Published : 23 Jun 2019 09:18 AM
Last Updated : 23 Jun 2019 09:18 AM

திருவிழா: திருவிழாஅசரவைக்கும் 96

சு.கோமதிவிநாயகம்அடிப்படைத் தேவைகளுக்குக்கூட அல்லாடிக்கொண்டிருந்த அந்தக் காலத்துடன் ஒப்பிடும்போது நவீனமயமாக்கல் நம் வாழ்க்கைத் தரத்தை எவ்வளவோ மேம்படுத்தியிருக்கிறது.

ஆனால், இயந்திரத்தனமான இந்த ஓட்டம் அயர்ச்சியையும் சேர்த்தே தருகிறது. அதுபோன்ற நேரத்தில் அந்தக் காலத்தின் நிதானத்துக்கும் நிறைவுக்கும் மனம் ஏங்கத்தான் செய்கிறது.

பல கிராமங்கள் இன்னும் முழுமையாக நவீனமயமாகாமல் நிம்மதியைத் தக்கவைத்துக்கொண்டிருக்கின்றன. அங்கே அவ்வப்போது களைகட்டும் திருவிழாக்கள் அதை உறுதிப்படுத்துகின்றன. அதற்குச் சமீபத்திய சாட்சி, எட்டையபுரம் அருகே அயன்வடமலாபுரத்தில் உள்ள புது அம்மன், காளியம்மன் கோயில் 35-வது ஆண்டு கொடை விழா.

கொடை விழாவின் கடைசி நாளில் நடத்தப்பட்ட பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் மக்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தின. நவதானியங்களைக் கல் திருகையில் போட்டுத் திரிக்கும் போட்டியில் இளம்பெண்கள் முதல் முதியவர்கள்வரை ஏராளமானோர் பங்கேற்றனர். பெண்கள் பலர் தங்களுக்கு வழங்கப்பட்ட பாசிப்பயறை திருகையில் போட்டு வேகமாகத் திரிக்க, 96 வயதான வெங்கடம்மாளோ பதற்றம் சிறிதுமின்றித் திரித்து வெற்றிபெற்றார்.

ஆரோக்கியமே அடிப்படை

வீட்டைத் தவிர வெளியிடங்களில் தான் சாப்பிட்டதில்லை எனப் பெருமையுடன் சொல்லும் அவர், பசுமை நிறைந்த நினைவுகளில் மூழ்கினார். “அந்தக் காலத்துல கம்மங்கஞ்சியைத் தவிர வேறு சாப்பாடு கிடையாது. பச்சைக் குழந்தைகள் கம்மஞ்சோறு சாப்பிட முடியாதுல்ல.

அதனால முதலாளி வீட்டுக்குப் போய், பிள்ளைச் சோறு (நெய்யும் பருப்பும் கலந்த நெல் சோறு) வாங்குவோம். இதுக்காக நித்தமும் சாயங்காலம் அஞ்சு மணிக்கு மேல் முதலாளி வீட்டுக்குப் போய் வரிசையில் நிப்போம். அவங்களும் வித்தியாசம் பார்க்காமல் எல்லாக் குழந்தைகளையும் அவுக குழந்தைகளைப் போல் பாவிச்சு பிள்ளைச் சோறு சமைச்சு தருவாங்க.

அப்பல்லாம் ஆடி ஒண்ணாம் தேதி, தீபாவளி, பொங்கல் பண்டிகைன்னு அந்த மூணு நாளுக்குத்தான் தோசைக்கு அரைப்போம். அதுவும் கம்மந்தோசை, சோளத்தோசைதான். அன்னைக்கு ஊரைச் சுத்திப் பனை மரங்கள் நெடுநெடுன்னு வளர்ந்து கிடந்துச்சு. அதுல கிடைக்கிற கருப்பட்டியை வச்சு கருப்பட்டித் தோசை சுடுவோம். அரை மைலுக்கு அப்பால இருக்கிறவங்களையும் அந்தத் தோசையோட மணம் சுண்டியிழுக்கும்.

அப்போ, முதலாளி வீடுகளில் ஏதாவது விஷேசம் நடந்தாதான், நெல்லுச் சோறு கிடைக்கும். சுத்துப்பட்டு அத்தனை கிராமங்கள்ல இருந்தும் இங்கே வந்து நெல்லுச் சோறு சாப்பிட்டுட்டுப் போவாங்க. மத்த நாட்கள்ல நாங்க கம்மஞ்சோறு, சோளச்சோறு, குதிரைவாலிச்சோற்றைத்தான் சாப்பிடுவோம்.

எவ்ளோ தொலைவா இருந்தாலும் நடந்தேதான் போவோம். அதனால, உடம்பும் மனசும் தெம்பா இருந்தது. ஊர்ல என் வயசுல இரண்டு பேர் இருக்காங்க. நாங்க இன்னமும் வீட்டில் திருவையில திரிக்கறது, உரல்ல இடிக்கறதுன்னு வேலை செஞ்சுக்கிட்டுத்தான் இருக்கோம்” என்று சொல்லும் வெங்கடம்மாள், அந்தக் காலத்தில் அனைவரும் ஆரோக்கியமாக இருந்ததாகச் சொல்கிறார்.

“இன்னைக்கு நாகரிகம் வந்தது; எல்லாமே போச்சு. உடலுக்கு என்னென்னவோ தீங்கு வருது. புதுசு புதுசா நோயைக் கண்டுபிடிக்கிறாங்க. பாரம்பரியமும் நல்ல பழக்கவழக்கமும் தொலைஞ்சு போச்சு” என்று பெருமூச்சுவிட்டார் வெங்கடம்மாள்.

களைகட்டும் திருவிழா

நவதானியங்களை அம்மியிலிட்டுக் குத்துவது, பல்லாங்குழி, செதுக்கு முத்து ஆகிய போட்டிகள் பெண்களுக்கு நடத்தப்பட்டன. “நாங்க கடந்த 35 வருஷமா ஒற்றுமையோடு இந்தப் பாரம்பரிய விளையாட்டு விழாவை நடத்திட்டு வர்றோம். வெளியூருக்கும் வெளிநாட்டுக்கும் போனவங்க எல்லாம், ஒவ்வொரு வருஷமும் வைகாசி மாசம் திருவிழாவுக்காக ஊருக்கு வந்துடுவாங்க”  என்றனர் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த கே.தீபா, எஸ்.செல்வராணி இருவரும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x