பெண்கள் 360: கறுப்பினப் பெண்களின் அரசி
கறுப்பினப் பெண்களின் அரசி
“ஆப்பிரிக்கக் குடும்ப அமைப்பில் கிடைக்கும் இந்த வலிமையும் ஆதரவுமே நமது கலாச்சாரத்தின் முக்கிய அம்சம். அதை எந்தச் சூழ்நிலையிலும் விடாமல் காக்க வேண்டும்; வளர்க்க வேண்டும்”
- மார்கரெட் ஒகோலா
கென்யாவைச் சேர்ந்த மார்கரெட் ஒகோலாவுக்கு எழுத்தாளர், குழந்தை நல மருத்துவர், மனித உரிமைப் போராளி எனப் பன்முக அடையாளங்கள் உண்டு. 1958 ஜூன் 12-ல் பிறந்த அவர், ‘யுனிவர்சிட்டி ஆஃப் நைரோபி’யில் பட்டம் பெற்றார். கென்யாவிலிருந்த 400-க்கும் மேற்பட்ட சுகாதார மையங்கள் இவரது மேற்பார்வையில் இயங்கின. எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஆதரவற்றவர்களுக்காக இவர் அளவுக்கு யாரும் அக்கறையுடன் செயல்படவில்லை.
இவரது முதல் நாவலான ‘தி ரிவர் அண்டு தி சோர்ஸ்’ நாவல் பல விருதுகளைப் பெற்றது. கறுப்பினப் பெண்களின் பல தலைமுறை அனுபவங்களே இந்த நாவலின் கரு. 19-ம் நூற்றாண்டில் குக்கிராமம் ஒன்றில் தொடங்கி இன்றைய நவீன நைரோபிவரை நீளும் ‘அகோகோ’ எனும் சந்ததியினரின் வாழ்க்கைப் பயணமே இந்த நாவலின் களம்.
அந்தப் பயணத்தினூடே அரசியல் மாற்றங்கள், கலாச்சார மாற்றங்கள், எச்.ஐ.வி. தொற்று, ஆப்பிரிக்கச் சமூகத்தில் பெண்களின் நிலை ஆகியவற்றை அவர் விவரிக்கும் விதம் மனத்தைக் கனக்கச் செய்கிறது. முதலில் பிரசுரிக்க மறுக்கப்பட்ட இந்தப் புத்தகம், வெளிவந்த பின் அங்கீகாரமும் விருதுகளும் பெற்றது வரலாறு. கென்யாவின் பள்ளிகளில் இந்தப் புத்தகம் இன்று பாடமாக உள்ளது.
தன்னுடைய அம்மாவின் தாக்கத்தால் இந்தப் புத்தகத்தை எழுதியதாக ஒகோலா சொல்கிறார். இவரின் 60-வது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக ஜூன் 12 அன்று சிறப்பு டூடுலை கூகுள் வெளியிட்டது.
நம்பிக்கையளிக்கும் தீர்ப்பு
நாட்டின் ஆன்மாவை உலுக்கிய கதுவா சிறுமியின் வழக்கில் முக்கியக் குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. மேலும், ஆதாரங்களை அழித்த மூன்று காவல் துறையினருக்கு ஐந்து ஆண்டு சிறைத் தண்டனையை விதித்துள்ளது. இந்த வழக்கில் இறுதிவரை துணிச்சலுடன் போராடியவர் தீபிகா சிங் ரஜாவத். இதற்காக அவர் கடும் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டார். நீதிமன்ற தீர்ப்பு குறித்து, “உண்மை வென்றுள்ளது.
நீதிமன்றத்தின் தீர்ப்பு நம்பிக்கை ஒளியாக அமைந்துள்ளது. இது நாம் அனைவரும் பாராட்ட வேண்டிய நடவடிக்கை. நீதிமன்றம் எந்தவித அழுத்தத்துக்கும் உள்ளாகவில்லை என்பதையே இந்தத் தீர்ப்பு புலப்படுத்துகிறது. அந்தச் சிறுமிக்காக நீதிமன்றத்தில் ஆஜரான தருணத்திலிருந்து என் சகாக்களிடமிருந்தும் சமூகத்திடமிருந்தும் கடும் எதிர்ப்பை எதிர்கொண்டேன். வழக்கின் முதல் நாளே எனக்குக் கடும் சவாலாக இருந்தது.
எனது சமூகத்தையும் என்னுடைய மக்களையுமே எதிர்த்து நின்றேன். சமூக அழுத்தங்கள் காரணமாக எனது குடும்பத்தினரே இந்த வழக்கை நான் கையாளக் கூடாது எனத் தெரிவித்தனர். ஆனால், எனது மன உறுதியை ஒரு கணமும் நான் இழக்கவில்லை. இந்த வழக்கைக் கையிலெடுத்த பின்னர் நான் எதிர்கொண்ட அனுபவங்களை நூலாக வெளியிடவுள்ளேன்” எனத் தெரிவித்தார்.
