களத்தில் பெண்கள்: வறுமை விரட்டாத தங்கம்

களத்தில் பெண்கள்: வறுமை விரட்டாத தங்கம்

Published on

திறமை இருந்தும் நிறம், இனம், பொருளாதாரப் பின்புலம் போன்ற காரணங்களால் வாய்ப்புக் கிடைக்காமல் முடங்கிப்போகும் விளையாட்டு வீரர்கள் இந்தியாவில் அநேகர். ஆணுக்கு இப்படியென்றால் பெண்களுக்கோ பெண் என்பதே பின்னடைவாகிவிடுகிறது.

ஆனால், இதுபோன்ற தடைகளையெல்லாம் உடைத்தெறிந்து சரித்திரம் படைத்திருக்கிறார்கள் கோமதி மாரிமுத்துவும் பி.யு.சித்ராவும். சமீபத்தில் நடந்து முடிந்த ஆசியத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இவர்கள் இருவரும் ஆளுக்கொரு தங்கம் வென்று இந்தியாவின் மதிப்பை உலக அரங்கில் உயர்த்திப் பிடித்திருக்கிறார்கள்.

வறுமையும் திறமையும் மட்டுமல்ல; சவால்களும் தடைகளும்கூட இவர்கள் இருவருக்குமே பொதுவாக இருந்தன. எதிர்பாராத விபத்து, தந்தையின் மரணம், பயிற்சியாளரின் இழப்பு என கோமதிக்கு ஏராளமான சிக்கல்கள் என்றால் சித்ராவுக்கோ விளையாட்டு வாழ்க்கையையே முடக்கிவிடுகிற அளவுக்குப் பெரும்சுமை. பி.யு.சித்ரா, கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள முண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர்.

அப்பா, அம்மா இருவரும் கூலித் தொழிலாளர்கள். நான்கு குழந்தைகள் கொண்ட குடும்பத்தில் மூன்றாவது குழந்தை இவர். அரசுப் பள்ளியில் படித்த சித்ராவுக்கு விளையாட்டின் மீது ஆர்வம் இருந்தது. அதைக் கண்டுகொண்ட அந்தப் பள்ளியின் விளையாட்டு ஆசிரியர் சித்ராவுக்கு ஓட்டப் பயிற்சி அளித்தார்.

மறுக்கப்பட்ட வாய்ப்பு

சாப்பாட்டுக்கே வழியில்லாத வீட்டில் பயிற்சியின்போது அணிந்துகொள்ள ஷூவுக்கு எங்கே போவது? 12 வயதில் வெறுங்கால்களோடு ஓடத் தொடங்கினார். வறுமையை வெற்றிகொண்டுவிடும் இலக்கோடு பயிற்சியெடுத்தார். அந்த உறுதியே அவரை வெற்றிக்கோட்டைத் தொடவைத்தது.

மாநில அளவிலான போட்டிகளில் வெற்றிபெற்றதன் மூலம் கிடைத்த பணத்தில் ஷூ வாங்கினார். பல நாட்கள் இரவில் வெறும் வயிற்றோடு தூங்கச் சென்றாலும் மறுநாள் அதிகாலை எழுந்துகொள்ளத் தவறியதில்லை. கிடைக்கிற நேரத்தில் கிடைக்கிற உணவைச் சாப்பிட்டுவிட்டுப் பயிற்சியைத் தொடர்வது சித்ராவின் வழக்கம்.

புவனேஸ்வரில் 2017-ல் நடந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி, சித்ராவின் திறமையை உலகுக்கு உணர்த்தியது. அந்தப் போட்டியில் நீண்டதூர ஓட்டமான 1500 மீ. ஓட்டப் பிரிவில் தங்கப் பதக்கத்தை வென்று கவனம் ஈர்த்தார். வியர்வை வழிய ஒல்லியான தேகத்துடன் அவர் ஓடிவந்த படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

பொதுவாக, இந்தப் போட்டிகளில் வெல்கிறவர்கள்,  அதைத் தொடர்ந்து நடைபெறும் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் நேரடியாகப் பங்குபெறும் வாய்ப்பைப் பெறுவார்கள். சித்ராவும் அந்த நம்பிக்கையில்தான் இருந்தார். ஆனால், அப்போது வெளியிடப்பட்ட வீரர்களின் பட்டியலில் சித்ராவின் பெயர் இல்லை. அந்தப் புறக்கணிப்பு சித்ராவை மட்டுமல்ல; பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவருக்கு ஆதர வாகப் பலரும் குரல் கொடுத்தனர்.

வெற்றியே பதிலடி

உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்குபெறும் தகுதி சித்ராவுக்கு இல்லை என இந்தியத் தடகளத் கூட்டமைப்பு காரணம் சொன்னபோது, கேரள உயர் நீதிமன்றத்தில் சித்ராவின் சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. நீதிமன்றமும் சித்ராவின் பெயரை உலகப்

போட்டியில் பங்குபெறுவோரின் பட்டியலில் சேர்க்கச் சொல்லி உத்தரவிட்டது. ஆனால், அதை உலக சாம்பியன்ஷிப் கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால், அந்தப் போட்டியில் பங்கேற்பது சித்ராவுக்கு கனவாக மட்டுமே நிலைத்தது. அதற்காக அவர் சோர்ந்துவிடவில்லை. இப்போது நடந்து

முடிந்த ஆசியத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் அசாத்திய சாதனை புரிந்து தன் கனவை நனவாக்கிக்கொண்டார். தன்னைக் குறைத்து மதிப்பிட்ட அனைவருக்கும் மகத்தான வெற்றியின் மூலம் பதில் சொல்லியிருக்கிறார் சித்ரா. இந்த வெற்றி செப்டம்பரில் நடைபெறவிருக்கிற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்பதற்கான நுழைவுச் சீட்டை அவருக்கு அளித்திருக்கிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை பணபலம் கொண்டவர்களே விளையாட்டுத் துறையில் கால்பதிக்க முடியும். அவர்களுடைய வெற்றியே அனைத்துத் தரப்பினராலும் கொண்டாடப்படும். எளியவர்கள் சாதிப்பதும் மீறிச் சாதித்தால் அவர்களைக் கொண்டாடுவதும் இங்கே குறைவு. அந்த வகையில் கோமதி, சித்ரா ஆகிய இருவரின் வெற்றி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in