

கூட்டுப்புழு பட்டாம்பூச்சியாக மாறிப் பறப்பதற்கு இடையில் நிறைய பருவங்கள் இருக்குமல்லவா? அப்படித்தான் சிறுமி, பருவப் பெண்ணாகப் பரிணாமம் பெறுவதும் பல்வேறு படிநிலைகளில் நடைபெறும். உடலோடு உளரீதியான மாறுதல்களும் ஏற்படும்.
அதுவரை எந்தச் செயல்பாடும் இல்லாமல் இருந்த இனப்பெருக்க உறுப்புகள், ஹார்மோன்களின் தூண்டுதலால் வளரத் தொடங்கும். பாடப் புத்தகங்களிலேயே இவை பற்றிய தகவல்கள் இருந்தாலும் குழந்தைகள் தங்கள் மனத்தில் எழக்கூடிய சந்தேகங்களை ஆசிரியர்களிடம் கேட்க முடிவதில்லை. ஆசிரியர்கள் சிலர் அதை ஊக்குவிப்பதில்லை.
பெற்றோருக்கும் இது பற்றிய விளக்கங்கள் அதிகம் தெரிந்திராத சூழலில் யார்தான் பெண் குழந்தைகளை வழிநடத்த முடியும்?
ஹார்மோன்களின் வேலை
முதல் மாதவிடாய் வருவதற்கு ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னதாகவே பருவ வளர்ச்சி தொடங்கிவிடுகிறது. பெண் குழந்தைகளுக்கு சுமார் எட்டு வயதாகும்போது மூளையில் உள்ள ஹைபோதலாமஸ் என்ற பகுதியில் இருந்து ஹார்மோன்கள் வெளிப்பட்டு பிட்யுட்டரி சுரப்பிக்குச் செல்லும். இந்த பிட்யுட்டரி சுரப்பியில் இருந்துதான் பருவ வளர்ச்சியைத் தூண்டும் ஹார்மோன்கள் வெளிப்படுகின்றன. இவை கருப்பையின் இரண்டு புறமும் அமைந்துள்ள சினைப்பைக்குப் போகின்றன.
பிறந்ததில் இருந்து லட்சக்கணக்கான முதிர்ச்சி அடையாத முட்டைகள் சினைப்பைக்குள் இருக்கும். பருவ வயதில் சுரக்கும் ஹார்மோன்கள், முட்டையை முதிர்ச்சியடையச் செய்வதோடு கர்ப்பம் தரிப்பதற்கான உடல் வளர்ச்சியையும் தூண்டுகின்றன.
உடல் வடிவத்தில் மாற்றம்
ஆண் குழந்தைகளோடு ஒப்பிடுகையில் பெண்களுக்கு விரைவாகவே பருவ வளர்ச்சி தொடங்கிவிடும். இது எட்டு முதல் 13 வயதுக்குள் நடக்கலாம். ஆனால், தற்போது வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சில குழந்தைகளுக்கு இந்தப் பருவ வளர்ச்சி இன்னும் விரைவாகவே தொடங்கிவிடுகிறது.
ஹார்மோன்கள் சுரப்பதால் இனப்பெருக்க உறுப்புகள் வளர்ச்சியடைவதுபோல் உடலும் வளரும். மறைவிடங்களில் முடி வளரும். மார்பகங்கள் வளர்ச்சிபெறத் தொடங்கும். அதுவரை சிறுமியாக இருந்த உடலமைப்பு இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மாறத் தொடங்கும். இடுப்பு சிறுத்து பெண்ணுக்குரிய உடலமைப்பு உருவாகும். மார்பகங்கள், இடுப்பு, தொடை போன்ற இடங்களில் கொழுப்பு சேர்வதால் இது நிகழ்கிறது.
மார்பக வளர்ச்சியின் தொடக்கத்தில் குழந்தைகளுக்கு வலிக்கும். அந்தக் கட்டத்தில் தெரியாமல் இடித்துவிட்டாலோ கைபட்டாலோகூடச் சில குழந்தைகள் வலியால் துடித்துப்போவார்கள். சில குழந்தைகளுக்கு மார்பக வளர்ச்சி கூச்சத்தை ஏற்படுத்தும். மார்பக வளர்ச்சிக்குப் பிறகு பழைய ஆடைகளை உடுத்தும்போது இழுத்து இழுத்து விட்டுக்கொள்வார்கள். தங்கள் வயதுடைய பெண்களுடன் வளர்ச்சியை ஒப்பிட்டுப் பார்ப்பார்கள்.
