

பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின் மிகக் கொடூரமான தாக்குதல்களில் ஒன்றான ‘ஜாலியான்வாலா பாக் படுகொலை’ நடந்து நூறாண்டுகள் ஆகிவிட்டன. 1919 ஏப்ரல் 13 அன்று பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸில் உள்ள ஜாலியான்வாலா பாக் தோட்டத்தில் குழுமியிருந்த மக்கள் மீது ஜெனரல் ரெஜினால்ட் டையரின் உத்தரவின் பேரில் கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
படைவீரர்கள் மொத்தமாக 1,650 முறை சுட்டதாக இதுகுறித்து நடைபெற்ற விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. இந்தத் தாக்குதலில் இறந்தவர்கள் 379 பேர்; காயமடைந்தவர்கள் சுமார் 1,100 பேர் என்பது டையர் அளித்த அதிகாரப்பூர்வக் கணக்கு. ஆனால், இந்திய தேசிய காங்கிரஸ் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்துவிட்டதாகவும் 1,500 பேர் காயமடைந்திருப்பதாகவும் கூறியது. இறந்தவர்களில் பெண்களும் முதியோரும் குழந்தைகளும் அடக்கம்.
பிரிட்டிஷ் அரசு பிறப்பித்த ரவுலட் சட்டத்துக்கு எதிராக பஞ்சாபில் தீவிரமான போராட்டங்கள் நடைபெற்றன. அது தொடர்பான கலவரம் ஒன்றில் ஆங்கிலேயேப் பெண் ஒருவர் தாக்கப்பட்டார். இதையடுத்து பிரிட்டிஷ் அரசின் ஒடுக்குமுறை மேலும் வலுவடைந்தது. சத்தியகிரகிகளான சத்யபால், சைபுதீன் கிச்லு இருவரும் கைதுசெய்யப்பட்டனர்.
இதை எதிர்த்து அமைதி வழியில் போராட ஏராளமானோர் ஜாலியான்வாலா பாக்கில் கூடினர். அவர்களும் அன்றைய தினம் சீக்கியர்களின் வைசாகி புத்தாண்டையொட்டி அமிர்தசரஸ் பொற்கோயிலுக்குச் சென்றுவிட்டு ஜாலியான்வாலா பாக்குக்கு ஓய்வெடுக்க வந்தவர்களும்தான் டையர் படையினரின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையானவர்கள்.
கவிதையும் ஆயுதமே
அப்பாவி மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட இந்தப் படுகொலை இந்தியாவில் சுதந்திரப் போராட்டத்தீ வேகமாகப் பரவக் காரணமாக அமைந்தது. காந்தி, ரவீந்திரநாத் தாகூர் ஆகியோர் தங்களுக்கு பிரிட்டிஷ் அரசு அளித்திருந்த விருது பட்டங்களைத் திருப்பியளித்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர். சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற பெண்கள் சிலரும் தீவிரமாக இந்தப் படுகொலையை எதிர்த்துப் பேசினார்கள்.
உத்தரப் பிரதேசத் தலைநகர் லக்னோவில் 1889-ல் அரச குடும்பத்தில் பிறந்தவர் ராஜ்குமாரி அம்ரித் கவுர். இவர் இங்கிலாந்தில் கல்வி பயின்றவர். இந்தியா வந்த பிறகு 1919-ல் காந்தியைச் சந்தித்தார். அவரது சத்தியாகிரகப் போராட்ட பாணியில் ஈர்ப்புகொண்டார்.
அதே ஆண்டு நடைபெற்ற ஜாலியான்வாலா பாக் படுகொலை அவரைச் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்க உந்தித் தள்ளியது. இதையடுத்து இந்தியா முழுவதும் பயணம்செய்து பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகவும் இந்தியா சுதந்திரமடைய வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியும் பிரச்சாரம் செய்தார். சுதந்திர இந்தியாவின் முதல் சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
உத்தரப் பிரதேசத்தின் அலகாபாத்தில் 1904-ல் பிறந்தவர் சுபத்ரா குமாரி சவுகான். இளம் வயதிலேயே சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற இவர், புகழ்பெற்ற இந்திக் கவிஞர். ஜாலியான்வாலா பாக் படுகொலை தன் மனத்தில் ஏற்படுத்திய ரணத்தை ‘ஜாலியான்வாலா பாக் மேய்ன் வசந்த்’ என்ற தலைப்பில் கவிதையாக எழுதினார். அந்தக் கவிதை இன்றளவும் பள்ளிப் பாடத்திட்டங்களில் இடம்பெற்றுள்ளது.
