

பெ
ண்கள் மீதான வன்முறைக்கு எதிராகவும் ராணுவத்தின் அத்துமீறல்களுக்கு எதிராகவும் போராடிவந்த 38 வயதே ஆன பிராங்கோ எனும் கறுப்பினப் பெண் வன்முறைக்கு ஆளாகி பலியாகியிருப்பது உலகத்தை உலுக்கியுள்ளது. மரியே பிராங்கோ, பிரேசில் நாட்டில் விளிம்புநிலை மக்களின் அடிப்படை உரிமைக்காகவும் கறுப்பின மக்களுக்காகவும் தன்பால் ஈர்ப்பாளர்களின் உரிமைகளுக்காகவும் போராடிவந்த மனித உரிமைச் செயல்பாட்டாளர்.
ரியோ டி ஜெனிரோவின் குடிசைப் பகுதியில் பிறந்து, வறுமையில் வளர்ந்து, 19 வயதிலேயே பெண் குழந்தைக்குத் தாயானவர் பிராங்கோ. விவாகரத்துக்குப் பின் அருகில் உள்ள மழலையர் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்தார். வேலை செய்துகொண்டே படித்து, சமூக அறிவியல் பாடத்தில் பட்டமும் பெற்றார். பிரேசில் அரசு, ஒடுக்கப்பட்ட மக்கள் மீது நடத்திய வன்முறைகளுக்கு எதிராக நடைபெற்ற மனித உரிமைப் போராட்டங்களில் ஈடுபட்டார். பொது நிர்வாகவியல் படிப்பில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
கறுப்பின மக்களின் உரிமைக்காகவும் அரசின் துப்பாக்கிச் சூடு கலாச்சாரத்துக்கு எதிராகவும் தொடர் போராட்டங்களை நடத்தி பிரேசில் முழுவதும் அறியப்பட்ட மனித உரிமைச் செயல்பாட்டாளராக பிராங்கோ மாறினார். பின் 2016-ல் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற மாநகரத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். பெண்கள் மீதான வன்முறைக்கு எதிராகவும் மழலையர் பள்ளிகள் அமைக்கக் கோரியும் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு முறையாகப் போக்குவரத்து வசதி கேட்டும் தன்பால் ஈர்ப்பாளர்களுக்கான உரிமைகளை வலியுறுத்தியும் தொடர்ந்து போராடி வந்தார். இதனால் குறுகிய காலத்திலேயே முக்கியமான அரசியல் தலைவராக பிராங்கோ மாறினார்.
இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை ரியோ டி ஜெனிரோவில் நடந்த ‘அரசியலில் மாற்றத்தை உருவாக்கும் இளம் கறுப்பினப் பெண்கள்’ என்ற தலைப்பில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிறகு காரில் வீடு திரும்பும்போது மர்ம நபர்களின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு பிராங்கோ இரையானார். எந்தத் துப்பாக்கிச் சூடு கலாச்சாரத்துக்கு எதிராகக் குரல் எழுப்பினாரோ அதுவே அவர் உயிரைக் குடித்திருக்கிறது.
பிராங்கோவின் படுகொலை குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவரைக் கொன்றவர்களைக் கைதுசெய்யக் கோரியும் பிரேசில் முழுவதும் மக்கள் பேரணிகளை நடத்திவருகிறார்கள். இணையதளங்களில் சுமார் முப்பது மொழிகளில் #MarielleFrancoPresente என்ற ஹேஷ்டேக் வைரலாகியுள்ளது.