

தேயிலைத் தோட்டங்களும் அடர்த்தியான வனப் பகுதிகளும் உள்ள மலைப்பிரதேசம் வால்பாறை. அதை அடுத்து சோலையாறு, கூமாட்டி பகுதிகளையொட்டி அமைந்துள்ளது மானாம்போளி.
வால்பாறையிலிருந்து 33 கி.மீ தொலைவில் உள்ள மானாம்போளி பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் என்பதால் வாகனப் போக்குவரத்துக்கு கடுமையான கட்டுப்பாடுகள் உண்டு.
உறைபனி, அடர் வனம், கொடும் விலங்குகள் இவையனைத்துக்கும் நடுவே செயல்பட்டுவருகிறது மானாம்போள்ளி கிளை அஞ்சலகம். இங்கு அஞ்சலக அதிகாரியாக, தபால்களைப் பெறுபவராக, பல மைல் தூரம் கடந்து கடிதங்களை உரியவரிடம் கொண்டு போய்ச் சேர்ப்பவராக அனைத்துப் பணிகளையும் கவனித்துவருகிறார் சோலைக்கிளி. பெயருக்கேற்ப வனாந்திரமே வசிப்பிடமாய் தனியாளாய், அசராமல் அஞ்சலகப் பணிகளை மேற்கொண்டுவருகிறார் இவர்.
1968-ல் காடம்பாறை மின்உற்பத்தித் திட்டம் தொடங்கிய பின் கூமாட்டி செட்டில்மெண்ட், மானாம் போளி மின் நிலையம், மானாம்போளி எஸ்டேட், வனச்சரகம் ஆகியவற்றுக்காக 1970-ல் இந்த அஞ்சலகம் தொடங்கப்பட்டது.
இணையம், செல்போன் என அனைத்துமே இங்கு தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதால், அஞ்சலகம் தொடங்கிய நாளிலிருந்து இன்று வரை கடிதப் போக்குவரத்து இங்கே அத்தியாவசியம். யானை, காட்டெருமை போன்ற விலங்குகள் அதிகம் இருந்தாலும், சமீப காலமாக சிறுத்தைகளின் தேசம் எனப் பெயர் பெற்று வரும் மானாம்போளி வனக்காடுகளில் சிறிதளவும் அச்சமின்றி சோலைக்கிளி பணியாற்றுவது வியப்பின் உச்சம்.
சோளைக்கிளி வசிக்கும் வீட்டின் பின்புறமாகச் செல்லும் பறையங்கடவு ஆற்றில் அடிக்கடி முதலைகள் வந்து போகும். வீட்டின் முன்புறமாக யானை, காட்டெருமை, சிறுத்தை ஆகியவை நடமாடும். கேட்பதற்கே தூக்கிவாரிப் போடுகிற இவை அனைத்துமே சோலைக் கிளிக்குப் பழக்கப்பட்ட நிகழ்வுகள்.
சுமார் 15 கி.மீ அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் தபால் சேவையைக் கொண்டு சேர்ப்பது, அங்குள்ள பழங்குடியினக் குடியிருப்பு மக்களை அஞ்சலக சேமிப்புக் கணக்குகளிலும், கிராமிய அஞ்சல் காப்பீட்டு திட்டத்திலும் ஈடுபட வைப்பது எனப் பலருக்கும் வழிகாட்டியாக உள்ளார்.
“ஆரம்பத்தில் இருந்த பயம் இப்போது இல்லை. சுற்றிலும் உள்ள மின்வாரிய அதிகாரிகள் ஒத்துழைப்பில் குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறேன். கணவர் வேல்முருகன், கோவையில் தறி நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். நான் 2006 லிருந்து குழந்தைகளுடன் மானாம்போளியில் தங்கி பணியாற்றி வருகிறேன்” என்கிறார் சோலைக்கிளி.
நாளுக்கு ஒன்றிரண்டு முறை வரும் அரசுப் பேருந்து, மின்வாரிய வாகனங்கள் தவிர போக்குவரத்து வசதிகள் கிடையாது. பழங்குடி வகுப்பைச் சேர்ந்த சோலைக்கிளி வனத்தைப் புரிந்து கொண்டதுடன், துணிவுடன் வாழவும் கற்றுக் கொண்டுள்ளார். அதனாலேயே பல சவால்களை எளிதாக எதிர்கொள்கிறார் என்கின்றனர் அங்குள்ள வனத்துறையினர்.
கதவைத் திறந்த யானை
“மானாம்போளி பவர் ஹவுஸில் வேலை என்று நியமிக்கப்பட்ட உடனேயே நானும் எனது கணவரும் குழந்தைகளுடன் இங்கு வந்துகொண்டிருந்தோம். மானாம்போளி செக் போஸ்ட் வரை பேருந்துகள் இருக்கும்.
அதற்கு மேல் மானாம்போளி பவர் ஹவுஸுக்கு பல மைல் கடந்து செல்ல வேண்டும். பேருந்து வசதி குறைவு என்பதால், எவ்வளவு தூரம் என்றுகூட தெரியாமல் நடக்க ஆரம்பித்தோம். சிறிது தூரத்திலேயே காட்டு யானை ஒன்று, குட்டியுடன் வழியில் நிற்பது தெரிந்தது. பயந்து மீண்டும் செக்போஸ்ட் பகுதிக்கே வந்துவிட்டோம்.
சிறிது நேரம் கழித்து மீண்டும் சென்று பார்த்தோம், ஆனால் அந்த யானை அப்போதும் அங்கேயே இருந்தது. அதன் பிறகு நீண்ட நேரம் காத்திருந்து பேருந்தில் வந்து சேர்ந்தோம்.
வேலைக்குச் சேரும் முன்னரே காட்டு யானைகளைப் பார்த்தது எங்களுக்குள் பல கேள்விகளை எழுப்பியது. இப்படிப்பட்ட இடத்தில் எப்படிக் குழந்தைகளுடன் தனியாகப் பணியாற்றுவது என்று நினைத்தேன். ஆனால் கிடைத்த வேலையை விட்டுத் திரும்பக்கூடாது என்ற வைராக்கியத்துடன் பணியில் சேர்ந்தேன். முதல் நாளே எனக்குப் பெரிய அனுபவம்.
அதன் பிறகு அதிகாலையில் வீட்டின் கதவை யானை வந்து திறந்துவிட்டுச் சென்றது, நடந்து செல்லும் வழித்தடத்தில் காட்டெருமைகளைப் பார்த்தது என ஒவ்வொரு நாளும் புதுப்புது அனுபவமாக இருக்கும்” என்று சொல்லும் சோலைக்கிளி, மானாம்போளி மின் உற்பத்தி நிலையப் பணியாளர்களுக்கான தபால் பட்டுவாடா செய்வதுடன், கூமாட்டி பழங்குடி மக்களுக்கு அஞ்சல் சேவை வழங்கிவருகிறார்.
சமீபத்தில் இரண்டு பழங்குடியினருக்கு ரூ. 2 லட்சத்துக்கான சேமிப்புக் கணக்கைத் தொடங்கிக் கொடுத்திருக்கிறார். அது மட்டுமின்றி அஞ்சலக சேமிப்பு குறித்து விவரம் அறியாத பழங்குடி மக்களுக்கு, விளக்கமாக எடுத்துக் கூறி, அவர்களையும் சேமிப்பில் ஈடுபடுத்தி வருகிறார்.