Last Updated : 29 Apr, 2019 06:35 PM

 

Published : 29 Apr 2019 06:35 PM
Last Updated : 29 Apr 2019 06:35 PM

நட்சத்திர நிழல்கள் 02: சுதாவின் கனவான இல்லம்

தமிழ் சினிமா வரலாற்றில் தவிர்க்க இயலாத படங்களில் ஒன்று பாலுமகேந்திரா இயக்கத்தில் 1988-ல் வெளியான ‘வீடு’. அகிலா மகேந்திரா எழுதிய கதைக்குத் திரைக்கதை, வசனம் எழுதிய பாலுமகேந்திரா ஒளிப்பதிவு, படத் தொகுப்பு, இயக்கம் ஆகிய பணிகளையும் மேற்கொண்டிருந்தார். தனது சிறு வயதில் தன் தாய் கட்டிய வீடு பற்றிய நினைவுகளின் தாக்கத்தால் இந்தப் படத்தை உருவாக்கியதாக பாலுமகேந்திரா குறிப்பிட்டிருக்கிறார்.

‘வீடு’ படத்தின் பிரதான கதாபாத்திரமான சுதா எனும் வேடத்தை நடிகை அர்ச்சனா ஏற்று நடித்திருந்தார். படத்தின் டைட்டிலிலும் அவரது பெயரே முதலில் இடம்பெறும். செப்டம்பர் 27 அன்று, அனுஷ நட்சத்திரத்தில் பிறந்த சுதா தன் தங்கை இந்து, ஓய்வுபெற்ற பாட்டு வாத்தியாரான தாத்தா முருகேசன் ஆகியோருடன் வாடகை வீட்டில் வசித்துவருகிறார்.

சூட்கேஸைக் கட்டிலுக்குக் கீழே வைத்து அது தெரியாமல் மறைக்கும் அளவுக்குக் கட்டிலின் மீது விரித்திருக்கும் பெட்ஷீட்டைத் தொங்கவிட்டிருக்கும் சராசரியான நடுத்தரவர்க்க வீடு அது.

கட்டலாமா ஒரு வீடு?

பெரிய அளவில் வெளிச்சம் வராத அந்தப் பழங்கால வீட்டில் மூவரும் சுகஜீவனம் நடத்திவருகிறார்கள். சாய்வு நாற்காலியில் தாத்தா ஓய்ந்திருக்கும்போது வரும் தகவல் அந்தக் குடும்பத்தையே ஓயவிடாமல் செய்துவிடுகிறது. வீட்டின் உரிமையாளர் அந்த நிலத்தில் ஃபிளாட் கட்டும் முடிவெடுத்திருப்பதால் அந்த வீட்டைக் காலிபண்ண நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். ஒரு மாதத்துக்குள் வீடு மாறியாக வேண்டிய நிலைமை சுதாவுக்கு ஏற்படுகிறது. ‘டுலெட்’ பலகைகள் தந்த ஏமாற்றத்தின் காரணமாகச் சொந்தமாக வீடு கட்டும் நிலைமைக்குத் தள்ளப்படுகிறாள் சுதா.

தனியார் நிறுவனம் ஒன்றில் சாதாரணப் பணியில் இருக்கும் சுதாவின் மாதச் சம்பளம் 1,800 மட்டுமே. ஆனால், சுமார் ஒரு லட்சத்து இருபத்தைந்தாயிரம் மதிப்புள்ள வீட்டை அவள் கட்டியெழுப்ப வேண்டியதிருந்தது. குருவி தலையில் பனங்காயைச் சுமத்துகிறோமே என்ற எந்தக் குற்றவுணர்வும் காலத்துக்கு இல்லவே இல்லை. சில சுமைகள் மனிதரின் விருப்பத்தைக் கேட்டு அவர்கள் தலையில் ஏறிக்கொள்வதில்லை. அவை தாமாக மனிதரை உரிமை கொண்டாடிவிடும். அப்படித்தான் வீடு கட்டும் பணியும் ஒரு துடுக்கான குழந்தையைப் போல் சுதாவின் இடுப்பில் ஏறி அமர்ந்துகொண்டது.

