Last Updated : 25 Mar, 2018 03:59 PM

 

Published : 25 Mar 2018 03:59 PM
Last Updated : 25 Mar 2018 03:59 PM

கண்ணீரும் புன்னகையும்: பின்னால் நிற்கும் பெண் யார்?

மேலே உள்ள கறுப்பு வெள்ளைப் படம் 1971-ல் எடுக்கப்பட்டது. வர்ஜீனியாவில் நடந்த சர்வதேச திமிங்கலங்கள் பற்றிய கருத்தரங்க நிகழ்வையொட்டி எடுக்கப்பட்ட இந்த ஒளிப்படத்தில் 39 பேர் இருக்கின்றனர். இவர்களில் 38 ஆண்களின் பெயர்கள் அந்தப் படத்திலேயே இடம்பெற்றுள்ளன. ஆனால், இரண்டாவது வரிசையில் மறைந்து நிற்கும் பெண்ணின் பெயர் குறிப்பிடப்படவேயில்லை.

25chsrs_sheila2 (2)right

38 ஆண் விஞ்ஞானிகளுக்கு நடுவில் நிற்கும் விடுபட்ட பெண் யார் என்பதைத் தேடி கான்டேஸ் ழான் ஆண்டர்சன் ட்விட்டரில் இந்த ஒளிப்படத்தைப் பதிவிட்டார். 1972-ல் அமலான ‘கடல் பாலூட்டிகள் பாதுகாப்புச் சட்டம்’ குறித்த புத்தகத்தை எழுதுவதற்காகத் தகவல்களைத் திரட்டியபோது, தேசிய கடல் வளிமண்டல நிர்வாகப் பிரிவு அனுப்பிய தகவல்களில் இந்த ஒளிப்படம் இவருக்குக் கிடைத்தது.

ஒருவழியாக ஸ்மித்சோனியன் தேசிய வரலாற்று அருங்காட்சியகத்தின் பாதுகாவலர் டான் வில்சன், ஒளிப்படத்தில் பெயரின்றி இருந்த அந்தப் பெண் ஷீலா மைனர் ஹப் என்று அடையாளம் கண்டார்.

உயிரியலில் முதுகலைப் படிப்பு முடித்து அருங்காட்சியகத்தின் டெக்னீஷியனாக அவர் வேலை பார்த்தபோது இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கிறது. கானுயிர், சுற்றுச்சூழல் திட்டங்களில் அரசு அதிகாரிகளுடன் சேர்ந்து பணியாற்றியவர் அவர்.

அமெரிக்கன் சொசைட்டி ஆஃப் மேமாலஜிஸ்டுகள் அமைப்பின் உறுப்பினர் என்ற உயர்ந்த கவுரவத்தை வகித்த ஷீலா, தனது பெயர் விடுபட்டதை மிகச் சாதாரணமாகவே எடுத்துக்கொண்டு நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்குப் பதில் கூறியுள்ளார். “இந்த அற்புதமான உலகிலுள்ள உயிரினங்களைக் காப்பதற்கான பணியில் என்னாலான பங்களிப்பைச் செய்துள்ளேன். எனது பெயர் யாருக்காவது தெரிய வேண்டுமென்பது அவசியமா?” என்று கேட்டுள்ளார்.

பெண் கல்வியின் தூதர்

ந்தியாவில் கல்வி கற்பதில் பாலின இடைவெளியைக் குறைக்கும் வகையில் பெண் கல்வியை ஊக்குவிக்கும் ‘எஜுகேட் கேர்ள்ஸ்’ அமைப்புக்குத் தூதராக பாலிவுட் நடிகை கத்ரினா கைஃப் இணைந்துள்ளார். கிராமப்புற, ஆதிவாசிப் பெண் குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதிலும் மேற்கல்வி பயில்வதிலும் இன்றும் பல தடைகள் இந்தியாவில் நிலவுகின்றன.

பள்ளியில் இடைநிற்கும் பெண் குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்ப்பதற்கான முயற்சியில் பத்தாண்டுகளுக்கு மேலாக ‘எஜுகேட் கேர்ள்ஸ்’ அமைப்பு ஈடுபட்டுவருகிறது. தரமான கல்வியைப் பெண் குழந்தைகளும் ஆண்களுடன் சமமாகப் பெறுவதற்காக இந்த அமைப்பின் தூதராக இணைந்துள்ளதாக கத்ரினா கைஃப் கூறியுள்ளார்.

பெண்களின் கல்வியறிவு 61 சதவீதமாக உள்ள இந்தியாவில் பள்ளிக்குச் செல்லும் வயது கொண்ட முப்பது லட்சம் பெண் குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல முடியாத நிலையே உள்ளது.

கூகுள் டூடுல் மூலை

ப்பானிய புவிவேதியியல் விஞ்ஞானி கஸ்துகோ சாருஹசியின் 98-வது பிறந்தநாளை முன்னிட்டு மார்ச் 22 அன்று கூகுள் டூடுல் வெளியிடப்பட்டது. அமில மழை, பெருங்கடல்கள் வாயிலாகப் பரவும் கதிரியக்கம், கடல் நீரில் கார்பன் டை ஆக்சைடின் அளவு போன்றவற்றை ஆராய்ச்சி செய்தவர் அவர். விஞ்ஞானியாக 1950-களில் பணியாற்றத் தொடங்கிய அவர், டோக்கியோ பல்கலைக்கழகத்தில் வேதியியலில் பிஎச்டி பட்டம் பெற்ற முதல் பெண்.

ஜப்பான் அறிவியல் கழகத்தின் முதல் பிரதிநிதி. புவிவேதியியல் துறைக்காகத் தரப்படும் மியாகே பரிசை வென்ற முதல் பெண்ணும் கஸ்துகோதான். ஜப்பானிய பெண் விஞ்ஞானிகளுக்காக, சொசைட்டி ஆஃப் ஜாப்பனீஸ் வுமன் சயின்டிஸ்ட்ஸ் ,அமைப்பை 1958-ல் தொடங்கினார். அறிவியல், தொழில்நுட்ப ஆய்வுகளில் பெண்கள் பங்களிக்கும் வண்ணம் அவர்களை ஊக்கப்படுத்துவதற்கான அமைப்பாக இது செயல்பட்டுவருகிறது. நிமோனியாவால் பாதிக்கப்பட்டு 2007-ல் கஸ்துகோ காலமானார்.

இப்படிச் சொன்னாங்க

பிரசவத்தின்போது ஒரு பெண் இறந்து போகலாம். ஆனால், அவளுக்குக் குழந்தைப்பேறு இல்லாமல் போனாலோ இந்தியாவைப் பொறுத்தவரை அவள் அன்றாடம் சாகும் நிலைக்கு உள்ளாக்கப்படுகிறாள்.

- பத்மஸ்ரீ விருதுபெற்ற மருத்துவர் ராணி ரங்க்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x