என் பாதையில்: எங்கிருந்தோ வந்தாள்

என் பாதையில்: எங்கிருந்தோ வந்தாள்
Updated on
1 min read

வீட்டு வேலைகளில் நமக்கு உதவுகிறவரை நம் வலது கரம் என்போம். ஆனால், என் உதவியாளர் எனக்குக் கைகள் மட்டுமல்ல; நடக்க முடியாத எனக்குக் கால்களும் அவரே. எங்கள் குடும்ப அட்டையில் பெயர் இணைக்கப்படாத குடும்ப உறுப்பினர் அவர்.

அவர் 25 ஆண்டுகளாக எங்கள் சுக துக்கங்களில் சேர்ந்தே பயணிக்கும் பணிப்பெண். எனக்கு 66 வயது; என் கணவருக்கு 71 வயது. மகனும் மகளும் அவரவர் குடும்பத்துடன் வெளியூரில் வசிக்கிறார்கள். எங்கள் ருசியறிந்து  சமைப்பது மட்டுமின்றி என் பிள்ளைகள், பேரப்பிள்ளைகளின் சுவையறிந்து சமைப்பதும் அவரது இயல்பு. அவர் பெயர் பார்வதி ( பெயரில்கூட எங்கள் இருவருக்கும் என்ன பொருத்தம் பாருங்கள்) . வயது 60. அவருக்கு 12 வயதானபோது அம்மா இறந்துவிட இரண்டு தம்பி, ஒரு தங்கையை ஆளாக்கும் பொறுப்பும் அவர் தோளில் விழுந்தது.

அப்போது உழைக்கத் தொடங்கிய அவர் கைகளுக்கு இன்றுவரை ஓய்வில்லை. பார்வதிக்கு ஒரு மகன். குழந்தைகளின் 12,10 வயதில் இருக்கும்போது மருமகள் இறந்துவிட, பொறுப்பில்லாத மகனை நம்பி என்ன செய்வதெனப் பேரப் பிள்ளைகளை வளர்க்கும் கடமையை ஏற்றுக்கொண்டார். 80 வயதாகும் கணவருடன் எட்டு ஆடுகளைப் பராமரிக்கும் வேலையையும் செய்கிறார்.

அவரிடம் நான் கற்ற வாழ்க்கை பாடங்கள் ஏராளம். ஆற்றில் விழுந்த இலைபோல் வாழ்க்கையை அதன் போக்கிலேயே வாழ்வது, எந்தக் கஷ்டத்திலும் துவளாமல், புலம்பாமல் பிரச்சினையை எதிர்கொண்டு தீர்வுகாண்பது என அடுக்கிக்கொண்டே போகலாம். அவர் அடிக்கடி சொல்லும் வசனம்: “சுமையைச் சுமை அதிகம் என நினைத்தால் சுமப்பது கஷ்டம். தூக்க முடிந்த சுமைதான் என நினைத்தால் சுமை கனக்காது”. பள்ளி செல்லாதவரின் இந்தப் பண்பட்ட வார்த்தை, அறிவு என்பது பள்ளிப் படிப்பு சம்பந்தப்பட்டதல்ல என்பதை உணர்த்தும்.

அவர் வீட்டு நல்லது கெட்டதில் என் கணவர் கலந்துகொள்ளத் தவறியதில்லை. கடந்த ஆண்டு அவருடைய பேத்திக்கு வரன் வந்தது. வசதியான இடம் என்ற காரணத்துக்காக மிகவும் தயங்கினார். நாங்கள் விசாரித்ததில் நல்ல குடும்பம், நல்ல பையன் எனத் தெரிந்தது. அவரைச் சம்மதிக்க வைத்து எங்களின் நெருங்கிய உறவினர்களின் பண உதவியுடன் கல்யாணம் சிறப்பாக நடந்தேறியது. பேத்தி இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறாள்.

எங்களுக்கு எந்த ரத்த சம்பந்தமும் இல்லையென்றாலும் நெருங்கிய உறவுகளைப் போலத்தான் உணர்கிறோம். அவர் எங்கள் வீட்டுக்கு வேலைக்கு வந்து 20 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு அவருக்குப் புத்தாடை, மோதிரத்துடன் சிறு தொகையைக் கொடுத்து மகிழ்ந்தோம். அவரது உழைப்புக்கு இவையெல்லாம் ஈடல்ல என்றாலும் பொன் வைக்கிற இடத்தில் பூவை வைத்துப் பார்ப்பதில்லையா? ‘எங்கிருந்தோ வந்தான்’ என்ற பாடலைக் கேட்கும் போதெல்லாம் எனக்கு பார்வதியின் நினைவுதான் வரும்.

- பார்வதி கோவிந்தராஜ், திருத்துறைப்பூண்டி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in