பெண்ணின் தலைமையை ஏற்காத ஆண்மனம்
உத்தரப் பிரதேச பார் கவுன்சில் தலைவராக தர்வேஷ்சிங் யாதவ் என்ற பெண் சமீபத்தில் தேர்வுசெய்யப்பட்டார். பார் கவுன்சில் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் அவர். கடந்த புதன் அன்று அவருக்கு ஆக்ரா நீதிமன்ற வளாகத்தில் பாராட்டு விழா நடந்தது. விழா நடந்து கொண்டிருந்தபோது வழக்கறிஞர் மனிஷ் சர்மா என்பவர் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் தர்வேஷ் யாதவ்வைச் சுட்டுக் கொன்றார்.
2004 முதல் தர்வேஷ் சிங் வழக்கறிஞராகப் பணியாற்றிவருகிறார். இந்தச் சம்பவத்துக்குக் கடும் கண்டனத்தை பார் கவுன்சில் தெரிவித்துள்ளது. இறந்த வழக்கறிஞர் குடும்பத்துக்கு 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமென உத்தரப் பிரதேச அரசுக்கு பார் கவுன்சில் வலியுறுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் பல்வேறு அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனங்களைத் தெரிவித்துவருகின்றனர்.
தொடரும் சாதிக் கொடுமை
மதுரை மாவட்டத்தில் எஸ். வலையப்பட்டி கிராம அங்கன்வாடியில் சத்துணவு அமைப்பாளராகவும் உதவியாளராகவும் பட்டியலினப் பெண்கள் இருவர் நியமனம் பெற்றனர். அவர்கள் பணியில் சேர்ந்த மறுநாளே ஒரு பிரிவினர் எதிர்த்தனர். அவர்கள் சமைத்தால் அங்கன்வாடிக்குத் தங்கள் குழந்தைகளை அனுப்ப மாட்டோம் என வேறு பிரிவினர் வட்டாட்சியர் அலுவலகத்திலும் குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலகத்திலும் புகார் அளித்தனர்.
இருவரையும் அழைத்துப் பேசிய அதிகாரிகள், அவர்களைக் கிழவனூருக்கும் மதிப்பனூருக்கும் கூடுதல் பணியாகச் செல்ல வாய்மொழி உத்தரவிட்டனர். பிரச்சினை முடிந்த பிறகு இருவரும் மீண்டும் அதே இடத்தில் பணியாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
பட்டியலினப் பெண்கள் பணியாற்ற சாதிரீதியான எதிர்ப்பு உருவானதைக் குறித்து விசாரிக்க வருவாய்த் துறை அதிகாரிகள் குழு அனுப்பப்பட்டுள்ளதாகப் பொறுப்பு ஆட்சியர் சாந்தகுமார் தெரிவித்துள்ளார். சாதியைப் பிடித்துத் தொங்கும் இந்த மாந்தர்களின் மனத்துக்குள் என்றுதான் வெளிச்சம் பாயுமோ?
அம்மாவுக்குக் கல்யாணம்
கேரளத்தின் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கோகுல். இன்ஜினீயரான இவர் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது தன்னுடைய அம்மாவுடன் வீட்டிலிருந்து வெளியேறினார். இந்நிலையில் தற்போது தனது தாயின் மறுமணத்தை ஒளிப்படத்துடன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் கோகுல். அதில், “இது என் அம்மாவின் மறுமணம். இதைப் பதிவிடலாமா என்று பல முறை யோசித்தேன். மறுமணம் என்பது இன்னும் பலருக்குத் தடையாகவே உள்ளது.
என் அம்மா எனக்காக அவரது வாழ்க்கையை ஒதுக்கிவைத்தவர். முந்தைய திருமணத்தில் அவர் மிகவும் துன்பப்பட்டார். ஒருமுறை என் அம்மா தாக்கப்பட்டு நெற்றியில் ரத்தக் காயத்துடன் காணப்பட்டார். அதைக் கண்டதும், “நீங்கள் ஏன் இதைப் பொறுத்துக்கொண்டு இருக்கிறீர்கள்” என்று அம்மாவிடம் கேட்டேன். அதற்கு அம்மா, “நான் உனக்காக வாழ்கிறேன். இதைவிடவும் துன்பங்களை நான் சகித்துக்கொள்ளத் தயாராக இருக்கிறேன்” என்றார். அவரது துன்பங்களுக்கு நான் இன்று முடிவுரை எழுதியுள்ளேன் எனக் குறிப்பிட்டுள்ளார். கோகுலின் இந்தப் பதிவு தற்போது வைரலாகி உள்ளது.
