Published : 05 May 2019 09:54 AM
Last Updated : 05 May 2019 09:54 AM

பார்வை: நீங்கள் சொல்லித்தரும் வீரம் பெண்களுக்குத் தேவையில்லை

தமிழ்த் திரைப்பட இயக்குநர் முத்தையா, தான் இயக்கும் படங்களில் சாதி பண்பாட்டையும் வாழ்க்கைமுறையையும் மட்டுமே பதிவுசெய்பவர். அதனால், அவர் சாதியை உயர்த்திப்பிடிக்கிறார், சாதியப் படம் எடுக்கிறார் என்பது போன்ற விமர்சனம் வைக்கப்பட்டதுண்டு. 2019 மே 1 அன்று அவரது ‘தேவராட்டம்’ படம் வெளியானது. படத்தின் பெயரிலேயே சாதிக்குத் தொடர்பிருக்கிறது.

படத்தின் நாயகனாக கவுதம் கார்த்திக் தேர்ந்தெடுக்கப்பட்டது எதேச்சையாக அமைந்ததாகத் தெரியவில்லை. இருந்தாலும் இது  ‘சாதியப் படமல்ல’ என்று சத்தியம் செய்யாத குறையாகச் சொன்னார் முத்தையா. ஆனால், இந்தப் படத்திலும் ஒரு சாதியின் வாழ்க்கைமுறைதான் பதிவாகியிருக்கிறது என்பதோடு ஒரு சாதியைச் சேர்ந்த ஆண்கள் சிலர் வன்முறையாளர்களாக இருப்பதும் அவர்கள் அது தொடர்பாகப் பெருமிதம் கொள்வதும் படத்தில் நியாயப்படுத்தப்படுகின்றன.

பெண் பாதுகாப்புப் பாவனை

வன்முறையைத் தவிர்ப்பதால் நாயகனின் குடும்பத்துக்குத் தீங்கு நடப்பதுபோலவும் வன்முறையால்தான் வெற்றிகொள்ள முடியும் என்று நாயகன் தனது வன்முறைக் குணத்தை எதிர்க்கும் அனைவரையும் ஏற்றுக்கொள்ளச் செய்வதுபோலவும் படம் முடிக்கப்படுகிறது. வன்முறையையும் குற்றம்செய்தவர்களைத் தண்டிக்கும் உரிமையைத் தனிநபர்கள் கையிலெடுத்துக்கொள்வதையும் இவ்வளவு வெளிப்படையாகவும் விரிவாகவும் நியாயப்படுத்திய படங்கள் குறைவு.

இந்தப் படத்தில் தொடக்கம் முதல் அனைத்தும் பெண்களுக்கு எதிரான வையாகவே இருக்கின்றன. பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்களுக்கும் இதர குற்றங்களுக்கும் எதிரான அறச் சீற்றம் கொண்டவனாகக் கதாநாயகன் சித்தரிக்கப் படுகிறான்.

“பெண்களைப் பாதுகாப்பதுதான் ஆண்களின் வீரம்; பெண்களுக்கு எதிரான குற்றங்கள் செய்பவர்கள் கண்டிக்கப்பட வேண்டியவர்கள் அல்ல; கருவறுக்கப்பட வேண்டியவர்கள்” என்ற வாசகங்கள் படத்தின் இறுதிச் செய்தியாக வருகின்றன. ஆனால், படத்தின் வசனங்களும் காட்சி அமைப்புகளும் பெண்களின் பாதுகாப்பு குறித்த இவர்களது அக்கறை வெறும் பாவனைதானோ என்று நினைக்க வைக்கின்றன.

மண்ணும் பெண்ணும் ஒன்றா?

படத்தின் டீஸரிலேயே, “மண்ணைத் தொட்டவனைக்கூட விட்டுவிடுவோம்; பெண்ணைத் தொட்டவனை விடமாட்டோம்” என்ற வசனம் இடம்பெற்று சர்ச்சையானது. பெண்ணுயிரை மண்ணுக்கு இணையாக வைக்கும் இந்த வசனம் அடிப்படையிலேயே தவறானது. அது மட்டுமல்லாமல் ஆதிக்கச் சாதிப் பெண்களைக் காதலித்து மணந்துகொள்ளும் ஒடுக்கப்பட்ட சமூகங் களைச் சேர்ந்த இளைஞர்கள் ஆதிக்கச் சாதியினரால் கொடூரமாகக் கொல்லப் படுகின்றனர்.

