Last Updated : 07 Apr, 2019 11:04 AM

 

Published : 07 Apr 2019 11:04 AM
Last Updated : 07 Apr 2019 11:04 AM

ஆடும் களம் 45: இவர்கள் வருங்காலத் தூண்கள்!

இந்தியாவில் ஒவ்வொரு விளையாட்டிலும் புதுப்புது நட்சத்திரங்கள் உருவாகிவிட்டார்கள். ஒவ்வொரு பத்தாண்டுகளிலும் பல துறைகளில் வீராங்கனைகள் உருவாகியிருப்பதைப் பார்க்க முடிகிறது. இந்தியாவில் பெண்கள் ஆதிக்கம் செலுத்தும் விளையாட்டுகளாக துப்பாக்கிச் சுடுதல், கிரிக்கெட், தடகளம் போன்றவை இருக்கின்றன.

இவற்றில் இயல்பாகவே புதிய வீராங்கனைகள் உருவாகிவிடுகிறார்கள். இவற்றைத் தாண்டி கோல்ஃப், கூடைப்பந்து போன்றவற்றிலும் இன்று பெயர் சொல்லக்கூடிய வீராங்கனைகள் வந்துவிட்டார்கள். தற்போதைய நிலையில் புதிய நட்சத்திரங்களாக உருவெடுத்திருக்கும் சில வீராங்கனைகள் இவர்கள்…

ஷர்மிளா நிகோலட் (கோல்ஃப்)

கோல்ஃப் விளையாட்டின் இந்திய முகம் ஷர்மிளா. ஆண்கள் கோலோச்சும் இந்த விளையாட்டில் புகுந்து புறப்பட்டிருக்கும் புயல். பெங்களூருவைச் சேர்ந்த இவர் பிரான்ஸைச் சேர்ந்த மார்க் நிகோலட்டுக்கும் இந்தியாவின் சுரேகாவுக்கும் பிறந்தவர். 11 வயதில் கோல்ஃப் விளையாடத் தொடங்கிய ஷர்மிளா, 15-வது வயதிலேயே தொழில்முறை கோல்ஃப் வீராங்கனையாக உருவெடுத்தவர்.

புகழ்பெற்ற மகளிர் ஐரோப்பிய டூர் கோல்ஃப் போட்டிக்குத் தகுதிபெற்ற முதல் இந்திய வீராங்கனை. 11 சர்வதேச கோல்ஃப் தொடர்களில் வெற்றிபெற்றுள்ள ஷர்மிளா நிகோலட், 2010-ல் ‘ஆண்டின் சிறந்த கோல்ஃப் வீராங்கனை’ என்ற விருதைப் பெற்றவர். அகாங்க் ஷா சிங் (கூடைப் பந்தாட்டம்)

இந்திய மகளிர் கூடைப் பந்தாட்ட அணியின் கேப்டன் இவர். மல்யுத்த விளையாட்டில் ‘போகத் சகோதரிகள்’போல் கூடைப் பந்தாட்டத்தில் ‘சிங் சகோதரிகள்’ என அழைக்கப்படும் சகோதரிகளில் ஒருவர். கூடைப் பந்தாட்டத்தில் அசத்திவரும் திவ்யா சிங், பிரசாந்தி சிங், பிரதிமா சிங் ஆகியோர் அகாங்க் ஷா சிங்கின் சகோதரிகள்.

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த அகாங்க் ஷா , 2010-ல் கூடைப் பந்தாட்ட லீக்கில் விளையாடி கவனம்பெற்றவர்.  ஆக்ரோஷமாக விளையாடி புள்ளிகள் ஈட்டுவதில் கில்லாடி. புகழ்பெற்ற ஃபிபா கூடைப் பந்தாட்டப் போட்டியில் ஆசிய அளவில் சிறந்த வீராங்கனை என ஆறு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். மேற்கத்திய நாடுகள் கோலோச்சும் இந்த விளையாட்டில், அவர்களுக்கு இணையாக வளர்ந்து, இந்தியக் கூடைப் பந்தாட்டத்தில் அழுத்தமாக தடம் பதித்துவருகிறார் அகாங்க் ஷா  சிங்.

