

இந்தியாவில் பாலினப் பாகுபாடுகளை எதிர்த்துப் போராடும் பெண்களின் குரலையும், அவர்களின் வாழ்க்கைச் சரிதங்களையும் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஆவணப்படுத்திவருகிறது மும்பையைச் சேர்ந்த ஸ்பேரோ (sparrow) அமைப்பு. தமிழ் எழுத்தாளர் அம்பை என்ற சி.எஸ்.லக்ஷ்மியின் ஒருங்கிணைப்பில் செயல்படும் இந்த அமைப்புக்கு ‘தி ப்ரின்ஸ் க்ளாஸ்’ விருது கிடைத்துள்ளது.
இந்தியாவிலேயே பெண்கள் ஆய்வுக்கான முதல் ஆவண மையம் ஒன்றை ஏற்படுத்த டாக்டர் சி.எஸ். லக்ஷ்மி முன்முயற்சிகளை எடுத்தபோது பெண்களின் அரட்டை மற்றும் கிசுகிசுக்களை ஆவணப்படுத்த வேண்டுமா என்று அரசு அதிகாரிகள் கேலிசெய்தனர்.
பெண்கள் மேலதிக நிம்மதியுடன் வாழ இயலக்கூடிய வகையில் சமநீதி வாய்ந்த சமூகத்தை உருவாக்குவதற்காக உழைத்த பெண் போராளிகளைப் பற்றிய ஆவணங்கள் ஸ்பேரோவில் உள்ளன. பெண்களின் பார்வையில் வரலாற்றைப் பார்ப்பது மற்றும் எழுதுவதையும் ஸ்பேரோ தான் வெளியிட்ட நூல்கள் வழியாகச் சாதித்திருக்கிறது.
நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் நிதி உதவி வாயிலாக சி.எஸ். லக்ஷ்மி, டாக்டர் நீரா தேசாய் மற்றும் மைத்ரேயி கிருஷ்ணராஜ் ஆகியோரை நிறுவன உறுப்பினர்களாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது ஸ்பேரோ. தற்போது இங்கே 11 மொழிகளில் எழுதப்பட்ட 5000 நூல்கள் உள்ளன. அத்துடன் பெண்களின் வாய்மொழிக் கதைகள் ஆடியோ ஆவணமாகச் சேகரிக்கப்பட்டுள்ளன. அத்துடன் பெண்கள் தொடர்பான ஆவணப்பட அட்டவணையும் உள்ளது.
ஸ்பேரோ சார்பாகச் சேகரிக்கப்பட்ட வாய்மொழி வரலாறுகளும் பெண்களின் வாழ்க்கை வரலாறுகளும் ஆங்கிலத்திலும் பிராந்திய மொழிகளிலும் தொடர்ந்து வெளியிடப்படுகின்றன. தமிழில் சொல்லப்படாத கதைகள், பயணப்படாத பாதைகள் என்ற பெயரில் இருநூல்கள் வெளிவந்துள்ளன.
ஆப்ரிக்கா, ஆசியா, தென் அமெரிக்கா கண்டங்களில் கலாச்சாரம் மற்றும் அபிவிருத்திப் பணிகளில் ஈடுபடும் தனிநபர்கள் அல்லது அமைப்புகளுக்காகக் கொடுக்கப்படும் இந்த விருது தங்களுக்குக் கிடைத்தது மிகப்பெரிய கவுரவம் என்கிறார் சி.எஸ். லக்ஷ்மி. “எங்கள் அமைப்பைப் பொறுத்தவரை நிதி ஆதாரம் மிகச் சவாலான பிரச்சினையாகவே இருக்கிறது. அதனால் இந்தப் பரிசுத்தொகை மிகவும் உதவிகரமாக இருக்கும். தற்போதைக்குக் கூடுதலாக வாய்மொழி வரலாறுகளைச் சேகரிக்க உள்ளோம்” என்கிறார்.
ஸ்பேரோ அமைப்பைத் தொடங்கி 25 ஆண்டுகள் ஆகிவிட்டன. 1988-ல் சி.எஸ்.லக்ஷ்மியின் மும்பை வீட்டின் சிறிய அறையில் தொடங்கப்பட்ட இந்த ஆவணக் காப்பகத்துக்குத் தற்போது ஒரு அப்பார்ட்மென்ட் தொகுப்பில் மூன்று தளங்கள் கொண்ட சொந்த அலுவலகம் உள்ளது. குருவி (ஸ்பேரோ) என்ற பெயருக்கு ஏற்ப இந்த அலுவலகத்தின் பெயரும் வைக்கப்பட்டுள்ளது. அதன் பெயர் நெஸ்ட் (கூடு).
குருவியின் பயணம் நீண்டது. இந்தப் பறவைக்கு வானம்தான் எல்லை.