அந்தக் கொலைகாரர்களும் கொலைகளை நியாயப்படுத்துபவர்களும் வெளிப்படுத்தும் கருத்துகளும் இதே போன்றுதான் இருக்கின்றன. இப்படிப்பட்ட வசனங்களை வைப்பதும் குறிப்பாக அதை டீஸரில் முன்னிலைப்படுத்துவதும் சமூகத்தில் எத்தகு விளைவை ஏற்படுத்தும் என்பதை இயக்குநர் யோசித்திருக்க வேண்டும். 

பெண்கள் படிப்பது தவறா?

“நாமதான் படிக்காம கூமுட்டையா கெடக்கோமேன்னு பிள்ளைகளைப் படிக்க அனுப்பினா இவனுங்க 400 ரூபா ஜீன்ஸையும் 200 ரூபா டீஷர்ட்டையும் போட்டுக்கிட்டுப் பிள்ளைகள ரோட்டுல நடமாட விட மாட்டேங்கறானுங்க” என்றொரு வசனம் படத்துக்கான முன்னோட்டமாக வெளியிடப்பட்ட காட்சியில் இடம்பெற்றிருக்கிறது.

தர்மபுரி இளவரசன் ஆணவக் கொலை செய்யப்பட்ட நேரத்தில் “ஜீன்ஸும் பேண்ட்டும் கூலிங் கிளாஸும் போட்டுக்கொண்டு மயக்கிவிடுகிறார்கள்” என்று ஒரு சாரார் எழுப்பிய குற்றச்சாட்டை இது நினைவுபடுத்துகிறது. கிட்டத்தட்ட அதே பொருளை வெளிப்படுத்தும் இந்த வசனம், படத்தில் படிக்காத பெண்ணால் சொல்லப்படுகிறது. ‘பெண்களைப் படிக்க அனுப்புவதே ஆபத்து’ என்கிற மோசமான கருத்தும் இதில் வெளிப்படுகிறது.

எதற்குப் பாதுகாப்பு?

பெண்களுக்கு எதிரான பல வசனங்களும் கருத்துகளும் படத்தில் இடம்பெற்றிருக்கின்றன. பெண்களை ஆபாசமாகப் படம்பிடிக்கும் கயவன், “பொண்ணுங்க துப்பட்டா போட்டுக்காம இருக்கறது, நமக்கு ரொம்ப சாதகமாக இருக்குல்ல” என்கிறான். பாலியல் குற்றங்களுக்குப் பெண்களின் ஆடைத் தேர்வு ஒரு காரணியா? வல்லுறவுக் காட்சிகள் தேவைக்கு அதிகமாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.

பெண்கள் மீதான வன்முறையை எதிர்ப்பதாகச் சொல்லிக்கொள்ளும் இந்தப் படம், நகைச்சுவை என்ற பெயரில் ஒரு பெண் கதாபாத்திரத்தின் உருவத்தைக் கேலி செய்கிறது. இவையெல்லாம்கூடப் பெண்களுக்கெதிரான வன்முறைதாம் என்பதை இயக்குநருக்குப் புரியவைக்க படமா எடுக்க முடியும்?

இவை எல்லாவற்றைக் காட்டிலும் ஆண்கள்தாம் தங்களது புஜபலபாரக் கிரமத்தின் மூலம் பெண்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற படத்தின் அடிநாதமான செய்தியே பிற்போக்குத்தனமானது. பாலினச் சமத்துவத்துக்கான  போராட்டங்களைப் பல படிகள் பின்னுக்கு இழுப்பது.

பெண்களை ஆண்கள் பாதுகாக்க வேண்டியதில்லை. எல்லா ஆண்களும் பெண்ணைத் தங்களது உடைமையாக, சாதியைப் பாதுகாக்கும் பெட்டகமாக, பாலியல் பண்டமாகப் பார்க்காமல் சக உயிராக மதித்து கண்ணியத்துடன் நடத்தினாலே போதும். பெண்களை யாரிடமிருந்தும் பாதுகாக்க வேண்டியிருக்காது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x