Published : 18 Mar 2018 10:51 AM
Last Updated : 18 Mar 2018 10:51 AM

முகங்கள்: இதுவும் அவசியம்

வ்வோர் ஊரிலும் ஊருக்காக உழைப்பதற்காகவே சிலர் இருப்பார்கள். அரசின் திட்டங்களை மக்களுக்குக் கொண்டுசேர்ப்பதும் குறிப்பாக, அடித்தட்டு கிராமப்புற மக்களுக்கு உதவுவதும் இவர்களது வேலையாக இருக்கும். திருநெல்வேலிக்கு அருகே உள்ள முன்னீர்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த சுந்தரவள்ளியும் அவர்களில் ஒருவர்.

மத்திய அரசு முன்னெடுத்துள்ள ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் களப்பணியாளரான இவர், அந்தக் கிராமத்தின் அனைத்து வீடுகளிலும் கழிப்பறையை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். இதற்காக மாவட்ட ஆட்சியரிடம் விருது பெற்றிருக்கிறார்.

15tilan_sundaravalli (3)மக்கள் தொண்டு

“இது விஷயமா எங்க கிராமம் மட்டுமில்ல, பக்கத்து கிராமங்களுக்கும் போவேன். எல்லா வீடுகளிலும் கழிப்பறையைக் கட்டுவதுதான் எங்க நோக்கம். ஒவ்வொரு வீடாகச் சென்று கழிப்பறையின் அவசியத்தைப் பத்தி எடுத்துச்சொல்வேன்.

தினமும் காலையிலேயே மக்கள் பயன்படுத்துற திறந்தவெளிக் கழிப்பிடங்களுக்குப் போய், அவங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுற மாதிரி பேசணும். ஆரம்பத்துல எனக்குக் கூச்சமாதான் இருந்தது.

இது எல்லாம் ஒரு வேலையான்னு கேவலமாப் பேசி என்னை பலர் ஏளனம் செய்தாங்க. ஆனால், இதை மக்களுக்கான தொண்டுன்னு நினைச்சதால நான் சோர்ந்துபோகலை” என்கிறார் சுந்தரவள்ளி.

தாலுகா அலுவலகம், ஆட்சியர் அலுவலகம் போன்றவற்றில் மனு தரக் காத்திருக்கும் மக்களுக்கு உதவுவதற்கும் அந்த உதவிகளைப் பெற்றுத் தருவதற்கும் இவர் உதவிவருகிறார்.

விடாமுயற்சியால் பெற்ற வெற்றி

இந்தத் திட்டம் குறித்து விளக்க ஒரு கிராமத்துக்குச் சென்றால், முதலில் அங்குள்ள படித்த இளைஞர்களுக்கும் பள்ளிக் குழந்தைகளுக்கும் விளக்கி, அவர்களை ஒருங்கிணைக்கிறார். பின் அவர்களை அழைத்துக்கொண்டு அன்றிரவு எல்லோரது வீடுகளுக்கும் செல்கிறார்.

15tilan_sundaravalli சுந்தரவள்ளி right

“சிலர் உடனே சம்மதிப்பார்கள். ஏற்றுக்கொள்ளாதவர்களும் உண்டு. அவர்களை மாற்றுவதற்காக இரவு அங்கேயே தங்கி விடிகாலையில் எனது குழுவுடன் திறந்தவெளிக் கழிப்பிடங்களுக்குச் சென்று நிற்பேன்” என்று சொல்லும் சுந்தரவள்ளி, கழிப்பறை கட்டச் சம்மதிக்கிறவர்களிடம் அரசு தரும் மானிய உதவி குறித்துச் சொல்கிறார். அதைப் பெறுவதற்குத் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கவும் உதவுகிறார்.

சில நேரம் இவரே விண்ணப்பம் எழுதிக் கொடுத்தாலும் பலர் அதை அனுப்பாமலேயே வைத்திருப்பார்கள். மானியம் கிடைக்காது என்ற அவநம்பிக்கையில் சிலர் விண்ணப்பத்தை வாங்கவே யோசிப்பார்கள். ஆனால், ஒவ்வொன்றையும் பொறுமையாகச் சமாளித்து, அவர்களைக் கழிப்பறை கட்டவைத்திருக்கிறார் சுந்தரவள்ளி. இதுவரை 450 வீடுகளுக்குக் கழிப்பறை கட்ட உதவியிருக்கும் இவர், தன் கிராமத்தில் கழிப்பறை இல்லாத வீடுகளே இல்லை என்கிறார் பெருமிதத்துடன்.

படங்கள்: லெட்சுமி அருண்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x