மனு பாகர் (துப்பாக்கிச் சுடுதல்)

16 வயதிலேயே உலகத் துப்பாக்கிச் சுடுதல் அரங்கில் தன் பெயரை அழுத்தமாகப் பதிவுசெய்தவர் மனு பாகர். ஹரியாணாவைச் சேர்ந்த இவர், மூன்று ஆண்டுகளுக்கு முன்புதான் துப்பாக்கிச் சுடும் பயிற்சிக்குச் செல்லத் தொடங்கினார். இன்றோ, துப்பாக்கிச் சுடுதலில்  சூப்பர் ஸ்டார். முதன்முறையாக உலகத் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பங்கேற்று முத்தான முத்திரைகளைப் பதித்தவர் மனு. 2018-ல் மெக்சிகோவில் உள்ள குவாதலஜரா நகரில்  நடைபெற்ற உலகத் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று தன் பெயரை உலகம் முழுவதும் முணுமுணுக்க வைத்தவர்.

குத்துச்சண்டை வீராங்கனையாக விரும்பியவர், கண்ணில் ஏற்பட்ட காயம் காரணமாகத் துப்பாக்கிச் சுடும் போட்டிக்கு மாறினார். உலகக் கோப்பைத் துப்பாக்கிச் சுடும் போட்டியில் மூன்று தங்கப் பதக்கங்கள், காமன் வெல்த்தில் ஒரு தங்கப் பதக்கம், இளையோர் ஒலிம்பிக் போட்டியில் ஒரு தங்கம், ஒரு வெள்ளிப் பதக்கம் என இந்தியத் துப்பாக்கிச் சுடும் போட்டியின் அசைக்க முடியாதவராக மாறிவருகிறார் மனு பாகர்.

ஸ்மிருதி மந்தனா (கிரிக்கெட்)

இந்தியாவில் ஆராதிக்கப்படும் விளை யாட்டு கிரிக்கெட். ஆண்கள் அணிக்கு இணையாக இன்று பெண்கள் அணியும் விளங்கிவரும் நிலையில் இதில் புதிய நட்சத்திரமாக உருவெடுத்திருக்கிறார் ஸ்மிருதி மந்தனா. மைதானத்தில் தொடக்கம் முதலே நாலாபுறமும் பந்தைச் சிதறடித்து எதிரணி பந்துவீச்சாளர்களுக்கு இரக்கம் காட்டாதவர்.

பார்ப்பதற்குத் தென்றலைப் போல இருப்பவர், களத்தில் இறங்கினால் சூறாவளியாக மாறிவிடுவார். ஐசிசி மகளிர் கனவு அணியில் இடம்பெற்ற ஒரே இந்திய வீராங்கனை இவரே.

மும்பையிலிருந்து கிரிக்கெட்டில் காலடி எடுத்துவைத்த இன்னொரு மாஸ்டர் பிளாஸ்டர் இவர். ஆஸ்திரேலியாவின் அதிரடி வீரரான மேத்யூ ஹேடனின் ரசிகையான மந்தனா, அவரைப் போல இடது கை ஆட்டக்காரராக இருக்க வேண்டும் என்பதற்காக வலது கை ஆட்டத்தைத் துறந்தவர். அவரைப் போலவே அதிரடியாக ஆடவும் கூடியவர்.

ஒரு நாள் போட்டியிலும் டி20 போட்டியிலும் சரவெடியாக விளையாடும் மந்தனா, டி20 போட்டியின் துணை கேப்டனாவும் உயர்ந்திருக்கிறார். 2018-ம் ஆண்டில் சிறந்த மகளிர் கிரிக்கெட் வீராங்கனை விருது, சிறந்த டி20 வீரங்கனை விருதையும் வென்றுள்ளார். 22 வயதாகும் மந்தனா, இந்திய மகளிர் கிரிக்கெட்டின் எதிர்காலம்.

தங்கத் தாரகைகள் உருவாகட்டும்!

விளையாட்டுத் துறையைப் பற்றி நினைத்துகூடப் பார்க்க முடியாத பழமை வாதம் இந்தியாவில் ஒரு காலத்தில் இருந்தது. பெண்களுக்கு விளையாட்டு என்பது எட்டாக்கனியாக இருந்த காலம் அது. விளையாட்டுத் துறையில் பெண்களின் பங்கேற்பு குறைவாக இருந்ததற்கு இதுவும் ஒரு காரணம்.

