சட்டப் போராட்டம்: அமேசான் பழங்குடிகளின் வெற்றி

சட்டப் போராட்டம்: அமேசான் பழங்குடிகளின் வெற்றி
Updated on
2 min read

உலகம் முழுவதும் பழங்குடியினரை அவர்களின் பூர்விக நிலத்தைவிட்டு அகற்றும் வேலையைப் பல அரசுகள் செய்தவண்ணம் இருக்கின்றன. காடுகளின் இயற்கை வளமும் அவற்றில் கொட்டிக்கிடங்கும் கனிம வளமும் அரசு, தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றின் பேராசையைத் தூண்டுகின்றன. பல பெருவணிக நிறுவனங்கள் காடுகளைத் தங்கள் கட்டுக்குள் கொண்டுவர அவற்றில் வசிக்கும்  பழங்குடிகள் தடையாக இருக்கிறார்கள் என்பதால், அவர்களை வெளியேற்றுவதற்காகத் தந்திரமாகப் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன.

ஆனால், அப்படியான தந்திரங்கள் அனைத்தையும் தங்கள் உறுதியால் உடைத்தெறிந்து இருக்கிறார்கள் ஈக்வடாரில் வசிக்கும் அமேசான் பழங்குடியின மக்கள். எண்ணிக்கையில் ஐந்தாயிரத்துக்கும் குறைவான இவர்கள்தாம்,  உலகைத் திரும்பிப் பார்க்கவைக்கும் சட்டப் புரட்சியை நடத்தியிருக்கிறார்கள். தங்கள் மூதாதையர்களின் நிலத்தை ஆக்கிரமித்த எண்ணெய் நிறுவனங்களுக்கு எதிராக இவர்கள் தொடர்ந்த வழக்கில் வெற்றிபெற்றுள்ளனர்.

பழங்குடிகளுக்கே உரிமை

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் வகையில் ஈக்வடார் அரசு தனியார் எண்ணெய் நிறுவனங்களுக்கு அமேசான் காட்டில் வசிக்கும் வோரானி பழங்குடிகளின் மூதாதையர்களின் பூர்விக இடத்தில் கிட்டத்தட்ட நாலரை லட்சம் ஏக்கர் நிலத்தை வழங்கியிருந்தது. இதை எதிர்த்து சில வாரங்களுக்கு முன்பு  மத்திய ஈக்வடார் பகுதியில் அமைந்துள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் தனியார் எண்ணெய் நிறுவனத்தை வெளியேற்றக் கோரி வோரானி பழங்குடியினர் வழக்குத் தொடர்ந்தனர்.

“நாங்கள் இந்த நிலத்தில் பல ஆண்டுகளாக அமைதியான முறையில் வாழ்ந்துவருகிறோம். வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் நடக்கும் போராட்டம்தான் இந்த எண்ணெய் நிறுவனங்களை வெளியேற்றுவதற்கான முயற்சி. எங்களுடைய உரிமைக்காக நாங்கள் நடத்தும் இந்தப் போராட்டத்தில் எங்கள் நிலத்தை ஆக்கிரமித்துள்ள எண்ணெய் நிறுவனங்களை வெளியேற்றியே தீருவோம்” என்றார் வோரானி பழங்குடியினத் தலைவர் நெமொந்தே நென்கிமோ.

ஈக்வடார் நாட்டு சட்டத்தின்படி காட்டு நிலத்தில் தாங்கள் வசிக்க உரிமை உண்டு என்பதைப் பழங்குடிகள் சுட்டிக்காட்டினார்கள். தங்கள் நிலத்தை மற்றவர்கள் ஆக்கிரமிப்பதை அனுமதிக்க முடியாது எனவும் அவர்கள் நீதிமன்றத்தில் வாதிட்டனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, “நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காகப் பழங்குடிகளின் நிலங்களை எண்ணெய் நிறுவனங்களுக்கு விற்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

பழங்குடிகளின் நிலம் அவர்களுக்கே சொந்தம் எனச் சட்டம் சொல்கிறபோது, அரசின் இந்த நடவடிக்கை சட்டத்தை மீறும் செயல். சட்டத்தை மீறும் எந்த நடவடிக்கையையும் ஏற்றுக்கொள்ள முடியாது. வோரானி பழங்குடிகளின் நிலத்தை அவர்களிடமே திருப்பி அளிக்க வேண்டும்” என உத்தரவிட்டார்.

ஈக்வடார் நாட்டில் அமேசான் பழங்குடியினர் 4,800 பேர் வசிக்கிறார்கள். சட்டபூர்வமாக நடந்த நில மீட்புப் போராட்டத்தில் தங்களுக்குக் கிடைத்திருக்கும் வெற்றி, தங்களது நம்பிக்கையை அதிகரித்த உற்சாகத்தில் இருக்கின்றனர் அமேசான் பழங்குடியினர்.

-  அன்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in