வெட்கத்துக்குரிய வடு
1997-ல் இந்தியாவுக்கு வருகை புரிந்த பிரிட்டிஷ் அரசி இரண்டாம் எலிசபெத், ஜாலியான்வாலா பாக் நினைவகத்துக்குச் சென்று இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தியதோடு அந்தச் சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்தார். சம்பவம் நடந்து 78 ஆண்டுகளுக்குப் பிறகுதான் பிரிட்டிஷ் அரச குடும்பத்திடமிருந்து வருத்தம் தெரிவிக்கப்பட்டது. ‘வருத்தம் தெரிவித்தது போதாது; மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்திவருகின்றனர்.
இப்போது நூற்றாண்டு நிறைவையொட்டி இந்த விவாதம் பிரிட்டிஷ் நாடாளு மன்றத்தில் நடைபெற்றபோது பிரிட்டிஷ் பிரதமர் தெரஸா மே, “ஜாலியான்வாலா பாக் பிரிட்டிஷ் இந்திய வரலாற்றின் வெட்கத்துக்குரிய வடு” என்று கூறி வருத்தம் தெரிவித்திருக்கிறார். அவரும் மன்னிப்பு கேட்கவில்லை.
வரலாற்றைப் பதிவுசெய்தவர்கள்
ஜாலியான்வாலா பாக் படுகொலை பற்றிப் பல்வேறு புனைவு, புனைவல்லாத நூல்கள் வெளியாகியுள்ளன. பஞ்சாபைச் சேர்ந்த ஆங்கில எழுத்தாளர் கிஷ்வர் தேசாய் எழுதிய ‘ஜாலியன்வாலா பாக் 1919: தி ரியல் ஸ்டோரி’ (Jallianwala Bagh 1919: The Real Story) என்ற நூல் கடந்த ஆண்டு வெளியானது. 1919-ல் அமிர்தசரஸில் தீயிட்டுக் கொளுத்தப்பட்ட டவுன் ஹாலின் ஒளிப்படத்தைக் கண்டதாகவும் அதுவே இந்த நூலை எழுதத் தூண்டியதாகவும் தேசாய் கூறியுள்ளார்.
ஜாலியான்வாலா பாக் படுகொலை ஜெனரல் டையர் என்ற ஒற்றை அதிகாரியின் கொடுஞ்செயலாக முன்வைக்கப்படுகிறது. ஆனால், அதே ஆண்டு பிரிட்டிஷ் அரசு அதற்கு முன்பும் பஞ்சாபில் பல கொடுமையான வன்முறைகளை ஏவியுள்ளது. பிரிட்டிஷ் அரசின் தொடர்ச்சியான ஒடுக்குமுறையின் ஓர் அங்கம்தான் ஜாலியன்வாலா பாக் படுகொலை என்பதை இதுவரை அறியப்படாத உண்மைகளை முன்வைத்து இந்த நூலில் தேசாய் விளக்கியுள்ளார்.
ஜாலியான்வாலா பாக் நூற்றாண்டை யொட்டி அந்நிகழ்வைப் பற்றி எழுதப்பட்ட 11 புனைவுப் பிரதிகளை ‘ஜாலியன்வாலா பாக் லிட்ரரி ரெஸ்பான்சஸ் இன் ப்ரோஸ் அண்ட் பொயட்ரி’ (Jallianwala Bagh Literary Responses in Prose & Poetry) என்ற நூலாகத் தொகுத்துள்ளார் டெல்லியைச் சேர்ந்த எழுத்தாளர் ரக்ஷந்தா ஜலீல். சாதத் ஹசன் மண்டோ ஜாலியன்வாலா பாக் படுகொலையைப் பற்றி எழுதிய உருதுக் கதையையும் இன்னும் சில உருதுக் கவிதை களையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து இந்நூலில் அவர் சேர்த்திருக்கிறார்.