

வீட்டின் பொருளாதாரப் பிரச்சனை நீங்க வேண்டும் என கோயிலுக்கு விளக்கேற்றப் போனார் சாமூண்டீஸ்வரி. அந்த இடத்தில் உருவான யோசனையை இன்று செயல்படுத்தி வருகிறார்.
தமிழ்நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்கடைகள், பூம்புகார் கண்காட்சி, ஆகியவற்றில் விளக்குகளை விற்பனை செய்து இன்றைக்கு மாதந்தோறும் ரூ.30 ஆயிரம் வரை சம்பாதிக்கிறார்.
கோயம்புத்தூர் கவுண்டம் பாளையத்தைச் சேர்ந்தவர் சாமுண்டீஸ்வரி. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட அவருடைய கணவரின் வலது கையை எடுக்க வேண்டுமென மருத்துவர்கள் தெரிவித்தவுடன் அதிர்ச்சியடைந்த அவர், கணவருடைய கையை காப்பாற்ற ஒன்றரை லட்சம் ரூபாய்வரை கடன் வாங்கினார்.
அதில் ஓரளவு உடல்நலம் தேறினாலும், அவருடைய கணவரால் வேலைக்குச் செல்ல முடியவில்லை.
கடன் சுமை, தொடர் மருத்துவ செலவு, மகனின் படிப்பு செலவு என திக்கற்று தடுமாறிய சாமுண்டீஸ்வரி, கடன் பிரச்சினைக்குத் தீர்வு வேண்டி குனியமுத்தூர் லக்ஷ்மி நாராயணன் கோயிலில் வில்வ காயை உடைத்து விளக்கேற்றி வழிபட்டிருக்கிறார்.
வில்வகாய் மூலம் ஒரு முறை மட்டுமே விளக்கேற்ற முடியும். ஓடு கருகி விடுவதால் அடுத்த முறை விளக்கேற்ற முடியாது. தினமும் வில்வ காய் வாங்கும் நிலையிலும் அவர் இல்லை.
மாற்றாக என்ன செய்வது என யோசித்திருக்கிறார். வில்வ காய் , வெள்ளெருக்கு வேர், பன்னீர், மஞ்சள் ஆகியவற்றை அரைத்துப் பொடியாக்கி, களிமண் கலவையுடன் சேர்த்து சங்கு வடிவில் விளக்காக வடிவமைத்தார்.
அதில் விளக்கேற்றி வழிபட்டார். சங்கு வடிவில் களிமண் அகல்விளக்கைப் பார்த்த பெண்கள், எங்கு வாங்கினீர்கள் என்று கேட்டிருக்கிறார்கள். நானே செய்தது என்று அவர் கூறியவுடன், எங்களுக்கும் இதேபோல் செய்துகொடுங்கள் என்று கேட்டிருக்கிறார்கள்.
முதலில் சிறிய முதலீட்டில் 50 விளக்குகள் செய்து லக்ஷ்மி நாராயணன் கோயிலுக்கு வருபவர்களிடம் விற்றிருக்கிறார். அதற்கு கிடைத்த வரவேற்பை பார்த்து, கணவர் உதவியுடன் தினமும் 100 விளக்குகள் வரை செய்ய ஆரம்பித்தார்.
வில்வ காய் கலவையில் சங்கு வடிவில் அழகாக இருந்த அகல் விளக்கை, பெண்கள் பெரிதும் விரும்பி வாங்கிச் சென்றனர்.
ஆரம்பத்தில் கோவையைச் சுற்றியுள்ள கோயில்களில் மட்டும் விற்பனை செய்துவந்த சாமுண்டீஸ்வரி, தொடர்ந்து சென்னை பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி, வடபழனி முருகன், திருநள்ளாறு சனீஸ்வரன் உட்பட தமிழகத்தின் பல கோயில் கடைகளுக்கு கொடுக்க ஆரம்பித்தார்.
பூம்புகார் சார்பில் திருச்சி, தஞ்சை, திருவாரூரில் நடத்தப்பட்ட கண்காட்சிகளில் வில்வ சங்கு அகல்விளக்கை விற்றிருக்கிறார். இப்போது எங்கே கண்காட்சி நடந்தாலும் அழைப்பு வருகிறதாம்.
மலேசியா முருகன் கோயில், கலிபோர்னியா சிவா விஷ்ணு கோயில் பகுதிகளில் வசிக்கும் தமிழர்கள் என்னிடம் வில்வ சங்கு விளக்கை வாங்கிச் சென்றுள்ளனர் என்றகிறார் சாமுண்டீஸ்வரி.
விளக்கேற்றப் பணம் இல்லாத அவருடைய நிலைமை மாறி இன்றைக்கு பல குடும்பங்களின் பூஜை அறை, கோயில்களில் அவர் தயாரித்துக்கொடுத்த விளக்கால் அவரது வாழ்க்கை சுடர்விட்டுப் பிரகாசிக்கிறது.
எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு இருக்கிறது. அது எதுவென நாம்தான் கண்டுபிடிக்க வேண்டும். சாமுண்டீஸ்வரியைப் போல மாற்றி யோசிப்பது பல நேரங்களில் பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும். நாமும் மாற்றி யோசிக்கலாமே…!
படங்கள்: ஜி.ஞானவேல்முருகன்