

கேமராவுடன் இணைந்த மொபைல் போன்கள் பரவலாக வந்த பிறகு அவற்றை வைத்திருப்பவர்கள் பலரும் ஒளிப்படக் கலைஞர்களாக அவதாரம் எடுத்திருக்கிறார்கள். சென்னை மண்ணடியைச் சேர்ந்த கெய்ஸர் பிர்தௌஸும் தன்னிடமிருந்த கேமரா செல்போனில் வீட்டைச் சுற்றியுள்ள காட்சிகளைப் படமெடுத்தார்.
மனைவியின் ஒளிப்பட ஆர்வத்தைக் கவனித்த அவருடைய கணவர் பிர்தௌஸுக்கு ஆச்சரியப் பரிசாக டி.எஸ்.எல்.ஆர். கேமராவைப் பரிசளித்தார். அதன் பிறகு பிர்தௌஸின் ஒளிப்பட எல்லை வீட்டைத் தாண்டி விரிந்தது.
“என் கணவர் வேலைக்குப் போனதும் வார இதழ்களைப் படிப்பேன். அவற்றில் இருக்கும் படங்கள் பார்க்க எளிமையாவும் அதேநேரம் ஒரு விஷயத்தை அழகாக வெளிப்படுத்துபவையாகவும் இருக்கும். அவற்றைப் பார்த்துத்தான் படம் எடுக்கும் ஆர்வம் ஏற்பட்டது.
ஆர்வத்தைச் சரியான முறையில் செயல்படுத்தச் சொல்லி கேமராவைப் பரிசா கொடுத்தார்” என்று சொல்லும் பிர்தௌஸ், ஒளிப்பட நுணுக்கங்களை ஆன்லைன் மூலம் கற்றுக்கொண்டிருக்கிறார்.
போஸ் கொடுத்த கிளி
தான் எடுக்கும் ஒவ்வொரு படத்துக்குப் பின்னாலும் ஒரு கதை இருப்பதாகச் சொல்கிறார் பிர்தௌஸ். கணவரின் பணிமாறுதலால் வெவ்வேறு ஊருக்குச் செல்லும்போதெல்லாம் தன் கேமராவுக்கு வேலை கொடுத்துவிடுவாராம். “கொச்சிக்குப் போனபோது ஊரே பச்சைப்பசேலென இருந்தது.
நாங்கள் வசித்த இடத்துக்கு அருகே சிறு பூச்சிகள், வித்தியாசமான பறவைகள் எல்லாம் வந்துபோகும். அவற்றைப் பார்த்ததுமே டிஸ்கவரி சேனலில் பணியாற்றுவதுபோல் கேமராவுடன் புறப்பட்டு விடுவேன். சென்னையில் நாங்கள் வசிக்கும் வீட்டின் மாடியில் கிளிக்கும் அணில்களுக்கும் அரிசி வைத்திருப்போம்.
அதைச் சாப்பிட வந்த பச்சைக்கிளியை அட்டைப்பெட்டியில் ஒளிந்துகொண்டு படம் எடுத்ததை மறக்க முடியாது. ஏதோ எனக்காகவே போஸ் கொடுப்பதுபோல் அந்தக் கிளியும் பார்த்தது ஆச்சரியமா இருந்தது” என்கிறார் அவர்.
ரெட்டைவால் குருவி, சிட்டுக்குருவி, நண்டு, சிலந்தி வலை, யானை போன்றவற்றுடன் எழில்கொஞ்சும் இயற்கைக்காட்சிகளும் பிர்தௌஸின் ஒளிப்பட ஆல்பத்தை ஆக்கிரமித் துள்ளன. தான் தொழில்முறை ஒளிப்படக் கலைஞர் இல்லையென்றாலும், தான் எடுத்த படங்களை வைத்துக் கண்காட்சி நடத்த பிர்தௌஸ் ஆர்வமாக இருக்கிறார்.