கூரைப் புடவை கட்டிக்கொள்ளக் காத்திருந்த சுதா தனக்கான கூரையை வேய்ந்துகொள்ள வேண்டிய நிலைமைக்கு ஆளானாள். அவளுடன் பணிபுரியும் அய்யங்கார், ‘வீடு கட்டுவது ஒன்றும் மலையைப் புரட்டும் வேலை அல்ல’  என நம்பிக்கை ஊட்டுகிறார். பணத்துக்கான வழிமுறைகளையும் விலாவாரியாக விளக்குகிறார். வாய் பிளந்து கேட்கும் சுதா சுதாரித்துக்கொள்ளும் முன்பு துணிச்சலாகக் காரியத்தில் இறங்குகிறாள்.

மழை ஒரு தடையா?

தங்கை எனும் குழந்தைக்குத் தாயாக மாறி, தாத்தாவைத் தவிர ஆண் துணையற்ற வீட்டின் தலைமைப் பொறுப்பேற்று நிர்வாகத்தை நடத்திவரும் சுதா, பேருந்து விபத்தில் பெற்றோரைப் பறிகொடுத்தவள். சுதாவுக்கு ஆறுதலாக இருக்கிறான் அவளுடன் பணியாற்றும் கோபி. அவனும் பெரும் செல்வந்தனல்ல. கையிருப்பை வைத்து இரு தங்கைகளுக்குத் திருமணம் முடித்துவைக்க வேண்டிய நிலையில் உள்ளவன்.

இவர்களுக்கிடையேயான காதல் அன்னியோன்யமானது; ஆரோக்கியமானது. சுதாவின் நெருக்கடி நேர ஆலோசனைக்கும் அவள் ஆத்திரங்கொண்டால் அரவணைத்துக்கொள்ளவும் கோபி மட்டுமே இருக்கிறான். ஒருவகையில் அவன் இருக்கும் நம்பிக்கையிலும் சுதா வீடு கட்டத் துணிகிறாள். அவனிடம் சுதா பொருளாதார உதவி எதிர்பார்க்கவில்லை. ஆனால், மன பாரம் கூடும்போது இறக்கிவைக்க உதவும் நெஞ்சத்துக்குரியவனாக கோபி இருக்கிறான்.

வீடு கட்டும் மனையைப் பார்க்க வரும் அன்றே மழை ‘சோ’வெனப் பெய்கிறது. சுதாவின் துயரமும் துளித் துளியாகச் சேர்கிறது. முறையாகப் பூமி பூஜை போட்டு வீட்டின் வேலை தொடங்குகிறது. அஸ்திவாரம் போடும் நாளிலும் மழை தொடர்கிறது. வெள்ளமெனச் சூழப்போகும் துயரத்தில் அவள் மாட்டிக்கொள்ளப் போகிறாள் என்பதைக் குறிப்புணர்த்துவதுபோல் பெய்து தீர்க்கிறது மழை. விவசாயி வாழ்த்தும் மழையை வீடு கட்டுபவர்கள் சபிக்கிறார்கள்.

வீடு கட்டும் நேரத்தில் மழை என்பது வேலைக்கு இடைஞ்சல். அதுவும் ஒவ்வொரு காசாகக் கணக்குப் பார்த்துச் செலவுசெய்யும் இளம்பெண்ணான சுதாவுக்கு அந்த நேரத்திய மழை பெரும் தடைக்கல். தொந்தரவு தருவதில் இயற்கைக்குச் சளைத்தவர்கள் அல்ல மனிதர்கள் என்னும் வகையில் ஒப்பந்ததாரர் நடந்துகொள்கிறார்.