இன்றோ அந்த நிலைமை மாறிவருகிறது. ஆண்கள் விளையாடும் எல்லா விளையாட்டு களிலும் மகளிர் அணிகள் உள்ளன. ஒவ்வொரு விளையாட்டிலும் இன்று இந்தியாவில் புகழ்பெற்ற வீராங்கனைகளை கைகாட்ட முடியும். அப்படியானால், இந்தியாவில் பெண்கள் விளையாட்டில் ஈடுபடுவது அதிகரித்துவிட்டதா என்ற கேள்வி எழலாம்.

40 ஆண்டுகளுக்கு முன்பும் இப்போதும் ஒப்பிட்டால், விளையாட்டுத் துறையில் ஈடுபட்டுள்ள பெண்களின் எண்ணிக்கை கூடிவிட்டது என்பது மறுக்க முடியாத உண்மையே. ஆனால், பெண்கள் விளையாட்டுத் துறைக்கு வருவதற்கு உள்ள தடைகள் இன்னும் முழுமையாக தகர்க்கப்படவில்லை என்பதே யதார்த்தம்.

வீட்டில் ஆண் பிள்ளைகளுக்கு விளை யாடக் கிடைக்கும் வசதிகளும் வாய்ப்புகளும் எல்லாப் பெண் பிள்ளைகளுக்கும் கிடைப் பதில்லை. பெண் குழந்தைகளைப் படிக்கவைத்துத் மணம் முடிப்பதையே  பல பெற்றோர் லட்சியமாக நினைக்கிறார்கள். படிப்பைத் தாண்டி விளையாட்டுத் திறமையோ ஆர்வமோ இருந்தாலும்கூட, அதை எத்தனை பெற்றோர்கள் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்கிறார்கள்?

விளையாட்டுத் துறையில் ஈடுபடுவது என்பது பொருளாதாரத்தோடு சம்பந்தப் பட்டதாகவும் மாறிவிட்டது. விளையாட்டுத் துறையில் பெரிய அளவில் சாதிக்க வேண்டுமென்றால், நல்ல பயிற்சிக்கூடம், திறமையான பயிற்சியாளர், தரமான-சத்தான உணவு என எல்லாவற்றுக்கும் பணமே அடிப்படை.

இதுபோன்ற சூழ்நிலையில் ஆண் பிள்ளைகளின் விளையாட்டுக் கனவை நிவர்த்தி செய்யக் காட்டும் அக்கறையை, பெண் குழந்தைகளிடம் காட்டுவார்களா என்பதும் சந்தேகமே. இதனால், திறமையும் ஆர்வமும் இருந்து நிறைய வீராங்கனைகளின் திறமை மண்ணில் புதைக்கப்படுவதும் கண்கூடு.

இந்தத் தொடரில் இடம்பெற்ற எல்லா வீராங் கனைகளின் வெற்றியின் பின்னணியிலும் அவர்களுடைய பெற்றோர்கள் இருப்பதைப் பார்த்திருக்கலாம். குடும்பத்தின் ஆதரவும் கரிசனமும் இல்லாமல் உயரத்தைத் தொடுவது சிரமம். அதுவும் பெண்கள் விளையாடக் கட்டுப்பாடு விதிக்கும் சமூகச் சூழலில், அந்தத் தடையை உடைத்து வெளியே வரவும் ஆர்வமாக அவர்களை விளையாட அனுமதிக்கவும் பெற்றோரால் மட்டுமே முடியும்.

விளையாட்டில் ஈடுபாடும் ஆர்வமும் உள்ள பெண் பிள்ளைகளைக் காரணங்களை அடுக்கி வீட்டுக்குள்ளே முடக்கும் நிலை மாற வேண்டும். விளையாட்டில் தங்கத் தாரகைகளும் வீரமங்கைகளும் உருவாவது பெற்றோரின் ஆதரவிலிருந்துதான் தொடங்குகிறது. அதை நன்கு உணர்ந்த பெற்றோர்களுடைய மகள்கள்தான் இன்று நாடு போற்றும் வீராங்கனைகளாக உருவெடுத்திருக்கிறார்கள்.

(நிறைவடைந்தது)

கட்டுரையாளர் தொடர்புக்கு:

karthikeyan.di@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x