

தினமும் காலையில் வெள்ளரிக்காயை முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் வழிவதைத் தவிர்க்கலாம். வெள்ளரிக்காயை அரைத்து அதில் சிறிது எலுமிச்சைச் சாற்றை ஊற்றிக் கலந்து முகத்தில் தடவினால் எண்ணெய்ப் பசை நீங்குவதோடு சரும அழகு கூடும்.
தயிருடன் சிறிது எலுமிச்சைச் சாறு கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் ஊறவைத்துக் கழுவினால் எண்ணெய்ப் பசை நீங்கும்.
நன்கு கனிந்த தக்காளிப் பழத்தைப் பிழிந்து சாறெடுத்து முகத்தில் தடவிக் காய்ந்த பின் கழுவினால் எண்ணெய் வழிவது கட்டுப்படும். மேலும், தக்காளியுடன் வெள்ளரி அல்லது ஓட்ஸ் சேர்த்து அரைத்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்தும் கழுவலாம்.
கற்றாழையின் ஜெல்லைச் சருமத்தில் தடவினால் முகத்தில் உள்ள பருக்கள் நீங்குவதோடு அதிகமான எண்ணெய் பசையும் நீங்கும்.
ஆரஞ்சுப் பழத்தின் தோலைக் காயவைத்துப் பொடித்து அதனுடன் ரோஸ் வாட்டரைச் சேர்த்துக் கலந்து முகத்தில் தடவி, பத்து நிமிடம் காய வைத்துக் கழுவினால் முகம் பொலிவு பெறும்.
அடிக்கடி குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவ வேண்டும். சோப்புக்குப் பதில் கடலை மாவைப் பயன்படுத்தலாம். இதனால், எண்ணெய் வழிவது குறைவதோடு மட்டுமல்லாமல் முகமும் பளபளப்பாக இருக்கும்.
பப்பாளிப் பழத்தைக் கூழாக்கி அதனுடன் முல்தானி மெட்டியையும் வேப்பிலை பொடியையும் கலந்து நன்றாகப் பசைபோல் குழைத்து முகத்தில் பூசி, சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் இரண்டு முறை செய்தால் முகத்தில் வழியும் அதிகப்படியான எண்ணெய்ப் பசை குறையும்.
சந்தனப் பொடியை முல்தானி மெட்டி, ரோஸ் வாட்டர் இரண்டுடனும் கலந்து பசையாக்கி முகத்திலும் கழுத்திலும் தடவி கால் மணி நேரம் ஊறவைத்துப் பிறகு கழுவினால் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய்ப் பசை நீங்குவதோடு பருக்களும் குறையும்.
- கவிதா பாலாஜிகணேஷ், கோவிலாம்பூண்டி..