Published : 29 Sep 2014 12:35 PM
Last Updated : 29 Sep 2014 12:35 PM

ஊருக்குப் படியளக்கும் தனுஷ்கோடி பெண்கள்

ராமேசுவரம் தீவின் மீனவர்கள் பல ஊர்களுக்கு மீன்களை ஏற்றுமதி செய்தாலும், உள்ளூர் மக்களின் மீன் தேவையை அருகிலுள்ள தனுஷ்கோடி கரைவலை மீனவர்களே பூர்த்தி செய்கிறனர். அதில் முக்கியப் பங்கு வகிப்பவர்கள், பெண்கள் என்பதுதான் இதில் விஷயமே.

ஆளில்லா பூமியில்

1964-ம் ஆண்டு டிசம்பர் 22 இரவு தனுஷ்கோடியை கோரப் புயல் தாக்கி 50 ஆண்டுகள் ஆகப் போகிறது. அந்தக் கோரப் புயலின் தாக்கத்திலிருந்து இன்றுவரை தனுஷ்கோடி மீளவே இல்லை.

மக்கள் வாழத் தகுதியற்ற இடம் என முத்திரை குத்தப்பட்ட தனுஷ்கோடியை சுற்றியுள்ள மீனவக் கிராமங்களில் இன்றைக்கும் முன்னூறுக்கும் மேற்பட்ட பாரம்பரிய மீனவக் குடும்பங்கள் சாலை, மருத்துவம், மின்சாரம் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இன்றி ஓலைக் குடிசைகளில் வாழ்ந்து வருகின்றன.

இந்த மீனவக் குடும்பங்கள் இங்கே வாழ்வதற்கு வாழ்வாதாரம் அளித்துக் கொண்டிருக்கிறது தமிழக மீனவர்களின் பாரம்பரியக் கரைவலை மீன்பிடி முறை.

பாரம்பரிய முறை

தமிழர்களின் பாரம்பரிய மீன்பிடி முறைகளில் கரை வலை முதன்மையானது. இந்தக் கரைவலை மீன்பிடி முறை இலங்கையிலும், தமிழகத்தின் சில பகுதிகளிலும் உயிர்ப்புடன் இன்றும் பின்பற்றப்படுகிறது.

முதலில் கடற்கரையிலிருந்து கடலில் குறிப்பிட்ட தொலைவுக்கு ஆங்கில 'யு' வடிவில் கரை வலையை அமைக்கிறார்கள். பின்னர் வலையின் இரு புறமும் கயிறு கட்டி இரண்டு குழுக்களாகக் கரையில் நின்று மீனவர்கள் இழுப்பார்கள். கடலில் வலையின் மையப் பகுதியில் படகில் ஒருவர் வழிகாட்டியாகச் செயல்படுவார்.

கயிற்றின் நீளம் குறைந்தபட்சம் 100 மீட்டர்வரை இருக்கும். ஆட்களின் எண்ணிக்கைக்குத் தகுந்தவாறு கயிற்றின் நீளம் அதிகரித்துக்கொண்டே செல்லும். இதே கயிற்றில் பனையோலைகளை கட்டி இவ்வாறு இழுக்கும் மற்றொரு மீன்பிடி முறைக்கு ஓலை வலை என்று பெயர்.

எல்லோரும் சமம்

விசைப்படகு வைத்திருக்கும் மீனவர்கள் ஆழ்கடலுக்குச் சென்று இறால், கணவாய் போன்ற ஏற்றுமதி ரக மீன்களைப் பிடித்து வருகின்றனர். அவை வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஆனால், ராமேசுவரம் தீவு மக்களின் உள்ளூர் மீன் தேவையைத் தனுஷ்கோடி கரைவலை மீனவர்கள்தான் பூர்த்தி செய்கிறனர்.

கடற்பகுதிகளில் குறிப்பாக மீனவப் பெண்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தருவது என்பது தனித்தன்மை நிறைந்த சவால். ஆனால், தனுஷ்கோடி மீனவப் பெண்கள் ஆண்களுக்கு நிகராகக் கரைவலை இழுக்கிறார்கள். "இந்தக் கரைவலையில் மீன்பிடிப்போரைப் பொறுத்தவரை கூலி என்று தனியாக எதுவும் கொடுக்க மாட்டார்கள். பங்கு என்றுதான் கொடுப்பார்கள். பிடிக்கிற மீன்களை மூன்றாகப் பங்கு வைத்துக் கொள்வோம்.

வலைக்கும் படகுக்கும் ஒரு பங்கு. மற்ற இரண்டு பங்குகளை எத்தனை பேர் கரை வலையை இழுக்கிறோமோ, அத்தனை பேருக்கும் சமப் பங்குகளாகப் பிரித்துக் கொள்வோம். இதனால் ஆண், பெண் பாகுபாடோ, எங்களுக்குள் முதலாளி, தொழிலாளி என்ற பிரிவுகளோ கிடையாது" என்கிறார்கள் தனுஷ்கோடி மீனவப் பெண்கள்.

பொறுப்புமிக்க பெண்கள்

கடலோரக் கிராமங்களில் பெருமளவில் விதவைகள் இருக்கிறார்கள். கச்சான் காலத்தில் கடலடி அதிகம் இருக்கும். அந்தப் பருவத்தில் தொழிலுக்குப் போகக்கூடிய ஆண்கள் இறந்துவிடும் ஆபத்தும் அதிகம். அப்படி ஆண்கள் இறக்கும்போது, அந்தக் குடும்பத்தின் ஒட்டுமொத்தப் பொறுப்பும் கரையில் இருக்கும் பெண்களின் மேல் விழுந்துவிடுகிறது.

"அதேபோல, ஆண்கள் உயிரோடு இருக்கும் போதுகூட பெண்கள்தான் கரையில் இருந்து தொழில் செய்கிறோம். வலை கட்டுகிறோம், மீன்களைப் பதனிடுகிறோம். கருவாடு காயப் போடுகிறோம், அவற்றைச் சந்தையில் போய் விற்பனை செய்கிறோம்.

இப்படிக் கடற்புர பெண்கள் சமூக, பொருளாதார உறவுகளைப் பேணுவதுடன், நாங்களே தலைமைப் பொறுப்பிலும் இருந்து செயல்படுகிறோம்" என்கின்றனர் அந்தப் மீனவப் பெண்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x