தான் அடுத்தவரை மட்டமாகப் பார்க்கச் சொல்கிறது. மாட்டுக் கறியைத் தின்பவன் மட்டம் என்று மண்டைக்குள் விஷம் ஏற்றுகிறது.
யாரும் யாருக்கும் உயர்ந்தவரும் இல்லை; தாழ்ந்தவரும் இல்லை. கவனமாக இருங்கள். இட ஒதுக்கீடு குறித்த எந்தத் தெளிவும் அவர்களுக்கு இல்லை. இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்வதில்லை. பொருளாதாரரீதியான ஒதுக்கீட்டின் தேவை பற்றி குமுறிக் குமுறிப் பேசுபவர்கள் இவர்கள். தமிழகம் முழுக்க உயர் சாதியினராகத் தங்களை நம்பிக்கொள்கிறவர்களும் அவர்களுக்குக் காவடி தூக்கும் இன்ன பிற ‘நடுநிலை’ சாதியினரும் இன்னமும் சாதிய வன்மத்தில் இருந்து விடுபடவில்லை. அதுவே வாட்ஸ் அப் குழுக்களிலும் வன்முறையாக வெளிப்படுகிறது!
உங்கள் பட்டியலின நண்பனையோ தோழியையோ அல்லது உங்களையோ யாரேனும் சாதிய அழுக்கை மனத்தில் கொண்டு சாடை பேசினால், முதல் முறையே எதிர்த்துவிடுங்கள். உங்கள் ஆரம்ப மௌனம் அவர்களுக்கு இன்னும் பேச இடம் தரும். நட்பைவிடவும் யாரோ சில சீனியர், ஜுனியர்களைவிடவும் தன்மானம் மிகவும் முக்கியம்.
தற்கொலை செய்துகொண்ட மருத்துவ மாணவி பாயல், அந்த மூன்று சீனியர்களையும் வாட்ஸ்அப் குழுவில் கேள்வி கேட்டிருக்கிறார். கல்லூரியில் அவர்களைப் பற்றிப் புகார் தந்திருக்கிறார். ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை. அதன் பிறகே மனம் உடைந்து தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். கொலையும் செய்யும் வாட்ஸ் அப் குழு என்பதால் கவனமாக இருக்க வேண்டும்.
- நிவேதிதா லூயிஸின் முகநூல் பதிவிலிருந்து.