சிமெண்ட்டைத் திருடி விற்கும் ஒப்பந்ததாரரை எதிர்த்துக் கேள்வி கேட்டதால் அவர் வீடு கட்டும் பணியிலிருந்து உடனடியாக விலகிக்கொள்கிறார். விக்கித்துப்போய் நிற்கும் சுதாவுக்கு, அநீதி கண்டு ஆத்திரத்துடன் கேள்வி கேட்ட மங்கா எனும் சித்தாள் கைகொடுக்கிறாள். பெண்ணின் துயரத்தைப் பெண்தான் உணர்ந்துகொள்கிறாள். மங்காவின் ஒத்துழைப்புடன் மேஸ்திரியின் மேற்பார்வையில் தளம், கூரை என வீடு வளர்கிறது.

கைக்கெட்டுமா அந்த வீடு?

முழுமையும் பூர்த்தியாகாவிட்டாலும் ஒதுங்குவதற்கான கூரையாக வீடு நிலைபெற்றுவிட்டத்தைப் பார்த்த சந்தோஷத்திலேயே கண்ணை மூடிவிடுகிறார் தாத்தா. இருந்த ஒரே ஆண் துணையும் கைகழுவிக்கொண்டது. தாத்தா இறந்த துக்கம் கரைவதற்குள் அடுத்த துயரம் சுதா வீட்டுக் கதவைத் தட்டுகிறது. அவள் ஆசை ஆசையாக அலைந்து திரிந்து, நயந்துபேசி பணம் புரட்டி, கடன் பெற்று, மனையின் ஒரு பகுதியை விற்றுக் கட்டிய வீடு அமைந்திருக்கும் மனை மெட்ரோ வாட்டர் நிறுவனம் கையகப்படுத்தப்போகும் நிலம் என்ற குண்டைத் தூக்கிப்போடுகிறார்கள் அந்தத் துறையினர். ஆற்றல்மிகு இடி ஒன்று நடுமண்டையில் நச்சென்று இறங்கியதைப் போல் துடிதுடித்துப் போகிறாள் சுதா.

பஞ்சாயத்தில் அனுமதி வாங்கிக் கட்டிய வீடாயிற்றே ஏன் இப்படி ஒரு நிலைமை? என நிலைகுலைந்துபோன சுதா அந்த அலுவலகத்துக்கு விரைகிறாள். சிறிய லஞ்சத் தொகைக்கு ஆசைப்பட்டுப் பொய்யான அனுமதிச் சான்றிதழ் வழங்கிய அரசு ஊழியரின் ஒற்றைக் காகிதம் சுதாவின் கனவு வீட்டைக் காவு கேட்கிறது. வீட்டைக் காப்பாற்ற நீதிமன்றப் படியேறுகிறாள் சுதா. படம் நிறைவடைகிறது.

எளிமையான வண்ணப்புடவை, மேட்சிங் ப்ளவுஸ், ஹேண்ட் பேக் சகிதமாகப் பக்கத்துவீட்டுப் பெண் போன்று படம் முழுவதும் வலம்வந்த சுதாவின் துயரம் பார்வையாளர்களைக் கலங்கவைக்கிறது. நிம்மதி தரும் என நம்பி வீடு கட்டத் துணிந்த சுதாவின் சின்னச் சின்ன சந்தோஷங்களையும் நிம்மதியையும் வீடே காலி செய்துவிட்டதோ என்னும் கேள்வியை எழுப்புகிறது வீடு.

என்றபோதும், சுதாவின் வாழ்க்கை வழியே அவளைப் போன்ற இளம் பெண்கள் விழிப்புணர்வு பெறுகிறார்கள். வீடு கட்டுவதில் உள்ள சிக்கல்களையும் அவற்றை எப்படி அணுக வேண்டும் என்ற நடைமுறைகளையும் சுதாவின் வாழ்வுச் சம்பவங்கள் நுட்பமாகச் சுட்டிக்காட்டுகின்றன. வீட்டுக்குப் பூஜை போடுவதில் அக்கறைகொள்வதைவிட அனுமதிச் சான்றிதழ் முறையானதா ஒப்பந்ததாரர் ஒழுங்கானவரா போன்ற அம்சங்களையே கவனத்தில்கொள்ள வேண்டும் என்னும் யதார்த்தத்தை உணர்த்தி ஓய்கிறது வீடு.

(நிழல்கள் வளரும்)
கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: chellappa.n@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x