சில குழந்தைகளோ தாங்கள் பருவப் பெண்ணாக மாறும் இந்தக் கட்டத்தை ரசிப்பார்கள். கண்ணாடி முன் அதிக நேரம் நிற்பார்கள். பிறர் தன்னையே பார்ப்பதுபோல் தோன்றும். அதுவரை இயல்பாக நிமிர்ந்து நடந்த குழந்தைகளில் சிலர் நிமிர்ந்து நிற்பதைத் தவிர்த்துக் கூன் போடக் கூடும். குடும்பம் சார்ந்த கலாச்சார பின்னணியையொட்டி இந்தக் குழந்தைகள் கூச்சத்துடனேயே இருப்பார்கள்.
பதற்றம் தேவையில்லை
குழந்தைகளின் இந்த எல்லா வகையான மாற்றங்களையும் பெற்றோர் புரிந்துகொள்ள வேண்டும். தேவையில்லாமல் பதற்றப்பட்டுக் குழந்தைகளையும் பதற்றப்படுத்தக் கூடாது. ‘இந்த வளர்ச்சியும் மாற்றமும் இயல்பானவை; தவிர்க்க முடியாதவை. அம்மாவுக்கும் இப்படித்தான் நடந்தது. உன் தோழிகளுக்கும் இதேதான் நடக்கிறது’ எனக் குழந்தைகளிடம் சொல்லலாம். குழந்தைகளின் வளர்ச்சிக்குத் தகுந்தவாறு ஆடைகளை வாங்கித் தரலாம். எடுப்பாகத் தெரியும் மார்பக வளர்ச்சியால் மற்றவர்கள் தன்னை உற்றுப் பார்க்கிறார்கள் என்ற எண்ணம் குழந்தையைப் பாதிக்கும் எனத் தெரிந்தால் ஓரளவு தளர்வான ஆடைகளை அணியச் சொல்லலாம்.
மார்பக வளர்ச்சி இயல்பானது என்று சொல்வதுடன் அதற்கேற்றாற்போல் உள்ளாடை அணிவது குறித்தும் குழந்தைகளைப் பழக்க வேண்டும். இப்போது கடைகளில் பருவ வயதுக் குழந்தைகளுக்கான உள்ளாடைகள் (டீன் பிரா) கிடைப்பதால் அவற்றை வாங்கித் தரலாம். கைகளுக்கு அடியிலும் பிறப்புறுப்புப் பகுதியிலும் முடி வளர்ந்திருப்பதால் அந்த இடங்களைச் சுத்தமாகப் பராமரிக்கக் குழந்தைகளுக்குச் சொல்லித்தர வேண்டும். அவற்றை நீக்குவதும் அப்படியே விடுவதும் அவரவர் விருப்பம். ஆனால், ரேசர் போன்றவற்றைச் சரியாக உபயோகிக்கத் தெரியாவிட்டால் வெட்டுக் காயங்கள் ஏற்பட்டு, கிருமித் தொற்று வரலாம்.
ஹார்மோன்கள் சுரப்பின் பக்க விளைவாகக் குழந்தைகளின் மனத்தில் ஊசலாட்டங்கள் உருவாகும். சிறுமியாக இருந்தவரை அவர்களைத் திட்டியோ அடித்தோ கையாண்டிருக்க முடியும். இப்போது வளர்ந்துவிட்டார்கள். பெரியவர்களைப் பார்த்து நிறையக் கற்றுக்கொண்டு அவர்களைப் போலவே செயல்பட முயல்வார்கள்.
அதேபோல் இதுவரை பிரேத்யேகமாக இல்லாத நட்பு என்ற பந்தம் அதிகமாகும். நண்பர்களோடு அதிக நேரம் செலவிட எண்ணுவார்கள். நண்பர்களின் நடை, உடை, பாவனை, பேச்சு போன்றவற்றை ‘காப்பி’ அடிப்பார்கள். இவற்றையெல்லாம் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
(நலம் நாடுவோம்)
கட்டுரையாளர், மகப்பேறு மருத்துவர்.
தொடர்புக்கு: mithrasfoundation@yahoo.co.in